ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே பதவி விலகினார்.. 40 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.. - VanakamIndia

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே பதவி விலகினார்.. 40 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது..

ஹராரே: ஜிம்பாப்வே நாட்டில் 40 ஆண்டுகளாக அதிபராக இருந்த ராபர்ட் முகாபே பதவி விலகியுள்ளார். 1980ம் ஆண்டு இங்கிலாந்திடமிருந்து நாடு விடுதலை வாங்கிய நாள் முதலாகவே முகாபே தான் அதிபராக இருந்து வந்துள்ளார். தனக்குப் பிறகு தன் மனைவி அதிபராக வரவேண்டும் என்று முகாபே விரும்பினார்.

அதற்கு இடையூறாக இருந்த துணை அதிபராக இருந்த எமர்சன் மனன்காக்வாவை பதவி நீக்கம் செய்தார். மனன்காக்வா அதிபர் ஆவார் என்று மக்கள் எதிர்ப்பார்த்து இருந்த வேளையில், முகாபேயின் இந்த செயல் மக்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

ஆங்காங்கே மக்கள் போராட்டங்கள் தொடங்கியது. இந்நிலையில் கடந்தவாரம் ராணுவம் முகாபே வை வீட்டுச் சிறையில் வைத்தது. முகாபே அதிகார துஷ்பிரயோகம் செய்து அதிபர் பதவியை மனைவிக்கு மாற்ற முயற்சிக்கிறார் என்று ராணுவம் குற்றம் சாட்டியது.

முகாபேவின் ஜிம்பாப்வே ஆப்ரிக்க தேசிய யூனியன் பேட்ரியாட்டிக் கட்சியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். வரும் ஞாயிற்றுக் கிழமைக்குள் அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கெடுவையும் கட்சி விதித்தது.

செவ்வாய்கிழமை காலை, முகாபே தனது ராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார். சபாநாயகர் அந்த கடிதத்தை வாசித்து ‘ முகாபே பதவி விலகியுள்ளதாக’ தெரிவித்தார்.

இந்திரா காந்தி காலம் முதலாகவே இந்தியாவுடன் முகாபே நல்லுறவு கொண்டிருந்தார். ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியினரும் இந்தியாவுடன் அதிகமான போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். ஜிம்பாப்வே மாணவர்களும், சென்னை உட்பட, இந்தியாவில் அதிக அளவில் படித்து வருகின்றனர்.

அடுத்த ஜிம்பாப்வே அதிபர் யார் என்று இன்னும் அறிவிக்கப்பட வில்லை. துணை அதிபர் மனன்காக்வா தான் அதிபராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது

– வணக்கம் இந்தியா செய்திகள்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!