இலான்: தைவான் தலைநகர் தைபெய்க்கு 40 கிலோமீட்டர் தொலைவில் நடந்த ரயில் விபத்தில் 18 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 6 பேர் 18 வயதுக்கும் குறைவான இளைஞர்கள். மேலும் 187 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
படுகாயம் அடைந்த ரயில் எஞ்சின் ட்ரைவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து, பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால் இன்னும் அபாயக்கட்டத்தை தாண்டவில்லை. அவர் இயல்பு நிலைக்கு திரும்பும் போது விபத்துக்கான காரணங்கள் தெரியவரக்கூடும்.
எட்டு பெட்டிகளைக் கொண்ட அந்த ரயிலில் 366 பயணிகள் இருந்துள்ளனர். நான்கு பெட்டிகள் தடம் புரண்டதில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. எஞ்சின் அருகே இருந்த பெட்டியில் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது. விபத்துக்கான காரணங்களை கண்டுபிடிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். தடம் புரண்ட பெட்டிகளை ஒரமாக ஒதுக்கிப் போட்டு விட்டு ரயில் பாதையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
தைவானில் 1981ம் ஆண்டு நடந்த விபத்தில் 30 பேர் பலியானார்கள். அதற்குப் பிறகு நடந்த மிகப்பெரிய ரயில் விபத்தாக இது கூறப்படுகிறது. இறந்தவர்களின் உறவினர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும், அதிபர் திசய் இங்-வென் ஆறுதல் தெரிவித்தார்.
– வணக்கம் இந்தியா