காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் எழுந்தருளும் அத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலிருந்தே, அத்தி வரதரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் மக்கள் திரண்டனர்.
மீடியாவில் அத்தி வரதர் பற்றிய செய்திகள் பரவப் பரவ, அத்தி வரதர் தரிசனத்துக்கு தமிழகம் முழுவதிலிருந்து மட்டுமல்ல, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும் மக்கள் குவியத் தொடங்கினர். இதனால் காஞ்சிபுரம் நகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது.
அத்தி வரதர் தரிசனம் தொடங்கி இன்றுடன் 42 நாட்கள் முடிந்துவிட்டன. இன்னும் 4 நாட்களே அத்தி வரதர் தரிசனம் கிடைக்கும் என்பதாலும், தொடர்ந்து விடுமுறை தினங்கள் வருவதாலும் அத்தி வரதரைக் காண முன்பை விட இரு மடங்கு பக்தர்கள் குவிகிறார்கள். இதுவரை 85 லட்சம் பேர் அத்தி வரதரை தரிசித்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கோயில்கள் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கை இது.
நேற்று ஒரே நாளில் சுமார் 4 லட்சம் பேர் வரை அத்தி வரதரை தரிசித்துள்ளனர்.
திணறும் காஞ்சிபுரம்
இதனிடையே, வரதராஜ பெருமாள் கோவிலை சுற்றியுள்ள வீதிகள் அனைத்தும் அடைப்பட்டதால் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு கூட வழி இல்லை எனவும் சாலையை கடப்பதற்கே பாஸ் தேவை என்ற நிலை உள்ளதாகவும் பால் வினியோகம் செய்யக்கூட வழி இல்லாமல் வழிதேடி அலையும் நிலை உள்ளதாகவும் உள்ளூர் வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு மாற்று வழிகளை ஏற்படுத்த அல்லது தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு ஏதேனும் வழி செய்ய வேண்டும் என்று காஞ்சிபுரம் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– வணக்கம் இந்தியா