யார் சிறந்த தலைவர்... ஊர் ஊராகச் சுற்றுபவரா? சிந்திக்க நேரம் ஒதுக்குபவரா? - VanakamIndia

யார் சிறந்த தலைவர்… ஊர் ஊராகச் சுற்றுபவரா? சிந்திக்க நேரம் ஒதுக்குபவரா?

நம் எல்லோருக்கும், சுறுசுறுப்பாக ஓடியாடிக் கொண்டிருக்கும் தலைவர்களைப் பார்த்தால் உற்சாகம் பிறக்கிறது. பல ஊர்களுக்கும் சுற்றி வருபவர்கள் என்றால், ’எல்லாமும் தெரிந்தவர்’ என்பது போல் ஒரு மரியாதை பிறக்கிறது. அலுவலகமாக இருந்தாலும் , நாட்டை ஆளும் ஆட்சியாளர்களாக இருந்தாலும், அவர்கள் ’சிறந்த பேச்சாளார்களாக’ இருந்து விட்டால் உச்சி மோர்ந்து கொண்டாடத் தொடங்கி விடுகிறோம்.

ஆனால், இவையெல்லாம் ஒரு கம்பெனியையோ, நாட்டையோ நிர்வகிக்கும் தலைவருக்கு தேவையானது அல்ல. பிரச்சனைகளை எப்படி அணுகுவது, அதற்குரிய தீர்வுகளை எப்படி கண்டறிவது என்ற சிந்தனையாளார்கள் தான் நிறுவனங்களுக்கும், நாட்டிற்கும் இப்போதைய தேவை.

கம்பெனி நிர்வாகியானாலும் , நாட்டை ஆள்பவர் என்றாலும் , தலைவர்களுடைய நேரத்தை, சுற்றுப் பயணத்திற்கோ, மேடைப் பேச்சுக்கோ செலவிடாமல், ஆக்கப் பூர்வமாக பயன்படுத்த வேண்டும்.

தங்கள் நேரத்தை, நாடு எதிர்கொள்ளும் முக்கியமான, பிரச்சனைகளைப் பற்றி ஆராய்ந்து புரிந்து கொள்ள, தலைவர்கள் பயன்படுத்த வேண்டும். இது வரையிலும் அவர் அறிந்திராத, இன்றியமையாத விஷயங்களைப் பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும். திட்டங்களை நிறைவேற்றக் கூடிய சரியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கு, மிகவும் அரிதான நேரத்தை செலவிட வேண்டும். இந்த மூன்றும் இன்றைய தலைவர்களுக்கு அதிமுக்கியமானதாகும்.

உலகம் மிக வேகமாக மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த சூழலில் புதுப்புது பிரச்சனைகளும் வாய்ப்புகளும் ஒன்றாகவே வருகிறது. அதையெல்லாம் அறிந்து கொள்ளாமல் ஒரு தலைவர், நிறுவனத்தையோ, நாட்டையோ நிர்வகிக்க முடியாது.

பொருளாதாரம், அறிவியல் சார்ந்த பத்திரிக்கைகள், இதழ்கள் ஆகியவற்றை கட்டாயம் தினம் தோறும் வாசிக்க வேண்டும். அன்றாடம் மாறிவரும் சூழல்கள் பற்றி அங்கு தான் தெரிந்து கொள்ள முடியும். தவிர குறிப்பிட்ட முக்கிய துறை சார்ந்த கட்டுரைகள், ஆராய்ச்சிகள் , புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் தொடர்ந்து வாசித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதற்குத் தான் அதிகாரிகள் இருக்கிறார்களே என்றால், பின்னர் தலைவருக்கு என்ன தான் வேலை? என்ற கேள்விகளுக்கு இடமே இல்லை. மற்றவர்கள் சொல்வதை, அப்படியே உத்தரவாக பிறப்பிப்பதற்கு ஒரு தலைவர் தேவையா? தனக்குத் தெரிந்து இருந்தால் தானே, அதிகாரிகளின் தகவல்களும் பரிந்துரைகளும் சரியானதா இல்லையா என்று புரிந்து கொள்ள முடியும். சரியான முடிவுகள் எடுக்கவும் முடியும். அதிகாரிகளின் அறிவுத்திறனை மட்டுமே நம்பியிருந்தால் தலைவரின் வீழ்ச்சி வெகு விரைவில் நிச்சயம்.

சுயமாக விவரங்களைத் தெரிந்து கொண்டு, அதிகாரிகளின் ஆலோசனைகளைப் புரிந்து கொண்டு, விவாதித்து, பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வல்லமை இருந்தால் மட்டுமே அவர்கள் உண்மையான தலைவர்கள். இன்றைய நவீன உலகத்தில் அப்படிப் பட்ட தலைவர்களால் மட்டுமே நிறுவனத்தையோ, நாட்டையோ சரியாக நிர்வகிக்க முடியும்.

அலங்காரப் பேச்சுகளும், நாடு நாடாக, ஊர் ஊராகப் பயணம் மேற்கொள்வதும் தலைவர்களுக்கான பணி அல்ல. அதெற்கெல்லாம் மற்றவர்களை பிரதிநிதிகளாக அனுப்பலாம்.

நம்முடைய தலைவர்கள், எதையும் முழுமையாக உள்வாங்கி, புதியவைகளை விரைவில் கற்றுக் கொண்டு, செயல்திட்டம் உருவாக்கும் திறன் உடையவர்களா? அதற்காக தங்கள் நேரத்தை செலவிடுகிறார்களா? என்று பாருங்கள். அவர்களை ஆராதிக்கலாம்.

மேடைப்பேச்சு, நகர் வலம், நாடு சுற்றல் என ‘அரிதான நேரத்தை’ அநியாயமாக வீணடிக்கும் தலைவர்களிடமிருந்து தள்ளியே இருப்போம்!.

– ஏ.ஜே. பாலசுப்ரமணியன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!