இந்த அறிவிப்பை சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால், எல்லா டீக்கடைகளிலும், முடித்திருத்தும் நிலையங்களிலும் பார்க்க முடியும். மேலோட்டமாக பார்த்தால் இது ஏதோ அபாய எச்சரிக்கை போலிருந்தாலும், உண்மையில் இந்த அறிவிப்பு பல விஷயங்களை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. பேசாதீர்கள் என்று சொல்லப்படும் போதே அது அங்கு பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பொருள்படும். டீக்கடையோ அல்லது முடிதிருத்தும் நிலையமோ, அது கருத்துக்கள் களமாடுவதற்கான ஒரு தளமாகவே இருந்தது என்று சொல்லுவது மிகையாகாது..
தகவல் தொடர்புகள் மிகவும் குறைவான அக்காலத்தில்,செய்தித்தாள்களும், வானொலிகளும் தவறாமல் இருக்கும் ஒரே இடம் மேற்சொன்ன இடங்கள் தான். செய்திகளை அறிந்துகொள்வதற்காகவே, டீக்கடைகளை நோக்கி காலையில் மக்கள் படையெடுத்தார்கள். அங்கு டீயோடு செய்தியும் பகிரப்பட்டது. நாளடைவில் அது செய்தியாக மட்டும் நின்றுவிடாமல் விவாதங்களாக உருவெடுத்தது. விவாதங்களின் வழி தங்கள் பட்டறிவை (ஏட்டறிவை அல்ல) பகிர்ந்து கொண்டார்கள்.
அதன் வழி அறிவும் வளர்ந்தது. விவாதங்களின் முக்கிய கரு பெரும்பாலும் அரசியலாகவே இருந்தது. கற்றறிந்த மக்களுக்கும், கட்சிசார் தொண்டர்களுக்கும் அரசியல் அறிவை வளர்த்தெடுக்க நூலகங்களும், படிப்பகங்களும் மற்றும் பாசறைகளும் இருந்தது என்றால், சாமானியனின் அறிவை டீக்கடைகளும், முடிதிருத்தும் நிலையங்களுமே வளர்த்தெடுத்தன. அதன் வழி கலகங்கள் நேர்ந்தது உண்மையானாலும், கலகங்கள் வழியே பல தீர்வுகளும் வந்தடைந்தன.
சமீபத்தில் ஒரு டீக்கடைக்கு சென்றபோது நான் கண்ட காட்சி உண்மையில் வித்தியாசமாக இருந்தது. முதலில் “அரசியல் பேசாதீர்கள்” என்ற பெயர்ப்பலகை எங்கும் இல்லை. . டீயை பெற்றுக்கொண்டவுடன் அவரவர்கள் தங்களை செல்போனில் பிஸியாக விட்டார்கள். செல்போனில் பேசிக்கொண்டிருந்தவர்களை விட “வாட்சப்”-ஐ நோண்டிக்கொண்டு இருந்தவர்கள் தான் அதிகம். கடைசியாக அங்கு எந்த பேச்சுவார்த்தையும் விவாதமோ இல்லை.
இந்த காட்சி பல செய்திகளை சொல்லுவதாக அமைந்துவிட்டது. செய்திகளுக்காக யாரும் அங்கு வரவில்லை. அது பலதளங்களில் இருந்தும் அவர்களின் கையடக்கத்தில் விழுந்து கிடக்கிறது. யாரும் அருகில் இருந்தவனுடன் பேசத் துணியவில்லை. தொலைவில் இருந்தவுடன் பேச எந்த தயக்கமும் இல்லை. தகவல்தொடர்பு தொலைவில் இருந்தவர்களை அருகில் கொண்டுவந்து விட்டது. அருகில் இருந்தவர்களை தூரமாக்கி விட்டது. இன்று நாம் பொதுவெளியில் பேசுவதை விட செயலி வழியே தான் அதிகம் பேசுகிறோம்.
இது முற்றிலும் உண்மையும் கூட. இன்று குடும்பங்களுக்குள் பேசுவதற்குக்கூட வாட்சப் குழுக்கள் உள்ளன. அங்கு தான் அனைத்து விஷயங்களும் அலசப் படுகின்றன, ஆராயப்படுகின்றன, முடிவெடுக்கப்படுகின்றன. சுருக்கமாக சொல்லப்போனால் இந்த தகவல் தொழில்நுட்ப காலத்தில் டீக்கடைகளாகவும், முடிதிருத்தும் நிலையங்களாகவும் இந்த குழுக்களே உள்ளன. எதையும் இங்குதான் பேசித்தீர்க்க வேண்டிய கட்டாயம் நம்மை அறியாமலேயே நம்மை சூழ்ந்து விட்டது. ஆனால் உண்மையில் நடப்பது என்ன?. தூரம் இருந்தவர் அருகில் வந்துவிட்டாலும் நாம் அமைத்துக்கொண்ட புதிய திரைகள் அந்த தூரத்தை ஏதொவொரு வகையில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றன.
