Will Rajini politics bring change in Tamil Nadu?

மாற்றத்தை ஏற்படுத்துமா ‘ரஜினி அரசியல்’?

பொதுவாக இடைத் தேர்தல் என்றால் ஆளும்கட்சிதான் எப்போதும் வெற்றி பெறும் என்பதுதான் காலம்காலமாக நாம் கண்டுணர்ந்த உண்மை. முதல் முறையாக கட்சி இல்லாமல், அறிமுகமான சின்னம் இல்லாமல் தினகரன் என்கிற தனி மனிதர் வெற்றி பெற்றிருக்கிறார். பணத்தை வைத்து ஓட்டை விலைக்கு வாங்கிவிட்டார். நாங்கள் அசந்த நேரம் பார்த்து ஆட்டையக் கலச்சுபிட்டார் என்று ஆளுங்கட்சி பொங்குவதை நாம் கணக்கில் எடுத்துக்க முடியாது!

சர்வ ‘அதிகாரங்களும்’கையில் வந்திருந்தும் ஆளும்கட்சி தோற்கிறது என்றால், மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதே ஆர்.கே.கே நகர் தேர்தல் சொல்லும் உண்மை. ஒரு தொகுதி மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் அதையே விரும்புகிறது.

இப்படியொரு நெருக்கடியான அரசியல் சூழ்நிலையில், தவம் போல காத்திருந்து தனது அரசியல் அஸ்திரத்தை எடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 1996 லிருந்து ஒவ்வொரு தேர்தலின் போதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் அரசியல் பிரவேசம் இப்போது நடந்தேறியிருகிறது. ரசிகர்கள், மாற்றுத் தலைமையை விரும்புகிற மக்கள் இதை வரவேற்றுப் பட்டாசு கொளுத்திக் கொண்டாடுகிறார்கள். வேறு சிலர் விமர்சனங்களை அள்ளி வீசுகிறார்கள். பட்டும் படாமல் சில அரசியல் தலைவர்கள் துண்டுபோட்டு இடம்பிடிக்கவும் செய்கிறார்கள்.

தனது திரைப்படங்களில் அவ்வப்போது அரசியல் கருத்துகளைப் பேசி வந்த ரஜினி. ஜெயலலிதா ஆட்சியின் போது அதிகார துஷ்பிரயோகங்களைக் கண்டு கொதித்துபோய் நேரடியாக அரசை விமர்சிக்கத் தொடங்கினார். ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் பகுதியிலேயே ரஜினியின் வீடும் இருந்ததால் நேரடியாக சில நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்தது. அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தால் என்னவாகும் என்பது பற்றித் துளியும் கவலைப்படாமல் வெளிப்படையாகவே, “இந்த அரசு தொடர்ந்தால் இனி ஆண்டவனால் கூட தமிழ் மக்களை காப்பாற்ற முடியாது,” என்று அறிக்கை விட்டதும் அன்றைய தமிழக அரசியல் களம் பரபரப்பாகவும் புத்துணர்ச்சியுமாய் விளங்கியது.

திராவிடக் கட்சிகளின் ஊழல்களும் அதிகாரமும் வன்முறைப் போக்குக்கும் முடிவு கட்ட, ரஜினி அரசியலில் குதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுக்க அவரது ரசிகர்களும் பொதுமக்களும் ரஜினியை ஆரவாரத்துடன் வரவேற்றனர். ஜி.கே. மூப்பனார், சோ மாதிரியான அரசியல் ஆளுமைகளின் அறிவுரையும் வழிகாட்டுதலும் இருந்ததால் நிச்சயம் ரஜினி தனிக்கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு மாறாக சூப்பர் ஸ்டார் கட்சி ஆரம்பிக்காமல் தள்ளிப்போட்டுவிட்டு, திமுக – தமாக கூட்டணிக்கு தனது அரசியல் ஆதரவைத் தெரிவித்துவிட்டு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினர்.

ஆனால், அன்றிலிருந்து ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிக பெருமக்களின் குரல்கள் ஒலித்துக்கொண்டுதான் இருந்தது. விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது எங்கே இவருக்கு டெப்பாசிட்கூட கிடைக்காது என்று பேசிய விமர்சன குரல்கள்தான் அதிகம் இருந்தன. அதனை மாற்றியமைத்து விஜயகாந்த் அரசியலில் ஒரு தனி இடத்தைப் பிடித்தார். ஆனால் அவரது அரசியல் வியூகமும் கூட்டணி அமைப்பதில் எடுத்த தவறான முடிவுகளாலும் நினைத்த அளவிற்கு வெற்றியை எட்ட முடியவில்லை. அதேபோல் வலுவான அரசியல் திட்டங்களோ ஆட்சி மாற்றத்திற்கான சிறந்த திட்டங்களும் இல்லாததால் பத்தோடு பதொனொன்றாக போய்விட்டார்.

இன்று, ரஜினியின் அரசியல் அறிவிப்பு சில அரசியல் கட்சி தலைவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கவே செய்கிறது. திருமாவளமன் மாதிரியான அரசியல்வாதிகளில் ஒரு சிலர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஆதரித்தாலும், ”மக்கள் பணி ஆற்றாத இவர் புதிதாக என்ன செய்யப்போகிறார்,” என்ற விமர்சன குரலையே கேட்க வேண்டியிருக்கிறது.

