இந்தத் தமிழகத்திற்கு இன்னும் என்ன தான் செய்ய வேண்டும் ரஜினி? - VanakamIndia

இந்தத் தமிழகத்திற்கு இன்னும் என்ன தான் செய்ய வேண்டும் ரஜினி?

அம்மா அப்பா தான் தெய்வம். அவர்களையும் குடும்பத்தையும் நன்கு பார்த்துகொள்ளுங்கள் என்று என்பதுகளுக்கு முன்னரே சொல்ல ஆரம்பித்தார். இன்னும் அதையே தொடர்கிறார்.

வேலை, தொழில் எது செய்தாலும் உண்மையா நேர்மையா செய்யனும் என்று தொடர் அறிவுரைகளை தன் ரசிகக் கண்மணிகளுக்கு சொல்லி வருகிறார்.

நாம் இந்தியர், நம் சந்ததியும் இந்தியர் என வாழ வேண்டும். பிரிவினை பேச்சு நமக்கு வேண்டாம் என்பவர்தானே ரஜினி. வேட்டி கட்டி வெள்ளை தாடியுமாய், தன் தாய் தமிழகத்தை எந்நாளும் மனதில் பூசித்து நேசித்து தானே வருகிறார் இந்த ரஜினி.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர் பண்போடுவாழ்ந்து வருபவர்தானே இந்த ரஜினி. விளம்பர மோகத்தில் இந்த உலகமே இயங்கிப் போகிறது. ஏதாவது விளம்பரத்தில் நடித்து, ’இங்க தங்கம் வாங்கு’, ’அதைக் குடி’,’இதைச் சாப்பிடு’ என்று மக்களை மூளைச்சலவை செய்தாரா இந்த ரஜினி?பணம் முக்கியம் என பார்த்திருந்தால், பாக்கெட்டில் பல கோடி வந்து கொட்டி இருக்கும். மக்கள் தான் முக்கியம் எனப் பார்த்து விளம்பரப் படங்களில் நடிப்பதை இன்று வரையிலும் தவிர்த்தது, அவரிடம் நீங்கள் கண்ட தப்பா?

தமிழ் நாட்டுக்கு எதுவும் செய்யலையா? ஏன் செய்யலை? நிறைய செய்து கொண்டு தான் இருக்கிறார். எத்தனை இயலாதவர் உதவி பெற்றார்கள், எத்தனை ஈழத் தமிழ் சொந்தங்கள் உதவி பெற்றார்கள் என்று ஏட்டில் எழுதி மாளாது. இப்பொழுது சமூக வலைத் தளங்களில், ’இவ்வளவு கோடி ஒருவர் உதவி’, ’அவர் அவ்வளவு கோடி உதவி’ என பொய்யாய் அள்ளிவிட ஒரு கூட்டம்.

ஆனால் ரஜினி என்பது களுக்கு முன்னமே ஆரம்பித்து, இன்று வரை தன் வருமானத்தில் ஒரு பகுதியை, லட்சங்களாக கோடிகளாக பேரிடர் காலங்களிலும், பண்டிகை காலங்களிலும் அள்ளிக் கொடுத்துக் கொண்டு இருப்பவர்தானே!.பல நூறு நடிகர்கள் இருக்கையில், ஏழைகளுக்கு இலவச திருமணம், ஊனமுற்ற வர்களுக்கு சக்கர வண்டிகள் முதலில் ராகவேந்திரா மண்பத்தில் தான் என்பதை மறந்து விடாதீர்!

கண்தானம் விழிப்புணர்வு இல்லாத காலங்களில் பவர் புல்லான தன் கண்களை தான பதிவு செய்தவரும் இவர்தான். தன் ரசிகர்களுக்கும் இதைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். ரஜினியின் ஒவ்வொரு பிறந்த நாள் போதும் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கண் தானம் பதிவு செய்துள்ளார்கள்.

சாதி மதச் சண்டைகளை அவரும் சரி, அவர் ரசிகர்களும் எங்கும் உருவாக்குவதே இல்லை. யாரேனும் உருவாக்கினால் அதைத் தட்டிக் கேட்க தவறுவதும் இல்லை.

கோடிகணக்கான மதிப்புள்ள, தன் உழைப்பில் சம்பாதித்துக் கட்டிய ராகவேந்திரா மண்டபத்தை, தனக்குப் பிறகு தன் தமிழ்மக்களுக்கு த என எழுதிவைத்து விட்டார்.

அவருடைய ஒவ்வொரு படமும், பாடல் வரிகளும் ஏன் வசனங்கள் கூட நல்லதைத் தானே போதித்து வருகிறார். கெட்டதை ஒரு போதும் போதிப்பதில்லையே! அவருடைய பட வசனங்கள் மேலாண்மைக்கான புத்தகமாக ஆங்கிலத்திலும் வெளி வந்தது என்பதிலேயே தெரியவில்லையா?. ஏதேனும் தெரியாமல் தவறு செய்தால் கூட பகிரங்கமாக ஒத்துக்கொண்டு, திருத்திக் கொள்ள கத்து கொடுத்தவர் தானே இந்த ரஜினி.

மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருந்த ஒரு பஸ்கண்டக்டராக உயர்ந்து, வாழ்வில் படிப்படியாக முன்னேறி, உலகப் புகழ் பெற முடியும் என இளைஞர்களுக்கு ’ரோல்மாடலாக’ இருப்பவர்தானே இந்த ரஜினி!

குரு பக்தி, தொழில் பக்திக்கு எப்படி இருக்க வேண்டும் என எடுத்துகாட்டாக நம்மோடு வாழ்ந்து காட்டுகிறவர் இந்த ரஜினி. இன்னும் நிறைய எழுதலாம்!. ஆனால் என்ன சொன்னாலும் ’ரஜினி என்ன செய்தார்தமிழ்நாட்டிற்கு’ என்று தான் முதலில் இருந்து கேள்வி ஆரம்பமாகும்!

பொய்யாய் பல அறிக்கைகள், மதி மயங்கச் செய்ய மதுவும் இலவசமும், ஓட்டுக்கு ஐநூறு, ஆயிரம் கொடுத்து லட்சங்களையும் கோடிகளையும் ஊழல் செய்து சம்பாதித்தவர்களிடம் போய்க் கேளுங்கள். “ரஜினி ஏன் செய்ய வேண்டும்.. நீங்கள் தான் செய்ய வேண்டும் என்று..”.

ஜெய்ஹிந்த்

– வெங்கடேஷ் முனிவேல்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!