விராட் கோஹ்லிக்கு 'கட்டம்', இப்போ உச்ச கட்டம்! - VanakamIndia

விராட் கோஹ்லிக்கு ‘கட்டம்’, இப்போ உச்ச கட்டம்!

டெல்லி: தனது கிரிக்கெட் கேரியரின் உச்சத்தில் இருக்கிறார் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி என்றால் மிகையல்ல.

இலங்கைக்கு எதிரான டெல்லி டெஸ்டில் முதல் இன்னிங்சில் 243 ரன்கள் குவித்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, 2–வது இன்னிங்சில் 50 ரன்கள் எடுத்தார். அத்துடன் நேற்றும் சில சாதனைகளை தன்வசப்படுத்தினார்.

*இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோரஹ்லி ஒரு சதம், இரண்டு இரட்டை சதம், ஒரு அரைசதம் உள்பட 610 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 600 ரன்களுக்கு மேல் சேர்த்த 4–வது வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். இந்த வகையில் முதல் 3 இடங்களில் இங்கிலாந்தின் கிரகாம் கூச்–752 ரன் (இந்தியாவுக்கு எதிராக, 1990–ம் ஆண்டு), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா–688 ரன் (இலங்கைக்கு எதிராக, 2001), பாகிஸ்தானின் முகமது யூசுப்–665 ரன் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2006) ஆகியோர் உள்ளனர்.

*3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களில் இதற்கு முன்பு ஷேவாக் எடுத்த 544 ரன்களே (பாகிஸ்தானுக்கு எதிராக, 2005) அதிகபட்சமாக இருந்தது. அவரை கோஹ்லி பின்னுக்கு தள்ளினார்.

*ஒரே டெஸ்டில் இரட்டை சதமும், அரைசதமும் விளாசிய 7–வது கேப்டன் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார். சுனில் காவஸ்கர் (இந்தியா), கிரகாம் கூச் (இங்கிலாந்து), மார்க் டெய்லர் (ஆஸ்திரேலியா), ஸ்டீபன் பிளமிங் (நியூசிலாந்து), கிரேமி சுமித் (தென்ஆப்பிரிக்கா), ரிக்கிபாண்டிங் (ஆஸ்திரேலியா) ஆகியோர் ஏற்கனவே இத்தகைய சாதனையை படைத்துள்ளனர்.

*இந்த டெஸ்டில் கோஹ்லி இரண்டு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 293 ரன்கள் (243, 50 ரன்) சேர்த்துள்ளார். இதன் மூலம் ஒரு டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டனாக அவர் திகழ்கிறார். 1978–ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் சுனில் காவஸ்கர் மொத்தம் 289 ரன்கள் (முதல் இன்னிங்சில் 107 ரன், 2–வது இன்னிங்சில் 182* ரன்) எடுத்ததே முந்தைய இந்திய கேப்டனின் அதிகபட்சமாக இருந்தது.

*இந்த தொடரில் 610 ரன்கள் எடுத்துள்ள விராட் கோஹ்லி, ஏற்கனவே 2014–15–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் (4 டெஸ்ட்) 692 ரன்களும், கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் (5 டெஸ்ட்) 655 ரன்களும் குவித்துள்ளார். இதன் மூலம் மூன்று தொடர்களில் 600 ரன்களுக்கு மேல் திரட்டிய முதல் இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். காவஸ்கர், ராகுல் டிராவிட் ஆகியோர் 2 முறை இந்த இலக்கை கடந்துள்ளனர்.

*மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து ஒரே ஆண்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் விராட் கோஹ்லி 3–வது இடத்தை பிடித்துள்ளார். அவர் 2017–ம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் 1,460 ரன், டெஸ்டில் 1,059 ரன், 20 ஓவர் போட்டியில் 299 ரன் என்று மொத்தம் 2,818 ரன்கள் (சராசரி 68.73) குவித்துள்ளார். இந்த வரிசையில் இலங்கையின் சங்கக்கரா– 2,868 ரன் (2014–ம் ஆண்டு), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்–2,833 ரன் (2005–ம் ஆண்டு) டாப்–2 இடத்தில் உள்ளனர்.

விராட் கோஹ்லி, இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வு எடுக்க இருப்பதால், இனி அடுத்த ஆண்டில்தான் அவர் ஆடுவார். அதனால் இந்த பெரிய சாதனையை முறியடிக்க முடியாமல் போய் விட்டது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!