கடந்த 20 வருடங்களில் நடுத்தரவர்க்கம் தன்னை உயர்நடுத்தர வர்க்கமாக உயர்த்திக்கொண்டது . அதற்குப் பல காரணங்கள் உள்ளன, படிப்பு, வேலைவாய்ப்பு என. சுருக்கமாக சொல்லவேண்டுமானால், நடுத்தர வர்க்கம் அடுத்தவேளை உணவுக்காக உழைப்பதை தாண்டி வந்துவிட்டது. இந்த நிலையில், அதாவது தனது அடிப்படை தேவைகள் நிறைவேறி போனப்பின், இயல்பாகவே ஒரு சாமான்யனுக்கு சமூகம், அரசியல் பற்றிய கவலை தானாகவே அமைந்துவிடுகிறது. இது இயற்கையும் கூட. ஆனால் தன் சுயதேவைகளை தேடி ஓடிய ஓட்டத்தில் இந்த நடுத்தர வர்க்கம் தனக்கான ஒரு சமூகப் பார்வையையும், குறைந்தபட்ச அரசியல் அறிவையும் வளர்த்துக்கொள்ள தவறிவிட்டது என்பது கசப்பான உண்மை.
இந்த நிலையில் அதன் சமூகப் பங்களிப்பும், அரசியல் நிலைப்பாடும் பெரும்பாலும் தவறாகவும், பெரும் விளைவுகளையும் உண்டாக்குவதாகவும் (சொல்லப்போனால் உண்டாக்கிக்கொண்டும்) உள்ளது. இதைவிட வருத்தம் அளிப்பது அது தன் அறியாமையை இன்னும் உணராமல் இருப்பது தான். தன் அறிவை வளர்த்துக் கொள்ளும் அனைத்து வாயில்களையும் அடைந்துவிட்ட இந்த சமூகம் இப்படித்தான் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வாயில் தான் இன்றைய டீக்கடைகளான வாட்சப் குழுமங்கள். ஆனால் அங்கு இன்று நாம் பார்ப்பது “இங்கு அரசியல் பேசாதீர்கள்” என்ற பலகையைத் தான்.
“Change Management” என்ற பதம் இன்றைய நடுத்தரவர்க்கம் அதிலும் தகவல் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் பெரிதும் பயன்படுத்தும் பதம் இது. அதன் முக்கிய கூறு – “If you are not ready to change, you can’t change anything” – அதாவது, நீங்கள் மாற்றத்திற்கு தயாராக இல்லாத போது உங்களால் எதையும் மாற்ற முடியாது. சுருங்க சொன்னால் – நீங்கள் மாறாதபோது, இங்கு எதுவும் மாறாது. எந்த மாற்றமும் நம்மில் இருந்துதான் தொடங்கவேண்டும். சமூகத்தை, அரசியலை மாற்ற புறப்பட்ட எத்தனையோ இளையோர் தோற்றுப்போனதற்க்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். அதே எண்ணம் கொண்ட பலரும் செயலில் இறங்கமுடியாமல் இன்று இருப்பதற்கும் இது ஒரு அதிமுக்கியமான காரணம்.
இந்த மாற்றத்தை நம்மில் எப்படிக் கொண்டு வரமுடியும். முதலில் ஏட்டறிவு. நிறைய படிக்க வேண்டும். படிக்க நேரமில்லாதவர்கள் படித்தவர்களின் பேச்சை கேட்க வேண்டும். அடுத்தது தான் மிக முக்கியமானது.நாம் படித்ததை, கேட்டதை ஆராய வேண்டும். விவாதிக்க வேண்டும். கேள்வி கேட்க வேண்டும். பின் தெளிவு பெற வேண்டும்.
முதல் இரண்டு விஷயங்கள் கைகூடினாலும், நாம் கோட்டை விடுவது மூன்றாவதில் தான். நமக்குள் நம்மையறியாமல் நாமே போட்டுக்கொண்ட மனத்தடைகள்தான் காரணம். நம்மை பொருத்தவரை நாம்பேசக்கூடாத விஷயங்கள் என்று பலதை வைத்திருக்கிறோம்.
சாதி, பதின்பருவ உணர்வுகள், பெண்பிள்ளை சம்மந்தப்பட்ட விஷயங்கள், கடைசியாக, முக்கியமாக அரசியல். மனதைத் தொட்டு சொல்லுங்கள். எத்தனை குடும்பங்கள் சாதியை பற்றி விவாதிக்கின்றன. எத்தனை குடும்பங்கள் அரசியலைப் பற்றி விவாதிக்கின்றன. குடும்பங்களில் இதைப் பற்றிப் பேச முடியாத ஒருவனால், எந்த மாற்றத்தை உண்டாக்கிவிட முடியும்?. அடிப்படையை விட்டுவிட்டு நாம் கட்டும் எந்த கோட்டையும் நிறைவு பெறாது. மாற்றத்தை நம்மிலிருந்து, நம் குடும்பங்களிலிருந்து தொடங்குவோம். நமக்கு நாமே போட்டுக்கொண்ட மனத்தடைகளை விளக்குவோம்.
இனி எங்கும் அரசியல் பேசுவோம். வாருங்கள்…
– அப்பாஸ் இஷாக்