தமிழகப் பிரச்சனைகளுக்கு கட்சிகள் ஒன்று சேர்வது எப்போது? தமிழருவி மணியன் கேள்வி!

சென்னை: கர்நாடகா மாநிலம் போல் தமிழக பிரச்சனைகளுக்காக, தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து போராடும் காலம் எப்போது என்று தமிழருவி மணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“மாநில அரசின் பாடத் திட்டத்தில் +2 படிப்பை முடித்து மிகுந்த மதிப்பெண்களைப் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் கிராமப்புறத்து மாணவர்களின் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தனித் தனியாக அறிக்கைகள் விடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் பயனற்றுப் போன நிலையில் இன்று ஆளும் கட்சி அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், பன்னீர் செல்வத்தின் பரிவாரமும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் தனித் தனியாக பிரதமரையும் மத்திய அமைச்சர்களையும் சந்தித்து அழுத்தம் கொடுத்தது.

மத்திய இணை அமைச்சர் பொன் இராதா கிருஷ்ணனும் மாநில மக்களின் நலனுக்காக தமிழக அமைச்சர் குழுவுடன் சேர்ந்து உள்துறை அமைச்சரைச் சந்தித்து நீட் தேர்வுக்கு எதிராக தான் ஆதரவைத் தெரிவித்தது, அன்புமணி இராமதாஸ் குடியரசுத் தலைவரிடம் வேண்டுகோள் வைத்ததும் மகிழ்ச்சியைத் தருகிறது.

தமிழகம் முழுவதையும் மிகக் கடுமையாகப் பாதிக்கும் பிரச்சினைகளில் கட்சி பேதங்களைக் கடந்து, கருத்து மார்ச்சரியங்களை மறந்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒற்றைக் குரலில் மக்களின் உணர்வை வெளிப்படுத்துவது தான் ஆரோக்கியமான அரசியலுக்கு அடித்தளம் அமைக்கும். தனித் தனியாகப் பிரிந்து நின்று பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்தித்த தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நாள் என்று வருகிறதோ அன்றுதான் தமிழகப் பொதுவாழ்வின் பொன் நாள்.

இதைக் கர்நாடக மாநில அரசியல் தலைவர்களிடமிருந்து நம் தலைவர்கள் கற்றுக் கொள்ளவேண்டும். தனித் தனியாகக் குரல் கொடுப்பதன் மூலம் தங்களுக்கு என்ன அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்ற கணக்கில் காய் நகர்த்துவதை விட்டு இனியாவது ’ஒன்று பட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு’ என்ற பாரதியின் பாடல் வரியை இவர்கள் நினைவில் நிறுத்துவது நல்லது,” என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

ரஜினி தனது அரசியல் அனைத்து கட்சியினருடன் இணைந்து செயல்படுவதாக இருக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது. ரஜினி அரசியலில் வந்த பிறகாவது, அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக குரல் கொடுக்கும் நிலை ஏற்படுமா?

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *