பாட்னா: பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் எதிர்க்கட்சிகளை திருடர்கள் என குற்றம் சாட்டி வருகிறார்கள். பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்த எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு கேட்க மாட்டோம் என இருவரும் பத்திரத்தில் எழுதி கையெழுத்திடத் தயாரா என ராஷ்ட்ரிய ஜனதா கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது,

“மேற்கு வங்காளத்தில் மமதா பானர்ஜி அரசுக்கு எதிரான பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் குரல் எழுப்பியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஊழல்வாதிகள், திருடர்கள் என பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கூறுகிறார்கள். இந்தக் கட்சிகள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போது திருடர்கள் இல்லையா?
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக கூட்டணியை விட்டு விலகியதும், பிரதமர் மோடியின் கண்களுக்கு ஊழல்வாதி ஆகிவிட்டார். இதே போல் பாஜக கூட்டணியில் இருக்கும் வரை போற்றுவதும், விலகியதும் தூற்றுவதுமாக பிரதமரும் அவருடைய கட்சித் தலைவர் அமித் ஷாவும் பேசி வருவது கண்டிக்கத் தக்கது.
பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, பிரதமர் குறிப்பிட்டுள்ள 23 கட்சிகளுடன் ஆதரவு கோர மாட்டோம் என பத்திரத்தில் எழுதி கையெழுத்து போட்டுத் தர தயாரா?,” என்று தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.