விளைச்சல் அதிகம் தந்த மண்ணுக்கு நன்றி
விடியல் நித்தம் தரும் சூரியனுக்கு நன்றி
வான் தோன்றும் வண்ண வானவில்களுக்கு நன்றி
வான்மீன்களை மின்ன வைக்கும் இரவுக்கு நன்றி
பெருங்கடலை அடக்கியாளும் நிலவுக்கு நன்றி
அருவிக்கு, ஆற்றுக்கு, காற்றுக்கு, ஊற்றுக்கு நன்றி
மழை தரும் மேகங்களுக்கு, இடி, மின்னலுக்கு நன்றி
உயர்ந்து நிற்கும் மரங்கள், மலைகளுக்கு நன்றி
மீனுக்கு பறவைக்கு விலங்குக்கு நன்றி
உயிர்கள் அனைத்திற்கு உலகுக்கு நன்றி
மேசை மீதுள்ள இந்த உணவுக்கு நன்றி
உணவைப் பகிர வந்த எம் உறவுக்கு நன்றி
அமெரிக்காவில் நன்றிசெலுத்தும் நாள் இன்று. முதன்முதலில் ஐரோப்பாவிலிருந்து பிளைமௌத், மஸசூசட்ஸ்க்கு வந்தவர்களுக்கு அமெரிக்க பனி, கடுங்குளிரில் என்ன விவசாயம் செய்வது, என்ன உண்பது, எப்படி வேட்டையாடுவது, என்று தெரியவில்லை.
ஆன்மீக விடுதலை தேடி வந்த இந்த ஐரோப்பியர்களை பில்கிரிம்ஸ் என்பர். இவர்களில் நிறைய பேர் நோய்ப்பட்டு, பட்டினியாலும், கடுங்குளிரின் தாக்குதலாலும் இறந்தனர். அப்போது ஆயிரமாயிரம் ஆண்டுகள் அமெரிக்க மண்ணில் வாழ்ந்த அமெரிக்க பழங்குடி இந்தியர்கள் அவர்களுக்கு எப்படி வேட்டையாடுவது, எப்படி விவசாயம், என்ன பொருட்களை விவசாயம் செய்வதென்று கற்றுக் கொடுத்தனர்.
விளைச்சல் நன்றாக கிடைத்தது. மகிழ்ச்சி அடைந்த ஐரோப்பியர்கள், அமெரிக்க பழங்குடி இந்தியருக்கு நன்றி சொல்ல விருந்து ஏற்பாடு செய்தனர். அந்த முதல் விருந்திலிருந்து தான் இந்த தேங்ஸ்கிவ்விங் துவங்கிற்று. பதினாறாம் நூற்றாண்டில் முதல் விருந்தில் 90 ஐரோப்பியரும் 53 அமெரிக்க பழங்குடி இந்தியரும் கலந்து கொண்டனர். இந்த மூன்று நாட்கள் விருந்து, அக்டோபர் மாதம் நடந்ததாக வரலாறு கூறுகிறது.
“காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது“
என நம் ஆசான் வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னதை, ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னதாக ஐரோப்பியர்களும் கடைப்பிடித்துள்ளனர். அமெரிக்க பழங்குடி இந்தியர்களின் உதவிக்கு, விருந்து படைத்து நன்றி செலுத்தியுள்ளனர்.
பின்னர், இதையே ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளை நன்றி சொல்ல ஒதுக்கி அமெரிக்காவில் தேசிய அளவில் கொண்டாட ஆரம்பித்தனர். அந்த நாளே ஒவ்வொரு வருடமும் நவம்பர் கடைசி வியாழக் கிழமை.
நாம் இந்த மண்ணில் வாழ இயற்கையும், நம்மைச் சுற்றியுள்ள உறவுகளும் பல வகைகளில் நமக்கு உதவுகின்றன.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு“
நம் வள்ளுவரின் இந்த கூற்றிற்கிணங்க, உறவுகள் சூழ, நன்றி பாராட்டி கொண்டாடுவோம். இயற்கை வளங்களை பேணவும் முயற்சிப்போம்.
– புவனா கருணாகரன், யு.எஸ்.ஏ.