பெட்டர் ஒர்க் வியட்நாம் என்ற சர்வதேச தொழிலாளர் ஆணையத்தின் (INTERNATIONAL LABOUR ORGANISATION)செயல்திட்ட நடைமுறைகளை கண்டறிந்து வியட்நாம் தேசத்தின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை துறையின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளக்கூடிய ஒரு ஆய்வு பயண திட்டத்தை சர்வதேச தொழிலாளர் ஆணையம் ஏற்பாடு செய்தது இதில் மத்திய அரசின் ஜவுளித்துறை (TEXTILE MINISTRY), தொழிலாளர் நல துறை (LABOUR WELFARE MINISTRY), சிறுகுறு நடுத்தர தொழில்கள் துறை (MSME MINISTRY), ஒடிசா மாநில அரசின் அந்நிய முதலீடு மற்றும் திறன் மேம்பாட்டு துறை(IPICOL), ஆயத்த ஆடை ஏற்றுமதி கழகம்(AEPC), திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்(TEA) மற்றும் சர்வதேச தொழிலாளர் ஆணையத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் கொண்ட குழு வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனோய் மற்றும் ஹோ சி மின் நகரத்திற்கு டிசம்பர் 26 முதல் 30 வரை விஜயம் செய்து வியட்நாம் அரசின் தொழில் துறை அமைச்சகம், தொழிலாளர் நல துறை அமைச்சக உயர் அதிகாரிகள் , வியட்நாம் தொழில் மற்றும் வர்த்தக சபை அதிகாரிகள், வியட்நாம் தொழிச்சாங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் அரசின் பொதுத்துறை நிர்வாகிகளை சந்தித்து பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டோம் . மேலும் சில ஆயத்த ஆடை தொழில்சாலைகளை பார்வையிட்டு அந்நிறுவன நிர்வாகிகளிடமும் உரையாடி பல தகவல்களை அறிந்துகொண்டோம். ஆய்வு பயணத்தின் தொகுப்பு பின்வருமாறு ,
வியட்நாம் தேசம் 9 .1 கோடி மக்கள் தொகையை கொண்ட நாடு , இதில் 5.2 கோடி மக்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு பொருளீட்டுகின்றனர்.சுமார் 20 வருடங்களுக்கு முன்னாள் ஆயத்த ஆடை உற்பத்தி துவங்கியது. 2005 ம் ஆண்டு வரை சொல்லிக்கொள்ளும் அளவிற்கான ஏற்றுமதி வர்த்தகம் இல்லை ஆனால் நாளது தேதியில் உலகின் தேவைகளில் 5 .9 % வியட்நாம் ஆயத்த ஆடைகளால் பூர்த்தி செய்யப்படுகிறது
இங்குள்ள 90 % நிறுவனங்கள் துணிகளை சீனா, கொரியா, இந்தியா, பாக்கிஸ்தான், துருக்கி , இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து ஆடைகளை தயார் செய்து ஏற்றுமதி செய்கின்றனர், சிறு குறு நடுத்தர மற்றும் பெரும் நிறுவனங்கள் என 5000 கும் மேற்பட்ட ஆயத்த ஆடை நிறுவனங்கள் நாடு முழுவதிலும் வியாபித்துள்ளது, இதில் 20 % நிறுவனங்கள் நேரடி அந்நிய முதலீடு வகையை சார்ந்தது, சீனா, கொரியா, இந்தியா மற்றும் ஜப்பானியர்கள் இந்தத்துறையில் இங்கு பெருமளவு முதலீடுகளை செய்துள்ளனர்.இது தவிர அரசின் பொது துறை என்ற அளவில் 50 பெரிய நிறுவனங்கள் வினா டெக்ஸ் என்ற பெயரின் கீழ் இயங்குகிறது 12 % இந்நிறுவனங்களின் வியட்நாமின் மொத்த ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில். கடந்த சில வருடங்களாக தனியார் துறை முதலீடுகள் அதிகரிக்கப்பட்டதால் இன்றளவு அரசு 26 % பங்குகளை இந்நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன. அதிகபட்சம் 300 தொழிலாளர்கள் மற்றும் நிறுவனத்தின் முதலீட்டின் அடிப்படையில் சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் அரசால் அங்கீகரிக்கப்படுகிறது.
