Village Pongal celebration in America

அமெரிக்காவிலும் ‘மாலை கோவில்’ பொங்கல் கொண்டாட்டம்.. நண்பர்கள் குழு அசத்தல்…

டல்லாஸ்: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மறுநாள் வெவ்வேறு விதமான கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையில் இந்த கொண்டாட்டங்கள் இருக்கிறது.

அனைத்து ஊர்களிலும் விளையாட்டுப் போட்டிகள் தவறாமல் இடம்பெறுகிறது. ஒரே ஊரில் பல இடங்களில் இத்தகைய போட்டிகள், விழாக்கள் நடைபெறுவதும் உண்டு. ஒவ்வொரு ஊரிலும் நண்பர்கள் குழு, கட்சிக்காரர்கள், ரசிகர் மன்றங்கள் என வெவ்வேறு அமைப்புகள் இத்தகைய பொங்கல் விழாக்களை நடத்தி வருவது அறிந்ததே.

அதைப் போல் அமெரிக்காவிலும் நண்பர்கள் குழு ‘ மாலைப் பொங்கல் கொண்டாட்டம்’ நடத்த உள்ளார்கள். டல்லாஸ் நண்பர்கள் குழு சார்பில் சனிக்கிழமை, ஜனவரி 13ம் தேதி, டிஎஃப்டபுள்யூ இந்துக் கோவில் வளாகத்தில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

இது குறித்து நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ரவி கூறுகையில், “எங்கள் ஊரில் (நாமக்கல்) பொங்கலுக்கு மறு நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படும். அன்று ‘மாலை கோவில்’ விழாவில் பல கிராமங்களிலிருந்து அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து ‘குடி பொங்கல்’ வைப்போம். பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், உரி அடித்தல், சாக்குப் போட்டி என சிறுவர்கள், பெரியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் களை கட்டும். வித விதமான உணவும் சமைத்து பரிமாறப்படும்.

டல்லாஸில் சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்கள் குடும்பங்கள் சேர்ந்து ‘குடி பொங்கல்’ வைத்து கொண்டாடத் தொடங்கினோம். குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் வைப்போம். கடந்த ஆண்டு மேலும் பல நண்பர்கள் இணைந்தார்கள். ஊரில் போலவே விதவிதமான உணவு சமைத்து பரிமாறினோம். இந்த ஆண்டு இன்னும் விரிவாக ஏற்பாடு செய்துள்ளோம். அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். எல்லோரும் வந்து விளையாடி, சாப்பிட்டுச் செல்லலாம். எந்த கட்டணமும் கிடையாது” என்று ரவி கூறினார்.

இன்னொரு ஒருங்கிணைப்பாளரான பொள்ளாச்சியைச் சார்ந்த பால மோகன் கூறுகையில், ‘ சேலம், நாமக்கல், கோவை மாவட்டங்களில்
‘மாலை பொங்கல்’ மிகவும் பிரசித்துப் பெற்றது. ஒவ்வொரு பொங்கலுக்கும் குடும்பத்தோடு இங்கிருந்து ஊருக்கு போவது முடியாமல் இருந்தது. அப்போது தான் இங்கே நண்பர்களுடன் கொண்டாடலாம் என்று முடிவு செய்தோம். சில குடும்பங்களாக ஆரம்பித்த இந்த விழா, தற்போது சுமார் ஆயிரம் பேர் வரக்கூடிய அளவுக்கு வளர்ந்துள்ளது மகிழ்ச்சியாகும். இந்துக் கோவில் வளாகத்தில் நடத்துவதால் கிடா வெட்டி விருந்து படைக்க முடியவில்லை என்ற ஒரு குறை மட்டும் இருக்கிறது” என்று சொல்லி முடித்தார்.

இந்த விழாப் பற்றி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சார்ந்த திருமுருகன் கூறுகையில், “நம்மூரு கிராமப்புற கொண்ட்டாட்டத்தை அமெரிக்காவில் பார்ப்பது ரொம்ப மகிழ்ச்சி. பொங்கல் ,குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல், காது குத்து போன்ற விழாக்களுக்கு கிடா வெட்டி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு விருந்து படைக்க, அமெரிக்காவில் அய்யனார் கோவில் கட்டணும்ன்னு எனக்கு பெரிய ஆசை உண்டு. கௌபாய் நாடான டெக்சாஸ் அதற்கு சரியான இடம். அய்யனார் சாமி அந்த ஆசையை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்” என்றார்

அமெரிக்காவிலும் கிராமப்புற கொண்டாட்டங்களை கொண்டாடும் தமிழர்கள், உடன் நம் பாரம்பரியத்தையும் அங்கே நிலைநாட்டுகிறார்கள் என்பதில் பெருமை கொள்ளலாம்.

– வணக்கம் இந்தியா

தைப்பொங்கல் விழா 2018

தமிழர் தைத்திருநாள் பொங்கல் பெருநாளை டல்லாஸ் DFW தமிழ் நண்பர்கள் ஒன்றிணைந்து வருகின்ற ஜனவரி மாதம் 13 ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடவிருக்கிறோம். இப்பொங்கல் திருவிழாவை நம் பாரம்பரிய முறைப்படி கரும்பு, மாடு, வாழை இலையில் அறுசுவை விருந்து, இன்னிசை நிகழ்ச்சி, குழந்தைகள், பெரியவர்களுக்கான போட்டிகள் என கொண்டாடவிருக்கிறோம். பொங்கல் திருவிழாவை உங்கள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் இனிதே கொண்டாட டல்லாஸ் நகரில் வாழும் அனைத்து தமிழ் நெஞ்சங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

தைப்பொங்கல் விழா 2018

தமிழர் தைத்திருநாள் பொங்கல் பெருவிழாக் கொண்டாட்டம் 2018 தமிழர் தைத்திருநாள் பொங்கல் பெருநாளை டல்லாஸ் DFW தமிழ் நண்பர்கள் ஒன்றிணைந்து வருகின்ற ஜனவரி மாதம் 13 ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடவிருக்கிறோம். இப்பொங்கல் திருவிழாவை நம் பாரம்பரிய முறைப்படி கரும்பு, மாடு, வாழை இலையில் அறுசுவை விருந்து, இன்னிசை நிகழ்ச்சி, குழந்தைகள், பெரியவர்களுக்கான போட்டிகள் என கொண்டாடவிருக்கிறோம். பொங்கல் திருவிழாவை உங்கள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் இனிதே கொண்டாட டல்லாஸ் நகரில் வாழும் அனைத்து தமிழ் நெஞ்சங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!