வருமானவரி, அமலாக்கத் துறையினர் கண்களுக்கு ’மிஸ்டர் 30 கோடி’ தெரியவில்லையா? - VanakamIndia

வருமானவரி, அமலாக்கத் துறையினர் கண்களுக்கு ’மிஸ்டர் 30 கோடி’ தெரியவில்லையா?

சென்னை: டிஜிட்டல் இந்தியா, கருப்புப்பணம் ஒழிப்பு , வருமான வரி ரெய்டு என்று ஓடியாடி வேலை செய்துக் கொண்டிருக்கும் அரசுத் துறை அதிகாரிகளின் கண்களுக்கு ‘மிஸ்டர்30கோடி’ மட்டும் தெரியவில்லையா? அல்லது கண்கள் கட்டப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

நடிகர் கம் அரசியல்வாதி கமல் ஹாசன், ”பத்தே நாளில் முப்பது கோடி ரூபாயை எப்படி திரட்டுவது” என்ற புதிய வித்தையைக் கத்துக் கொண்டிருக்கிறார் அல்லவா!. டிஜிட்டல் இந்தியாவில் 30 கோடி ரூபாயை, ஒரு நடிகர் தன் ரசிகர்களிடமிருந்து ஜஸ்ட் லைக் தட் திரட்ட முடியுமா? அதுவும் பத்தே நாளில்.

அவர் மிகவும் பிரபலமானவர் தான். சந்தேகமில்லை. அவருக்கு கிராமப்புற ரசிகர்களை விட நகர்ப்புறங்களில் ரசிகர்கள் அதிகம் என்பதுவும் தெரிந்தது தான். இந்த நகர்ப்புற ரசிகர்கள் தான் பேடிஎம், ஆன்லைன் வங்கி என டிஜிட்டல் இந்தியாவின் மிகப்பெரிய ஆதரவாளர்கள். கேஷை கையால் தொட்டாலே பாவம் என்று நினைக்கக்கூடியவர்கள். எல்லாமும் கார்டும் ஆன்லைனும் தான் அவங்களுக்கு!

ஆக, கமல் ஹாசனுக்கு 30 கோடி ரூபாயை கொண்டு வந்து கொட்டியவர்கள் இந்த டிஜிட்டல் இந்தியாவின் மாடர்ன் மைந்தர்களாகத் தான் இருக்க வேண்டும் அல்லவா! அப்போ, ஆழ்வார் பேட்டையில் மெகா சைஸ் உண்டியல் வைத்து பணம் திரட்டவில்லை என்பது உறுதியாகிறது.

சரி, அடுத்ததற்கு வருவோம்!. ஆன்லைன் பரிமாற்றமோ, பேடிஎம் மூலமாகவோ நன்கொடை தாராளமாக செலுத்தலாம். சட்டரீதியாக எந்தத் தடையும் இல்லை. ஆனால் ஒருத்தருடைய கணக்கிலிருந்து இன்னொருவர் கணக்குக்கு நேரடியாக போய்விடும் இல்லையா! இடைத் தரகர் யாரும் கிடையாது! அதுவும் நல்லது தான்.

இந்த ஆன்லைன் மற்றும் பேடிஎம் பரிவர்த்தனை எல்லாமும், பேர் ஊர், பேங்க் விவரத்துடன் டிஜிட்டலாக பதிவாகிவிடும். ”யாரு கொடுத்தாங்கன்னு தெரியல்லேன்னு” எல்லாம் சொல்லி டபாய்க்க முடியாது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கிகளில் பரிவர்த்தனை என்றால், ஆட்டோமேட்டிக்காக வருமானவரித்துறை, அமலாக்கத்துறைக்கு தகவல் செல்வதாக, வங்கியில் பணிபுரியும் நண்பர் ஒருவர் சொன்னார். நமக்கு அது பற்றி உறுதியாகத் தெரியாது. ஆனால், பரிவர்த்தனை விவரங்கள் அனைத்தையும், இந்த துறையினர் உடனடியாகக் கேட்டு தெரிந்து கொள்ள முடியும் என்பது நிச்சயம்.

