Will Rajini fill the vacuum by Jayalalitha

ஜெயலலிதா சமூக நீதி காத்த வீராங்கனை!.. அப்போ, ரஜினி சமூகநீதி காக்கும் ‘மாவீரன்’?

“அரசியலில் உழைப்பு மட்டும் வெற்றியைத் தராது.. சரியான நேரம் வரவேண்டும்”

விஜயகாந்த் முதல் முறை எம்.எல்.ஏவாக தேர்தெடுக்கப்பட்ட போது அது பற்றி, அப்போதைய முதல்வர் கருணாநிதியை பக்கத்தில் வைத்துக் கொண்டு ரஜினிகாந்த் இப்படிச் சொன்னார். அவர் சொல்லி 11 ஆண்டுகள் கழித்து 12ம் ஆண்டு நெருங்கும் வேளையில், குறிஞ்சிப்பூ போல் ரஜினியின் அரசியல் வருகை அமைந்துள்ளது.

ஆம், தமிழக அரசியலில் ரஜினி போன்றவர்களின் வருகை எப்போதாவது நடக்கும் அதிசயம் தான். எந்தக் கட்சியிலும் இல்லை, ஆனால் கடந்த 23 ஆண்டுகளாக தமிழக அரசியலில் அவர் இருக்கிறார். சரியான நேரத்தில் வருவேன் என்பது அவரது சினிமா டயலாக். ஆனால், அந்த வசனத்திற்கு உண்மையான அர்த்தம் வந்து விட்டது.

தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவும் நேரத்தில், இருக்கும் அரசியல் தலைவர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்ட சூழலில், நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகிறார். டெலிப்ராம்டர் இல்லை, எழுதி வைத்த பேப்பர் கண் முன்னே இல்லை.. மனசிலிருந்து நேரடியாக 15 நிமிடம் பேசினார்.

மக்கள் புத்திசாலிகள். உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகள் எது, எழுதிக் கொடுத்தவர்களின் வார்த்தைகள் எது என்று சுலபமாக கண்டுபிடித்து விடுவார்கள். பிரதமர் மோடி டெலிப்ராம்டர் உபயோகிக்கிறார் என்பது M.R.S ஒபாமா என்று மிசஸ் ஒபாமாவை சொன்ன போது தான் தெரிந்தது. மாணவ பருவத்திலேயே அரசியலுக்கு வந்து விட்ட திமுக செயல் தலைவர் இன்னும் பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு தான் பேசுகிறார். அவருக்கு எழுதிக் கொடுத்தவரின் தவறையும் சேர்த்துப் பேசிவிடுகிறார்.

அதனால் தான் என்னவோ ரஜினியின் 15 நிமிட மடை திறந்த பேச்சு, அனைவருக்கும் பிடித்துப் போய் விட்டது. முக்கியமாக அவரிடம் எழுப்பப்படக்கூடிய அனைத்து கேள்விகளுக்கும் ஆணித்தரமாக முன் கூட்டியே சொல்லிவிட்டார். ரஜினியின் தீர்க்கமான பேச்சால் முக்கிய கட்சிகள் கலங்கிப் போய் உள்ளது தெரிகிறது. பெயரளவில் வாழ்த்துகள் வந்துள்ள போதிலும், ரஜினியின் தாக்கம் எப்படி இருக்கும், அதை எப்படி முறியடிக்கலாம் என்ற மந்திராலோசனைகள் நடைபெறத் தொடங்கியுள்ளன.

ரஜினியின் வருகையை ஜஸ்ட் லைக் தட் ஆக, கடந்து செல்ல எந்தக் கட்சியும் தயாராக இல்லை. ஆகவே அவர் மீது இந்துத்துவா விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பாஜகவின் ஸ்லீப்பர் செல் என்றெல்லாம் அள்ளித் தெளிக்கிறார்கள். இருக்கத் தானே செய்யும்!.. தங்கள் அணியை தோற்கடிக்கக்கூடியவர் ஒருவர் வந்தால், அவரை வீழ்த்தும் வியூகம் அமைப்பது இயல்பு தானே..

ஆனால் இவர்கள் ஒன்றை மறந்து விட்டுப் பேசுகிறார்கள். கடந்த காலத்தில் திமுக பாஜகவுடன் கூட்டு வைத்ததே. அப்போது திமுக மதவாத சக்தியாகி விட்டதா?. இப்போதும் 2ஜி வழக்குக்காக பாஜகவுடன் திமுக குடும்பத்தின் முக்கிய புள்ளி பேரம் என்றெல்லாம் கூறப்படுகிறதே!. ஒருவேளை திமுக பாஜகவுடன் கூட்டு வைத்தால் இவர்கள் என்ன சொல்வார்கள்?

ரஜினியைப் பொறுத்தவரை ’சாதி மதம் இல்லாத’ ஆன்மீக அரசியல் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். ஆனால் ஆன்மீகம் என்ற வார்த்தைக்கு ஆளாளுக்கு ஒரு அர்த்தம் கற்பித்து ரஜினி மீது இந்துத்வா சாயம் பூசுகிறார்கள்.பிரபல மூத்த பத்திரிக்கையாளர் கதிர் ‘ஆன்மீகம் என்றால் வாழு வாழ விடு’ என்ற எளிய தத்துவத்தைக் கூறியுள்ளார். ஆன்மீகம் என்றால் தூய்மை என்று சிலர் கூறியுள்ளார்கள். எதுவானாலும் ஆன்மீகம் என்பது மதம் இல்லை என்று தெளிவாக அனைவருக்கும் புரிகிறது. ஆனாலும் எதிரணியினர் விடுவதாக இல்லை.

இந்த களேபரங்களுக்கு மத்தியில் சமூக வலைத்தளத்தில் ஒரு வாக்குவாதத்தை காண நேரிட்டது. அதில் ‘ ராமர் கோவில் கட்ட செங்கல் அனுப்புன ஜெயலலிதா ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ ஆகும் போது, எப்போதுமே ஆன்மீகவாதியாக இருந்து வரும் ரஜினி ‘சமூக நீதி காக்கும் மாவீரன்’ ஆக முடியாதா?’ என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதானே!. ஜெயலலிதா இருக்கும் வரையிலும் இந்துத்துவாவும் மோடி கூட்டமும் தமிழகத்தை நினைத்துப் பார்க்க முடிந்ததா? லேடியா மோடியா? என்று இந்தியா முழுக்கவும் அவர் குரல் ஒலித்ததே. அரசியலில் தற்போது ஜெயலலிதாவின் இடம் தான் காலியாக உள்ளது, கருணாநிதியின் இடத்திற்கு மு.க.ஸ்டாலின் வந்து விட்டார். ஜெயலலிதா போல், அவர் இடத்தை நிரப்ப வரும் ரஜினியும் ஏன் ‘சமூக நீதி காக்கும் மாவீரன்’ ஆக முடியாது? நல்ல கேள்வி தான்..

நீங்க வாங்க ரஜினி சார். வெல்கம் டூ தமிழ்நாடு பாலிடிக்ஸ்..

– ஸ்கார்ப்பியன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!