வியட்நாமின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி 1 லட்சம் கோடிகள். அதில் ஆயத்த ஆடைத்துறையின் பங்களிப்பு 80 % என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் 10 % வளர்ச்சி என்பதை சீராக பெற்று வளர்கிறது இத்துறை. இதில் அமெரிக்கவிற்கான ஏற்றுமதி என்பது 60 % , ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி 30 % தென் அமெரிக்க, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, நியூஸிலண்ட் நாடுகள் இதர 10 % பங்களிப்பு என்ற அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது.டிரான்ஸ் பசிபிக் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா பின்வாங்கியதும் ஐரோப்பியவுடனான வரி இல்லா வர்த்தக ஒப்பந்தம் தாமதப்படுவதும் ஒரு பின்னடைவாக கருதுகின்றனர், அமெரிக்கா தவிர்த்து ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூஸிலாந்து நாடுகளுடன் வரி இல்லா வர்த்தக ஒப்பந்தத்திற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
வியட்நாம் நாடு நூற்பாலைகளை கொண்டிருந்தாலும் , பருத்தி உற்பத்தி செய்ய கூடிய சீதோஸ்ணம் இருந்தும் நெல் மற்றும் இதர உணவு விவசாய விலை பொருட்கள் உற்பத்தி நல்ல லாபத்தை ஈட்டுவதால் பருத்தி உற்பத்தி பெருமளவு செய்யப்படுவதில்லை . அரிசி ஏற்றுமதியில் இந்நாடு உலகளவில் 2 ம் இடத்தில உள்ளது முதலிடத்தை அண்டை நாடான தாய்லாந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பருத்தி உற்பத்தி பெருமளவில் இல்லாததால் என்னவோ நூற்பாலைகள் காலத்திற்கேற்ற மாற்றங்களை முன்னெடுக்கவில்லை மேலும் நூலை துணியாக மாற்றி ஆடைகளை தாயரிக்கும் அளவிற்கு பண்படுத்த தேவையான ஆலைகள் பெருமளவில் இங்கு இல்லாததால் துணிகளுக்கு இறக்குமதியை பெருமளவு நம்பியுள்ளனர்.
25 லட்சம் மக்கள் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ளனர் இவற்றில் 70 % பெண்கள், அரசு திறன் மேம்பாடு, தொழிலாளர் நலத்திற்கான சமூக பாதுகாப்பு, மருத்துவ காப்பீடு, வேலையின்மைக்கான காப்பீடு போன்ற திட்டங்களை மிக சிறப்பாக செயல்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நிறுவனத்திலிருந்து தொழிலார்கள் பெயர்ச்சி என்பது 10 % அளவே உள்ளது மேலும் ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை தங்களிடத்தில் தொழிலாளர்களை தக்கவைத்துள்ளது. அரசின் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதால் எந்த தொழில்சாலையும் போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதி செய்து தரும் அளவிற்கான தேவைகள் இருக்கவில்லை.
வியட்நாம் அரசு தனது நாட்டின் தொழில் கட்டமைப்பை அன்றாட செலவினம், வளர்ச்சி, கட்டமைப்பு உள்ளிட்ட விஷயங்களை உள்ளடக்கி நான்கு மாகாணங்களாக பிரித்துள்ளது , ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு விதமான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்துள்ளனர். 64 உள்ளூர் மற்றும் 18 துறை வாரியான பெரிய தொழில்சங்கங்களை உள்ளடக்கிய ஒரே கூட்டமைப்பாக இங்கு தொழிசாங்கம் வியட்நாம் பொது தொழிலாளர் கூட்டமைப்பு என்ற அமைப்பின் கீழ் இயங்குகிறது. இந்த கூட்டமைப்பு அரசு மற்றும் தொழிலமைப்புகள் கொண்ட ஒரு முத்தரப்பு பேச்சவார்த்தையை ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் துவங்கி பல்வேறு கட்ட சுற்றுகள் பேச்சுவார்த்தைகளை நடத்தி , நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, பொருளாதார சூழல், விலைவாசி நிலவரம் உள்ளிட்ட விஷயங்களை கணக்கில் எடுத்து செப்டம்பர் மாதம் தங்களது பரிந்துரையை அரசிற்கு வழங்குகிறது, ஒவ்வொரு வருடமும் டிசம்பர் இறுதியில் அடுத்த ஆண்டிற்கான ஊதிய உயர்வு மாகாணம் மற்றும் துறை வாரியாக அறிவிக்கப்பட்டு அடுத்து வரும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வருகிறது. இந்த வருடம் குறைந்த பட்ச ஊதியம் 6 % அளவு உயர்த்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொழில்சாலையிலும் வியட்நாம் பொது தொழிலாளர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள், நிர்வாகத்திற்கும் தொழிலார்களும் இடையே பாலமாக செயல்படுகின்றனர், அரசின் தொழிலாளர் நல துறை ஆய்வென்றாலும் சரி சர்வதேச வர்த்தகர்களின் ஆய்வின்போதும் இவர்கள் உடன் இருந்து சிறந்த ஒத்துழைப்பை நல்கி தொழில் நிறுவனமும் தொழிலாளர்களும் எவ்வித பாதிப்பும் இன்றி செயல்பட உதவுகின்றனர்.
