ஆர்கே நகர் இடைத் தேர்தல்... விஷால் மனு தள்ளுபடி... அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - VanakamIndia

ஆர்கே நகர் இடைத் தேர்தல்… விஷால் மனு தள்ளுபடி… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் செய்த வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படமடதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் சுயேட்சையாக நடிகர் விஷால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நபரை அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பத்து பேர் முன்மொழிய வேண்டும்.

ஆனால், விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாக காணப்படும் பத்து பெயர்களில் விஷாலை முன்மொழியாத இரு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து, ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகத்துக்கு மாலை ஐந்தரை மணியளவில் விரைந்து வந்த நடிகர் விஷால் தன்னை ஆதரித்து முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதில் நியாயமில்லை என்றும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வாக்குவாதம் செய்தார். இதை தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து தேர்தல் அலுவலகம் அருகே தனது ஆதரவாளர்களுடன் தண்டையார் பேட்டை சாலையில் அமர்ந்து விஷால் திடீர் மறியலில் ஈடுபட்டார். விரைந்துவந்த போலீசார் விஷாலிடம் சமரசம் பேசி தேர்தல் அலுவகத்துக்குள் அழைத்து சென்றனர்.

பின்னர் தேர்தல் அதிகாரியிடம், முன்மொழிந்தவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் ஆடியோ ஆதாரத்தை விஷால் வெளியிட்டார். மிரட்டலுக்கு உள்ளானதாக கூறப்படும் வேலு என்பவரிடம் விஷால் பேசிய ஆடியோ ஆதாரத்தை காண்பித்திருக்கிறார். மேலும் தனக்காக முன்மொழிந்தவர்களை மதுசூதனன் தரப்பினர் மிரட்டியதாகவும், வாபஸ் பெற கையெழுத்து பெறப்பட்டதாகவும் விஷால் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த ஆடியோ ஆதாரத்தை ஆய்வு செய்த ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி சில திருத்தங்கள் செய்த பின்னர் விஷாலின் வேட்பு மனு பரிசீலனையில் வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். இந்நிலையில், விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாக கூறப்படும் பத்து பெயர்களில் சுமதி, தீபன் ஆகிய இரண்டு பேர் அவரை முன்மொழியவில்லை எனவும், வேட்புமனுவில் இருப்பது தங்கள் கையெழுத்து இல்லை எனவும் தேர்தல் அதிகாரி முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதையடுத்து தேவையான முன்மொழிவோர் எண்ணிக்கை இல்லாத காரணத்தால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் நடத்திய தீவிர ஆலோசனைக்கு பின்னரே விஷாலின் வேட்புமனு நிராகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விஷால் அளித்த ஆடியோ ஆதாரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாது எனவும் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!