
கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் விடுமுறையான கோடைக்காலம் அது. கல்லூரி இளங்கலை, முதுகலைப் படிப்புகளுக்காக பெற்றோரை விட்டு தற்காலிகமாக பிரிந்து இருந்தவன், வேலை தேடி ஊரை விட்டு நிரந்தரமாகப் போக வேண்டுமே என்று கொஞ்சம் வருத்தத்துடனும் இருக்கிறான். அவன் தந்தைக்கும் அதே நினைவு இருக்கவே, “மகனே, ஒரு மூணு மாதம் எங்களுடன் இருந்து விட்டு, அப்புறமாக வேலை தேடிப் போயேன்,” என்று கிட்டத்தட்ட அவனுக்கே பிள்ளையாக மாறிக் கேட்கிறார்.
இருவரும் ஒரேவித மன நிலையில் இருக்க, அப்பா சொல் தட்டாத பிள்ளையாகிப் போகிறான். அம்மா சமையல், வீட்டில் அரட்டை, அப்பா செல்லம் என நல்லாப் போய்க்கொண்டிருந்தாலும், சில நாட்களிலேயே ஒன்னுமே செய்யாமல் போரடிக்க ஆரம்பித்து விட்டது அவனுக்கு. நண்பர்கள் எல்லோரும் வேலைக்காக ஊரைவிட்டுப் போய்விட, ஒரு பார்ட் டைம் வேலை செய்ய எண்ணினான். ஊரில் உள்ள ஒரு கம்ய்யூட்டர் பயிற்சி மையத்தில் பயிற்சியாளனாக வேலை செய்ய அணுகினான்.
அந்த மையத்தின் மேலாளர், அங்கிருக்கும் பயிற்சியாளர்களுக்கு ஒரு மாதிரி வகுப்பு எடுக்குமாறு பணித்தார். ஒரு நல்ல வெள்ளிக்கிழமை மாலையில், அந்த கம்ப்யூட்டர் பயிற்சி மையத்துக்குள் அடி எடுத்து வைத்தான் இவன். அங்கே பயிற்சியாளர்கள் வரிசையாக அமர்ந்து இருந்தார்கள். “ஜாவா” தொழில்நுட்பம் பற்றி வகுப்பு எடுக்கத் தொடங்கினான் இவன். டேட்டாபேஸ் இணைப்பு பற்றியும் அதற்குரிய நுட்பங்கள் பற்றியும் பேசத் தொடங்கினான்.
அங்கே இருந்தவர்களிலேயே மிகவும் அருமையான பெண் ஒருத்தர் இவனை இடைமறித்து, ஒரு கேள்வியைக் கேட்டார். “What is sun.jdbc.odbc.JdbcOdbcDriver?”. அன்று அந்தக் கேள்விக்கு பதில் சொல்லத் தொடங்கியவனுக்கு, அடுக்கடுக்காக இன்றும் கேள்விகள் வந்து கொண்டே இருக்கிறது. இவனும் சளைக்காமல் சொல்லிக் கொண்டே இருக்கிறான்.
ஆம். அன்று “ஜாவா” தொழில் நுட்பம் பற்றி கேள்வி கேட்டவரே, என் வாழ்க்கைத் துணைவி, காதலி என எல்லாமும் நிறைந்த என் உலகம் ஆகிவிட்டார். அன்று அவர் கேட்ட கேள்வி முதல், இன்று வரையிலும் என்னுடைய வளர்ச்சி அவரால் தான். “ஜாவா” டெக்னாலஜி கேள்வியில் பிறந்த காதல், வளர்ந்து கொண்டிருக்கும் டெக்னாலஜியுடன் சேர்ந்தே பயணிக்கிறது.
“ஜாவா” முதல் “ப்ளாக்செயின்” வரை பல டெக்னாலஜிகள் வளர்ந்து வந்தாலும், ஊரை விட்டு ஊரு மாறி, நாடு விட்டு நாடு கடந்து வந்தாலும் என்னவளின் காதலில் மட்டும் மாற்றம் இல்லை..
காதல் வாழ்க.. காலங்கள் கடந்தும் காதலர்கள் வாழ்க..
இனிய காதலர் தின வாழ்த்துகள்…
– விஜய் செந்தில்