சென்னை: சமீபத்தில் நடந்த புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யா, மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்..? எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான ஆலோசனைகளை, மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், என அனைவருமே ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள் என கூறியிருந்தார்.
சூர்யாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. பல்வேறு தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரம் சூர்யாவின் இந்த பேச்சு குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோர் கடுமையாக எதிர்கேள்விகளை முன்வைத்து இருந்தனர். கல்விக்கொள்கை பற்றி சூர்யாவுக்கு என்ன தெரியும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியிருந்தார்.
சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்து இருந்தார். இவ்வாறாக நடிகர் சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் எழுந்தன.
சூர்யா பதிலடி
இந்த நிலையில், தனது கருத்து மீது எழுந்த விமர்சனங்களுக்கு நடிகர் சூர்யா பதிலடி கொடுத்துள்ளார். நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கல்வி என்பது ஒரு சமூக அறம், பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. நம் நாட்டில் கல்வியானது ஏழைகளுக்கு ஒன்றாகவும் வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது. அப்படிப்பட்ட மனசாட்சிதான் அனைவருக்கும் சமமான தேர்வு என்பதை விட ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளுக்கும் சமமான தரமான இலவச கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று வலியுறுத்துகிறது.
அகரம் பவுண்டேஷன் மூலம் 3 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர். நீட் தேர்வுக்கு பிறகு அரசு பள்ளியில் படித்த ஒருவர் கூட அகரம் பவுண்டேஷன் மூலம் மருத்துவ கல்வியில் சேர்க்க முடியவில்லை. புதிய கல்விக்கொள்கையில் அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுக்கு பரிந்துரை இருப்பது அச்சமூட்டுகிறது. உயர் கல்வியில் இருந்து கிராமப்புற மாணவர்களை நுழைவுத் தேர்வுகள் துடைத்து எறிந்து விடும்.
சமமான தேர்வு வைப்பதைவிட சமமான தரமான இலவசக் கல்வியை உறுதி செய்வது அரசின் பொறுப்பு. நம் நாட்டில் கல்வி என்பது ஏழைகளுக்கும் ஒன்றாகவும் வசதி படைத்தவர்களுக்கும் ஒன்றாகவும் இருக்கிறது. சமமான வாய்ப்பு மற்றும் தரமான கல்வி மறுக்கப்பட்ட சக ஆயிரக்கணக்கான மாணவர்களின் நிலை அறிந்த சக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன். கல்வியை பற்றி பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற எதிர்கருத்து வந்தபோது ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி என் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் நன்றி .
புதிய கல்விக்கொள்கை வரைவு பற்றி ஆக்கப்பூர்வமான கருத்துக்களை இணையதளத்தில் கூறுங்கள். மத்திய அரசும் அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுகோள் வைக்கிறேன். ஏழை மாணவர்களுக்கு கல்வியே உயரப்பறப்பதற்கான சிறகு. அது முறிந்து போகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அனைவரின் பேரன்புக்கும், பேராதரவுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!!🙏🏽 #NEP #AgaramFoundation @agaramvision #தேசியகல்விகொள்கை #NationalEducationPolicy pic.twitter.com/IpBaZYx9tH
— Suriya Sivakumar (@Suriya_offl) July 20, 2019
– வணக்கம் இந்தியா