வாஷிங்டன்: அமெரிக்காவின் உறுப்பினர்கள் அவையில் HR 1044 என்று எண்ணுடைய மசோதா 365 ஆதரவு : 65 எதிர்ப்பு என்ற வாக்குகள் வித்தியாசத்தில்அடிப்படையில் நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்த மசோதா சட்ட வடிவம் பெறும் போது, ஒவ்வொரு நாடுகளுக்கும் ஆண்டுக்கு இத்தனை எண்ணிக்கை என்ற க்ரீன்கார்டுகளுக்கான வரையறை நீக்கப்பட்டு முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும்.
10 முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக க்ரீன்கார்டுகளுக்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். உறுப்பினர்கள் அவையில் இரு கட்சியினரும் சேர்ந்து தாக்கல் செய்த மசோதாவாக நிறைவேற்றப்பட்டது.
இதற்கு இணையான S-386 மசோதா செனட் அவையில் நிறைவேற்றப்பட்டு, இரு மசோதாக்களும் ஒன்றாக இணைத்து சட்டவடிவமாக அதிபர் ட்ரம்பின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ட்ரம்ப் ஒப்புதல் அளித்த உடன் சட்டமாக நிறைவேற்றப்படும். விரைவில் நிறைவேற்றப்பட்டு அதிபர் ஒப்புதல் கிடைத்து விட்டால் செப்டம்பர் 30ம் தேதி முதல் அமலுக்கு வரும். அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் 2020 நிதியாண்டில் நடைமுறைப்படுத்தப்படும்
செனட் அவையின் மசோதாவில் ஹெச்1 பி விசாக்களுக்கான சீர்திருத்தங்களும் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. அதன்படி ஹெச்1 பி விசா விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு கிடுக்கிப் பிடி போடும் வகையில் மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. . அதிபர் ட்ரம்ப் ஹெச் 1 பி விசாவில் முறைகேடுகள் நடக்க விடாமல் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று பதவியேற்றது முதலாகவவே கூறி வருகிறார்.
செனட் அவையிலும் இரு கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ள மசோதா, ஹெச் 1 பி விசா சீர்திருத்தங்களுடன் விரைவிலேயே வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப் படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. செனட்டர்களுக்கிடையே S-386 மசோதா தொடர்பான உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே மசோதா தாக்கல் செய்யப்பட்டதும் நிறைவேறுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.
அதிபர் ட்ரம்ப் பரிந்துரைந்தபடி ஹெச்1 பி விசா கட்டுப்பாடுகளும் இடம் பெற்றுள்ளாதால் அதிபரின் ஒப்புதலும் கிடைத்து விடும் என்று நம்பப்படுகிறது.
இந்த க்ரீன்கார்டு சீர்திருத்த மசோதா நிறைவேறுவதற்காக இமிக்ரேஷன்ஸ் வாய்ஸ் என்ற தன்னார்வ அமைப்பு அவை உறுப்பினர்கள், செனட்டர்களிடம் நீண்டகாலமாக ஆதரவு திரட்டி வந்தார்கள்.
– வணக்கம் இந்தியா