இதுபோலத்தான் எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோதும் விமர்சனத்தை எதிர்கொண்டார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் அத்தகைய விமர்சனங்களை தனது அரசியல் செயல்பாட்டினால் தூள் தூளாக்கி பல சட்டமன்றத் தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்று தொடர்ந்து பல வருடங்கள் முதலமைச்சராக விளங்கினார் என்பதும் நம் கண் முன்னே நிற்கும் வரலாறாகும்.

சிறப்பான திட்டமிடல்களைச் செய்தால் சூப்பர் ஸ்டாரும் அரசியிலில் கில்லியாகி நின்று ஜெயிக்கலாம். அதற்கு வாய்ப்பாக இன்றைய தமிழ்நாட்டின் அரசியல் சூழல் விளங்குகிறது. அதிமுக வில் பொருத்தமான தலைவர்கள் இல்லாததும், திமுக வின் வாரிசு அரசியலும் மற்றும் தொடர்ந்த அரசுகளின் ஊழல் கணக்குகளையும் பார்த்த மக்கள் நிச்சயம் ஒரு மாற்று அரசியலை எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பது உண்மைதான்.

ரஜினியின் அரசியல் வருகை நிச்சயம் மாற்றத்தை உண்டு பண்ணும் என்பதில் சந்தேகமில்லை. ஊரெங்கும் மக்களிடைய ரஜினிக்கு பெரும் வரவேற்பு இருப்பதாகவே தெரிகிறது.
மற்ற நடிகர்களைப்போல ரஜினி நேற்று அரசியல் பேசி இன்று ஆட்சியைப் பிடிக்க நினைப்பவரில்லை. அதனால்தான், அரசியல்வாதிகள் கொஞ்சம் பதைபதைப்பாகவே இருக்கின்றனர் என்பது அவர்கள் உதிர்க்கும் கருத்துக்களிலிருந்தே விளங்குகிறது.

இன்னும் ரஜினி தனது அரசியல் கொள்கைகளையோ திட்டங்களையோ வெளியிடாவிட்டாலும் மக்கள் அவரின் வருகையை நம்பிக்கையோடு வரவேற்கிறார்கள். இன்னும் சொலப்போனால், பொய்க்கால் குதிரைகள் செய்யும் ஆட்சியின் அழகைப் பார்த்து வெறுத்துப்போன பாமரமக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்பது உண்மையே.

தமிழக மக்கள் பம்மாத்து இல்லாத, பகட்டான, அதிகாரமற்ற தலைவனை எப்போதும் ஆதரிப்பார்கள் என்பதற்கு காமராஜர் முதல் அண்ணாதுரை வரை அவர்களின் தேர்வை நாம் பார்க்கும்போது ரஜினியின் எளிமையான குணம் நிச்சயம் ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

அரசியில் அறிப்பு செய்யும்போது, “ஆன்மீக அரசியலை நடத்த விரும்புகிறேன்,” என்று ரஜினி சொல்லியிருப்பது கொஞ்சம் விமர்சனத்தை எழுப்பியிருக்கிறது. “அவர் பிஜேபியோடு இணங்கிப்போய்விடுவாரோ,” என்று விமர்சிக்கப்படுகிறது. ஆன்மீக அரசியல் என்பதை, ஊழலற்ற அதிகார வன்முறையற்ற அரசை நிறுவ வேண்டும் என்ற நோக்கிலேயே சொஎன்னதாக ரஜினி ஆதரவாளர்கள் விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள். நாத்திக கொள்கை பேசிய அரசுக்கு மாற்றாக ஒரு நல்லரசை நிறுவ வேண்டும் என்ற நோக்கிலேயே ‘ஆன்மீக அரசு’ என்ற பதத்தை உபயோகப்படுத்தியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இத்தகைய பரப்பரப்பான சூழ்நிலையில் ரஜினியும் அவரது ஆதரவாளர்களும் தங்களுடைய ரசிகர் மன்றங்களை ஒருநிலைப்படுத்தி அரசியல் களத்தில் ஈடுபடுவதற்கான பயிற்சியை அளிக்க வேண்டும். அகங்காரமற்ற தெளிவான மனிதர்களைத் தேர்தெடுத்தாலே பாதி பாரம் குறையும். ரஜினி தமிழ்நாடு முழுக்க சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு மக்களின் உண்மையான பிரச்னைகளைக் கண்டறிந்து தனது கட்சி கொள்கைகளை திட்டமிடுதலே சரியாக இருக்கும். அந்தந்த துறையின் சிறப்பு வாய்ந்த இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வருவதும் ரஜினிக்கு சாதமாக இருக்கும். எதுவாகிலும் இன்றைய காலகட்டத்தில் ரஜினியின் அரசியல் வருகை தமிழ்நாட்டு அரசியல் போக்கில் மாறுபாட்டை நிச்சயம் ஏற்படுத்தும் என்பது காலம் சொல்லும் கணிப்பு.

– வீகே சுந்தர்

Will Rajini politics bring change in Tamil Nadu? Here is an analysis.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!