பொதுவாக பொங்கல் என்னவோ நான்கு நாட்கள் தான்.ஆனால் டெக்ஸாஸில் நான்கு வாரங்களும் பொங்கல் இனிதே பொங்கிய வண்ணமே உள்ளது.டெக்ஸாஸில் உள்ள சான் அண்டோனியோவிலும் அப்படிதான்!.
மூன்று வாரங்களும் எல்லா தமிழர்களும் ஒன்று கூடியவண்ணமே இருந்தனர். ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் அன்று,இந்து கோவிலில் பொங்கல் பானை வைத்து பொங்கல்! ஜனவரி 21 ஆம் தேதி, நீயா- நானா கோபிநாத் வருகையை ஒட்டி, சான் ஆண்டோனியோவைச் சேர்ந்த திறமைசாலிகளும் பங்குகொண்டு ஒரு விவாத மேடை அரங்கேறியது.
“அமெரிக்கா வந்ததும் அதிகம் மாறியது ஆண்களா ? பெண்களா ?” என்ற தலைப்பில் அலசி ஆராய்ந்து அசத்தி விட்டனர் ! கோபிநாத்தும் விறுவிறுப்பாகவும் , நகைச்சுவையுடனும் நடத்தினார்.
அடுத்ததாக, இந்துக்கோவிலில் உள்ள மஹாலக்ஷ்மி ஹாலில் ஜனவரி 27 ஆம் தேதி,பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சி நடந்தது .பன்னிரண்டு ஆண்டுகளாக சிறப்பாக நடந்து வரும் சான் அண்டோனியோ தமிழ்ப்பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடி தொடங்கி வைத்தனர். சின்னஞ்சிறார்களின் விதவிதமான நடனங்கள், நாட்டுப்புற நடனம், வெஸ்டர்ன் டான்ஸ் என விறுவிறுப்பை கூட்டியது. பெற்றோர்களே பயிற்சியாளர்களாகவும் நடனம் அமைத்துள்ளனர்.
பொங்கல் பற்றி பெரியவர்கள் தான் பேசணுமா என்ன,எனக்கும் தெரியும் என ஒரு சிறுமி மழலையில் அசத்தலான விளக்கம் அளித்தாள். பியானோ இசையும், இன்னிசைப் பாடல்களும் பரவசமடையச் செய்தது.
பல அமெரிக்கத் தமிழர்களுக்கு இன்றைய காலக்கட்டத்தில் மிகப்பெரும் சவாலாக இருக்கும் ’விசா’ பற்றி விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சியும் இடம்பெற்றது. ராம், வள்ளி மற்றும் பலர் எடுத்துரைத்தனர். மேலும், இதற்காக அமெரிக்கப் பாராளுமன்றத்திற்கு கேட்கும் வகையில் அனைவரும் ஒன்றாக ஓங்கி குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மாதந்தோறும் ஒரு முறை சந்தித்து,பிரபல எழுத்தாளர்களின் கதை,இலக்கியம்,கவிதை என விவாதிக்கும், ‘திண்ணை’ என்ற அமைப்பைச் சேர்ந்தோர், டெக்சாஸிலேயே ,முதன் முதலில் தமிழ்ப் புத்தகங்கள் இடமெற்றுள்ள ஒரே நூலகம் , சான் அண்டோனியாவில் தான் உள்ளது என்ற விவரத்தைக் கூறினார்கள்.
ரதநாட்டியமும், சிவதாண்டவமும், பொங்கல் பற்றிய நடனங்களும் தொடர்ந்து களைகட்டியது. தலைவர் ராஜகுருவும், செயலாளர் கார்த்திகேயனும், நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் இணைந்து சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்துதல் ,உணவு பரிமாறுதல் என அனைத்துப் பணிகளையும் இழுத்துப் போட்டு செய்தனர். ‘இளைஞர் சக்தி’ யின் மகத்துவத்தை கண்கூடாக பார்க்க முடிந்தது. இளைஞர்கள் பம்பரமாக சுற்றி வந்தாலே, அங்கு குதூகலம் பொங்குகிறதல்லவா!
ஷீலா ரமணன், டெக்சாஸ்.