சென்னை: பேனர்கள், ஃப்ளெக்ஸ் வைத்தால் நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் பேனர் விழுந்து இளம் பெண் மரணமடைந்ததைத் தொடர்ந்து திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் கூறியுள்ளதாவது,
“அ.தி.மு.கவினரின் பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற மற்றுமொரு இளம்பெண் உயிர் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
திமுக கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், ஃப்ளெக்ஸ்கள் வைக்கக்கூடாது என்று பல முறை அறிவுறுத்தியிருக்கிறேன்
பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும், மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது அறவே நிறுத்தப்பட வேண்டும்.
இந்த அறிவுரையை யாரேனும் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நான் பங்கேற்கும் நிகழ்ச்சியாகவோ, கூட்டமாகவோ இருந்தால் அதில் நான் பங்கேற்க மாட்டேன்,” என்று கூறியுள்ளார்.
உண்மையிலேயே திமுகவினர் இதைக் கடைப்பிடித்தால், சொன்னது போல் ஃப்ளெக்ஸ் வைத்திருக்கும் நிகழ்ச்சிகளை மு.க.ஸ்டாலின் பங்கேற்காமல் தவிர்த்தால், தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் கொஞ்சம் துளிர் விடும் என்று நம்பலாம்.
-வணக்கம் இந்தியா