குப்பையையும் தங்கமாகும் போது அரசு வருமானத்திற்காக ’டாஸ்மாக்’ தேவையா? - VanakamIndia

குப்பையையும் தங்கமாகும் போது அரசு வருமானத்திற்காக ’டாஸ்மாக்’ தேவையா?

மாநில அரசிற்கு அதிக வரி வருவாய் தரும் ஒரு மாவட்டத்தின் தலைநகரம், மாநகராட்சிக்கு அதிக வருமானம் ஈட்டி தரும் மாநகரம், உலக வரைபடத்தில் பின்னலாடை நகரம் என அறியப்பட்ட ஊர், இந்திய அளவில் அதிகப்படியான வேலை வாய்ப்பை வழங்கும் நகரம், ஒவ்வொரு மாநிலமும் எங்களுக்கு ஒரு திருப்பூர் வேண்டும் என தொடர்ந்து இங்கே படையெடுத்த வண்ணம் உள்ள பெருமையை தன்னகத்தே கொண்ட நகரம். உலக நாடுகளின் வர்த்தகர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ள நகரம் என பல்வேறு பெருமைகளை கொண்ட இந்த நகரெங்கும் கடந்த ஒரு வாரமாக குப்பைகளால் நிரம்பி வழிகிறது, காற்று எளிதில் மாசடைந்து ஒரு விதமான துர் நாற்றம் வீச துவங்கியுள்ளது , நோய் தொற்றுகள் எளிதாக பரவும் அபாயம் உள்ளது. மாநில அரசு மற்றும் மாநகராட்சியின் மெத்தன போக்கே இதற்கான காரணம்.

நாளது தேதி வரை திருப்பூருக்கு ஒதுக்குபுறமாக ஒரு பெரிய பாறை குழியில் குப்பைகளை அப்படியே தரம் பிரிக்காமல் கொட்டப்பட்டு இன்று அந்த குழி நிரம்பியுள்ளதே இதற்கான காரணம். இந்த குழியை நிரப்புவதும் நம்மை நாமே ஏமாற்றக்கூடிய ஒரு செயல். குப்பைகளை தரம் பிரிக்காமல் அப்படியே உள்ளே கொட்டி நிரப்பியுள்ளதால் சரி பாதியாக கலந்துள்ள நெகிழி, மருத்துவ கழிவுகளால் நிலத்தடி நீர்வளம் கடுமையான பாதிப்பிற்குள்ளாகும்.

திருப்பூர் மாநகராட்சியாக மாற்றப் பட்ட பின்னர் ஒதுக்கப்பட்ட நிதியில் குப்பைகளை தரம் பிரித்து மேலாண்மை செய்யும் திட்டத்திற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது, அதில் சிந்தியது, சிதறியது, அள்ளியது பற்றிய ஆராய்ச்சிக்கும் போகாமல் தனியார் வசம் முற்றிலுமாக கொடுத்திருந்தால் நாட்டின் மிக சிறந்த சுத்தமான சுகாதாரமான நகரம் என்ற பெயரை திருப்பூர் பெற்றிருக்கும். திரிபுரா மாநிலத்தின் அகர்தலா நகரம் மற்றும் பூனா நகரத்தில் செயல்படும் இந்த திட்டத்தை பற்றிய ஒரு பார்வை,

குப்பைகள் கீழ்கண்டவாறு தரம் பிரிக்கப்படுகிறது

1. திடக் கழிவுகள்
2.காய்கறி கழிவுகள்
3.மருத்துவ கழிவுகள்
4.இறைச்சி கழிவுகள்
5.நெகிழி கழிவுகள்
6.கட்டிட இடிபாடுகள்
7.மின்னணு உபகரண கழிவுகள்

மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு கழிவுகளையும் அதற்குண்டான தொழில்நுட்பங்களை உபயோகித்து மக்கள் பயன்பாட்டிற்கான பொருட்களை தயார் செய்யப்படுகிறது, அதன் ஒரு சில பொருட்கள் கீழ்கண்டவாறு:
“சாலைகள் அமைக்க தாருடன் பயன்படுத்த நெகிழி கழிவுகளில் உருவாக்கப்படும் ஒரு விதமான திட பொருள்”

“மின்சார கம்பிகளின் மேல் வரும் நெகிழி ஒயர்”

“காய்கறி கழிவுகளிலிருந்து விவசாயத்திற்கு தேவையான இயற்கை உரம்”

“கட்டுமானங்களுக்கு உதவக்கூடிய உறுதியான, செங்கல் போன்றதொரு பொருள்”

என ஒவ்வொரு குப்பையும் குப்பையல்ல. அவையாவும் மறுசுழற்சி செய்து அன்றாட வாழ்வில் உபயோக படுத்தக்கூடிய பொருட்களாக மாற்றலாம். இதைத்தான் அகர்தலா மற்றும் பூனா மாநகரங்களில் செயல்படுத்தி அந்த நகரங்கள் குப்பை மற்றும் காற்று மாசற்ற நகரங்களாக திகழ்கின்றன. தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநில அரசுகள் இந்த மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த துவங்கி விட்டன.

இந்த பொருட்களை கொண்டே மாநகராட்சியின் சாலைகள், மாவட்ட அரசு அலுவலகங்களின் மின் மராமத்து பணிகளுக்கான வயர்கள், என அந்த அந்த மாவட்டமே தன்னிறைவுடன் செயலாற்றக்கூடிய நிலை ஏற்படும். தற்சமயம் குப்பைகளை எரிக்கும் ஒரு தொழில்நுட்பத்தால் காற்று மாசு அதிகரிக்கின்றதே தவிர வேறு எந்த உபயோகமும் இல்லை.

இந்த திட்டத்தை குப்பை மேலாண்மை செய்யும் நிறுவனங்கள் வசம் கொடுக்கும்பட்சத்தில் , குப்பைகளை வீடு வீடாக மண்டலம், வார்டு வாரியாக அவர்களே நாள்தோறும் அவர்களின் வாகனத்தில் சென்று பெற்று மேலே குறிப்பிட்டவாறு தரம் பிரித்து மறுசுழற்சி உபயோகத்தை முன்னெடுப்பர். நான் குறிப்பிட்ட நகரங்களில் வீட்டிற்கு நாள் ஒன்றிற்கு ரூபாய்.ஒன்று விதம் குப்பைகளை பெற்றுக்கொண்டு செல்ல பெறப்படுகிறது.

டாஸ்மாக் வாயிலாக வருமானம் ஈட்டி அரசாங்கத்தை நடத்தும் அரசு இது போன்ற திட்டங்களை மாநிலமெங்கும் அமுல்படுத்தினால் முறையான நேர்மையான வருமானம் மட்டுமல்ல மக்களும் சுகாதாரமாக நோயற்ற வாழ்வை முன்னெடுக்க இயலும்.

ஓட்டுக்கு நோட்டு அந்த நோட்டை பெற்றுக்கொண்டு ஓட்டளிக்கும் கலாச்சாரம் உள்ள வரை தங்கமும் குப்பையாக மாறும்.

மாற்றங்களை எந்த அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் கொடுக்க இயலாது அந்த மாற்றங்கள் மக்களின் மனதிலிருந்து துவங்கும் வரை.

– குமார் துரைசுவாமி

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!