வியட்நாமிய நிறுவனங்கள் லைன் சிஸ்டம், 5 S , உற்பத்தி மேலாண்மை, திறன் ஆய்வு, உற்பத்தி தவறுகளின் பின்புல ஆய்வு உள்ளிட்ட பல்வேறு செயல்திட்டங்களை பின்பற்றி குறையற்ற அதிக உற்பத்தியை முன்னெடுக்கின்றனர். மேலாண்மை பணிகளை தவிர இதர பணிகளுக்கு வெளிநாட்டு ஆட்களை அனுமதிப்பதில்லை அரசு. மேலாண்மை பணிகளில், இந்தியா, சீனா, துருக்கி, இத்தாலி, ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். உள்ளபடியே இங்குள்ள தொழிலாளர்களின் திறன் சிறப்பாக உள்ளது ,நுணுக்கம், பகுப்பாய்வு, அர்ப்பணிப்பு போன்ற குணங்கள் ஒவ்வொரு தொழிசாலையின் வெற்றிக்கு மட்டுமல்ல நாட்டின் வளர்ச்சிக்கே காரணம், இந்த காரணத்தால் ஏரளமான அந்நிய முதலீடுகள் குவிகிறது, குறிப்பாக மின்னணு துறையில் அதிகளவில் முதலீடுகள் வருகிறது இது ஆயத்த ஆடை தொழிலாளர்களை அந்த துறைக்கு ஈர்ப்பது ஒரு குறையாக உருவெடுத்துள்ளது.
இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் ஆர்டர்களை பெற்ற தேதியிலிருந்து 90 நாட்களில் தயார் செய்து அனுப்புகின்றனர், நிரந்தரமான வழக்கத்தில் உள்ள ஆர்டர்கள் 45 நாட்களில் தயாரித்து அனுப்பப்படுகிறது. நிர்ண்யக்கப்பட்ட உற்பத்தி திறன் இலக்கை ஒவ்வொரு தொழில் நிறுவனமும் 95% எட்டுவது மிகவும் வியந்து பார்த்தவேண்டிய ஒரு விஷயமாகும். MMR என சொல்லக்கூடிய மனித ஆற்றலுக்கு ஏற்ற இயந்திர ஆற்றல் விகிதம் 1 .25 என்ற அளவில் உள்ளதும் மிக சிறப்பான ஒன்றாகும், தொழில்பேட்டைகளுக்கு அரசு செய்து கொடுத்துள்ள உள்கட்டமைப்பு வசதிகள் சர்வதேச தரம்.
இங்குள்ள நிறுவனங்கள் சூரியஒளி, காற்றாலை மின்னுற்பத்திகளை தங்களது வழக்கங்களில் அமைத்து அவர்களின் பெருமளவு மின்தேவைகளை பூர்த்தி செய்கின்றனர், தொழில்சாலை கழிவு நீர் சுத்திகரிப்பு, ஒவ்வொரு நிறுவனமும் வெளியேற்றும் கரிய நில வாயு வாயு வெளியேற்றத்திற்கு ஏற்ப பிராண வாயுவை உற்பத்தி செய்யும் அளவிற்கான மரங்களை நட்டு வளர்த்து பராமரித்து தொழிசாலையால் ஏற்படும் மாசுகளை சரிசெய்கின்றனர். ஒவ்வொரு தொழில்சாலையும் ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் தரைகளை அதற்குண்டான தொழிலாளர்கள் சுத்தம் செய்வதும் சிறப்பு. சிறு சிறு உற்பத்தி யூகித்திகளை கொண்டு தரம் மற்றும் விரைவான உற்பத்தி மேம்பாடுகளை செய்கின்றனர்.
மேட் இன் வியட்நாம் என்ற முத்திரை கொண்ட ஆயத்த ஆடைகளுக்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா மக்களிடம் மிகுந்த மரியாதை உள்ளதை இங்கு வந்து பார்வையிட்ட பின்னர் உணரமுடிந்தது, அர்ப்பணிப்பு, நேர்மை, தரம், குறித்த நேரம் இவர்களின் தாரக மந்திரம் மட்டுமல்ல அரசு தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்களிடமும் சிறப்பாக காணப்படுவதே இவர்களின் வெற்றிக்கு காரணம் என்று சொன்னால் மிகை அல்ல.
150 வருட ஏற்றுமதி ஜவுளி வர்த்தக பாரம்பரியத்தில் துவங்கி பல்வேறு கட்டமைப்பு வசதிகள் உலகின் தலைசிறந்த பஞ்சு உற்பத்தி, உலகின் மிக சிறந்த தொழில் நுட்பத்தில் இயங்கும் நூற்பாலைகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் துணி உற்பத்தி செய்யும் கட்டமைப்பை கொண்ட நமது தேசம் உலக ஜவுளி தேவையில் 5% மட்டுமே பூர்த்திசெய்கிறோம் என்றால் என்ன காரணம்? தொடர்கிறேன்..
– குமார் துரைசுவாமி