அதாவது, யார் யார், எந்த வங்கியிலிருந்து, எவ்வளவு பணம் கமல் ஹாசனுக்கு அனுப்பியிருக்காங்க என்பதை சுலபமாக கண்டுபிடிக்க முடியும். போனது கமல் ஹாசனின் சொந்தக் கணக்கா, சினிமா கம்பெனிக் கணக்கா என்ற விவரமும் தெரிந்து விடும்.

அட போகட்டுங்க. நாட்டுலே எத்தனையோ கோடிக் கணக்குல பணம் பரிமாறுது. 30 கோடி ஒரு மேட்டரா?. ஜூஜூபிங்கன்னு மிஸ்டர் பொது ஜனம் சொல்லக்கூடும். வியாபாரத்துக்கு பணம் பரிமாறுனா பரவாயில்லை. இங்கே ஒருத்தர் கேட்டவுடனே, ஜஸ்ட் லைக் தட் வந்து கொட்டி இருக்காங்கன்னா, கொடுத்தவங்களோட யோக்கியதையையும் பாக்கனும்லே. சரியா வரி கட்டியிருக்காங்களா? அவங்களுக்கு பணம் எப்படி வந்தது. எல்லாம் வருமான வரிக்கு உட்பட்ட பணம் தானா ன்னும் பாக்கனும் தானே!

தினகரன் – சசிகலா குடும்பத்துக்கு 200 ஆபீசர் அனுப்பின வருமானவரித் துறை, கமல் ஹாசன் வீட்டுக்கு ஜஸ்ட் ஒரு ஆபீசர் கூட அனுப்ப முடியாதா? கபாலி படம் வெளியாவதற்கு முன்னாடி ரஜினி வீட்டுக்கே போயிட்டு வந்து, இது வெறும் நடைமுறை தான்னெல்லாம் சொன்னாங்க. மெர்சல் படத்துக்காக பேசுன விஷால் வீட்டுக்கு அடுத்த நாளே ஆபிசருங்க போனாங்களே!

கம்பெனி, ஸாரி… கட்சி ஆரம்பிக்க முன்னாடி பணம் வசூலிக்கக் கூடாதுன்னு பத்து நாள் கழிச்சு கமல் ஹாசனுக்கு தெரிஞ்சிருக்கு. விவரம் தெரியாமலேயே வசூலிச்சிட்டாரு இந்த வசூல் ராஜான்னே வச்சுக்கலாம். தவறு செய்வது மனித இயல்பு தானே! தெரிஞ்ச உடனே, சட்டத்திற்கு உட்பட்டு பணத்தை திருப்பிக் கொடுத்துடுறேன்னு சொன்னாரு..

சொன்னபடி கொடுத்தாரா? யார் யார்கிட்டே இருந்து எவ்வளவு வந்துச்சு, எந்த வங்கிக் கணக்கில் டெப்பாசிட் ஆச்சு. அதை எப்போ யாருக்கெல்லாம் திருப்பிக் கொடுத்தாருன்னு ஒரு லிஸ்ட் கொடுத்துட்டா மிஸ்டர் க்ளீன் ஆகிடலாமே! அறப்போர் இயக்க இளைஞர்களுடன் சேர்ந்து விசிலடிச்சு ஊழலை ஒழிக்கப் போறேன்னு சொல்றவரு, சொந்த வீட்டிலேருந்து விசிலடிக்க ஆரம்பிக்கலாமே.

ஏன் இந்த தயக்கம் மிஸ்டர் கமல் ஹாசன். பணத்தைக் கொடுத்தவங்க மாட்டிக்குவாங்களா? அல்லது ஸ்க்ரிப்ட் எழுதிக் கொடுத்தவங்க மாட்டிக்குவாங்களா?

யாருக்காகவோ, எதற்காகவோ நீங்கள் ஏன் ‘மிஸ்டர்20கோடி’ என்ற அவப்பெயரை சுமக்க வேண்டும் மிஸ்டர் கமல் ஹாசன்!. உண்மையை உரக்கச் சொல்லலாமே!

-’ரைட்’ பாண்டியன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!