டல்லாஸ் : இந்தியாவின் பிரம்மாண்டமான படைப்பாக வெளிவந்துள்ள 2.0 படத்தின் சிறப்புக் காட்சிகளை அமெரிக்க ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை, க்ரேட் ரஜினி ஃபேன்ஸ், யு.எஸ்.ஏ. சார்பில் டல்லாஸ் இர்விங் நகரில் சிறப்புக் காட்சி கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இது வரையிலும் அமெரிக்காவில் இல்லாத வகையில் மிகப்பெரிய பேனர் வைத்து, கார்களில் ஊர்வலமாக தியேட்டருக்குச் சென்றுள்ளார்கள். எல்இடி விளக்குகளுடன் கூடிய பிரத்தியேக உடையுடன் ரோபோ போல் காட்சி தந்தார் ரஜினி வாசு.
வார மத்தியில் புதன்கிழமை என்ற போதிலும், பெண்கள், குழந்தைகள் என குடும்பமாகச் சென்றுள்ளார்கள். பார்த்து விட்டு வந்த அனைவரும் படம் பிரம்மாண்டம், மாஸ், தலைவர் கலக்கல் என பெருமையுடன் கூறிச் செல்கிறார்கள். அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்த குழந்தைகள் கூட மீண்டும் தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் அடம் பிடிக்கிறார்கள். 3D தொழில்நுட்பத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிட்டி அவதாரம் பேசு பொருளாக மாறியுள்ளது.
2.0 படம் இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்டம் என்றாலும், ரஜினி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்காவில் 1000க்கும் மேற்பட்ட ப்ரீமியர் காட்சிகளுடன் அட்டகாசமாக வெற்றி நடைபோடுகிறது. வார இறுதியில் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
– வணக்கம் இந்தியா