ஏர்டெல், வோடஃபோன் ஆகிய செல்போன் நிறுவனங்கள் சேவைக் கட்டணத்தை 42 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பிறகு இந்தியாவில் செல்போன் சேவைக் கட்டணங்கள் அதிரடியாக குறைக்கப்பட்டன. வாடிக்கையாளர்களை ஈர்க்க ஜியோ நிறுவனம் பல்வேறு சலுகைத் திட்டங்களை அறிவித்தது. அதைத் தொடர்ந்து வேறு வழியின்றி ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்தன.
இந்நிலையில், அண்மையில் வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு 92 ஆயிரத்து 641 கோடி ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இருப்பினும் அந்நிறுவனங்கள் கட்டணத்தைச் செலுத்த 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, அடுத்து 5ஜி சேவைக்காக மிகப்பெரிய அளவில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் தொலைதொடர்பு நிறுவனங்கள் உள்ளன. மேலும், செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் வோடஃபோன் நிறுவனம் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாயும், ஏர்டெல் நிறுவனம் சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாயும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. இந்நிலையில், அந்நிறுவனங்கள் கட்டண உயர்வை அறிவித்துள்ளன.
அதன்படி, ஏர்டெல் நிறுவனம், இணையதள டேட்டா மற்றும் கால் செய்யும் அன்லிமிடெட் திட்டத்தில் 28 நாட்களுக்கான கட்டணத்தை 129 ரூபாயிலிருந்து 148 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதேபோல் ஓர் ஆண்டுக்கான திட்டம் ஆயிரத்து 699 ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 398 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வோடஃபோன் நிறுவனம் 28 நாட்களுக்கான கட்டணத்தை 179 ரூபாயிலிருந்து 299 ரூபாயாகவும், ஓராண்டு கட்டணத்தை ஆயிரத்து 699 ரூபாயிலிருந்து இரண்டாயிரத்து 399 ரூபாயாக உயர்த்திள்ளது. இந்த கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலாகிறது.
இதேபோல வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் டேட்டா மற்றும் அழைப்பு சலுகைகளை வழங்கி வந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் சமீபத்தில் மற்ற நிறுவனங்களின் எண்களுக்கு கால் செய்ய நிமிடத்திற்கு 6 காசுகள் என இணைப்புக் கட்டணத்தை விதித்திருந்தது. இந்நிலையில், மீண்டும் 40 விழுக்காடு வரை கட்டணங்களை ஜியோ உயர்த்த உள்ளதாகவும் இது டிசம்பர் 6 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.
தற்போது சூழல் முற்றிலும் மாறிவிட்ட நிலையில், வரும் காலங்களில் தொலைபேசிக் கட்டணம் மேலும் உயருமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-வணக்கம் இந்தியா