ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்திப் பத்திரிக்கையின் செய்தியாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சந்தன் திவாரி என்ற செய்தியாளர், ஆஜ் தினசரி இந்திப் பத்திரிக்கைக்காக ராஞ்சியில் பணியாற்றி வந்தார். அவருக்கு பல தடவை கொலை மிரட்டல் வந்து கொண்டிருந்தது. இது குறித்து ஏப்ரல் மாதமே காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால் பாதுகாப்பு வழங்கப்பட வில்லை.
இந்நிலையில் திங்கட்கிழமை இரவு வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டுள்ளார். பின்னர் அவர் படுகாயங்களுடன் பால்தர் வனப்பகுதியில் போலிசார் கண்டெடுக்கப் பட்டுள்ளார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
ஆஜ் பத்திரிக்கையின் ஆசிரியர் அமித்குமார் அகர்வால், “ உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகஏப்ரல் மாதமே போலீசாரிடம் புகார் அளித்தும், பாதுகாப்பு வழங்கவில்லை. குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்க வேண்டும். சந்தன் திவாரியின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும். பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமையாகும்,” என்று கூறியுள்ளார்.
பாஜக ஆட்சி செய்யும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அக்கட்சியைச் சார்ந்த ரகுபர் தாஸ் 2014 டிசம்பர் மாதம் முதல் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
– வணக்கம் இந்தியா