
சூரத் விமான நிலைய விரிவாக்கத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, அந்த விழாவுக்குத் தொடர்பு இல்லாத ஒரு தகவலைச் சொல்லியுள்ளார். டிமானிடைசேஷனால் வீடுகள் விலை குறைந்துள்ளதாம். இளைஞர்களுக்கு குறைந்த விலையில் வீடுகள் கிடைக்கிறதாம். இளைஞர்களையே கேட்டுப்பாருங்கள் என்று சொல்கிறார்.
பாஜக ஆட்சியில் ஒன்னேகால் கோடிக்கும் மேலான வீடுகள் கட்டியதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் வெறும் 25 லட்சம் வீடுகளே கட்டப்பட்டதாகவும் கூறியிருக்கிறார் பிரதமர். இந்தப் புள்ளிவிவரங்கள் எந்த அளவுக்கு சரியானது, அரசு கட்டிய வீடுகளை மட்டுமே சொல்கிறாரா என்ற தகவல்கள் இல்லை.
அப்படியே இருந்தாலும் நான்கு ஆண்டுகளில் ஒரு கோடி வீடுகள் நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ளதால் விலை குறைந்து விட்டதா? டிமானிடைசேஷனால் ரியல் எஸ்டேட் தொழிலில் கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தி விட்டோம் என்கிறார் பிரதமர்.வீடு வாங்கல் விற்றலில் ரொக்கப் பரிவர்த்தனை முற்றிலும் தடுக்கப் பட்டுவிட்டதா என்ன? கருப்புப் பணம் வருவதே ரொக்கப் பரிவர்த்தனையில் தானே!.
எல்லாவற்றிற்கும் மேலாக ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை இரண்டிலும் வீழ்ச்சி என்றால் அடுத்த அட்டாக் பொருளாதார வீழ்ச்சி தான். இது உலகப் பொருளாதார நியதி. பிரதமரே வலிந்து போய் வீடு விலை எல்லாம் குறைஞ்சிடுச்சி என்கிறாரே. அப்படியென்றால் தற்போது வீட்டுக்கடன் வாங்கி வீடு வாங்கியவர்கள் நிலை என்ன? வீட்டு மதிப்பு கடனை விட குறைந்தால் வங்கிகள் என்ன செய்வார்கள். வீட்டுக்காரர்களை கடனை திருப்பிச் செலுத்தச் சொல்லி வற்புறுத்த மாட்டார்களா?
டிமானிடைசேஷனால் சிறு குறு தொழில்கள் பாதிப்பு அடைந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த கண்கூடான விஷயம். பிரதமர் பேசிய சூரத் நகரம் பெரும் பாதிப்புக்குள்ளாகியது. போராட்டம் எல்லாம் நடைபெற்றது. கூடவே வந்த ஜிஎஸ்டியால் சிறு குறு நிறுவனங்களின் நடப்பு முதலீட்டிற்கும் சிக்கல் ஏற்பட்டு ஏராளமான நிறுவனங்கள் மூடப்பட்டது.
ஒரு வேளை, வீடு விலை குறைந்துள்ளது என்று பிரதமர் சொன்னது உண்மை என்றால் பொருளாதார தேக்க நிலையை நோக்கி நாடு போய்க் கொண்டிருக்கிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறாரா பிரதமர்?.
2007- 2008ல் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சிக்கு முழுமுதல் காரணமாக அமைந்தது வீட்டு விலை வீழ்ச்சி தான். வங்கிக்கடன்களை அது பாதித்தது, அடுத்ததாக ஆட்டோமொபைல் வணிகத்தையும் பாதித்து, பங்குச் சந்தையில் தொடர் வீழ்ச்சியாகி, நிலைமை கட்டுக்கு அடங்காமல் போனது. ஒபாமாவின் முதல் நான்கு ஆண்டு கால ஆட்சி பொருளாதாரத்தை சீர்படுத்தவே போதவில்லை.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலை ஏற்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கிறது. ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டிருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி குறைந்ததாக இல்லை. வீட்டு விலை குறைந்து விட்டது என்ற பிரதமரின் பேச்சை நம்பி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தை திரும்ப எடுக்காமல் இருக்க வேண்டும்.
வீட்டு விலை வீழ்ச்சி, அதுவும் 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், மிகவும் அபாயகரமான பொருளாதார வீழ்ச்சியின் முதல்படி என்பதை உலக முதலீட்டாளர்கள் நன்றாகவே அறிவார்கள்.
1990 களில் தங்கத்தை அடகு வைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட்டது போல் ஒரு பொருளாதார வீழ்ச்சியை இந்தியா மீண்டும் சந்திக்காது என நம்புவோம்!
– ஆர்.டி.எக்ஸ்.