வலுவான வளர்ச்சிப் பாதையில் தன்னிறைவு பெற்ற தற்சார்பு இந்திய தேசம் நிச்சயம்! - VanakamIndia

வலுவான வளர்ச்சிப் பாதையில் தன்னிறைவு பெற்ற தற்சார்பு இந்திய தேசம் நிச்சயம்!

சமீபத்தில் ஒரு அரசியல் ஆளுமையை சந்தித்து உரையாடினேன்.உரையாடலின் இடையே அவர் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதை அறிய நேர்ந்தது. அதை அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஒன்று நிச்சயம் உறுதியானது. அவரின் டிஸ்மிஸ் பின்னணியில் அவரின் நேர்மையான செயல்பாடும் அவர் கொண்ட கொள்கையின் உறுதியுமாக தான் இருக்க முடியும்.

தற்சமயம் நாட்டில் நிலவிவரும் பொருளாதார சூழல், வேலைவாய்ப்பு குறைந்து வருவது மற்றும் வேலை இழப்பு உள்ளிட்ட புள்ளிவிபரங்களை விவாதித்து ஆத்மார்த்தமாக கவலையுற்றதோடு தான் சார்ந்த இயக்கத்தின் வாயிலாக என்னவெல்லாம் செய்ய இயலும் என கருத்துக்களை கூறினார்.

அடுத்ததாக இன்னொரு சந்திப்பு..

கடந்த தீபாவளி முடிந்த சில தினங்களுக்கு பிறகு நாடு முழுவதும் மட்டுமல்ல உலகில் வாழும் தமிழர்கள் மத்தியில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் தொடர்ந்து பாரம்பரியங்களை காக்க போராடுபவர், என் மீதும் தனி அன்பு பாராட்டுபவர். அவருடைய நண்பர் மத்திய அரசில் உயர் பதவி வகிக்கும் அதிகாரி.

இருவரும் தங்கள் குடும்பத்துடன் பின்னலாடை வாங்கும் பொருட்டு திருப்பூர் வந்தனர். மத்திய அரசில் உயர் பதவி வகிக்கும் அதிகாரியும், நண்பரும் ஒரு சில கடைகளுக்கு சென்று ஆடைகளை தேர்வு செய்து வாங்கினார். கடைகளில் இருந்த பலர் இவர்களை ஆச்சரியத்துடனும் பரவசத்துடனும் மற்றும் சற்றே சந்தேகத்துடனும் பார்த்து கொண்டே இருந்தனர்.

மற்றவர்களின் குறுகுறு பார்வையையும் முணுமுணுப்பையும் நாங்கள் கவனிக்கத் தவறவில்லை. அங்கே வந்திருந்த உள்ளூர் நண்பர் ஒருவரும் அந்த கடையின் சிப்பந்தி ஒருவரும். ”இவரைப் பார்த்தால் அவர் போல் தெரிகிறது அவர்தானே இவர்” என வினவினார்கள்.

ஆமாம் என்றேன், பதறிவிட்டனர். என்னங்க, இவ்வளவு எளிமையாக இருக்கின்றார். ஒரு வார்டு கவுன்சிலர் இந்த காலத்தில் செய்யும் அலப்பறைக்கு மத்தியில் இவ்வளவு பெரிய ஆளுமை, இந்த அளவு எளிமையாக இருக்கிறாரே என வியந்தனர்.

மத்திய அரசு பதவியில் உள்ள அதிகாரியும் லேசுப்பட்டவர் அல்ல. தமிழக பதவிக் காலத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் மக்களின் பேரன்பை பெற்றவர். அதனால் தான் என்னவோ வடக்கே சென்றுவிட்டார். என்ன விதமான அழுத்தங்கள் இருந்திருக்கும் என்று யூகிக்க முடியுகிறது அல்லவா?

அதிகாரியின் மனைவியுடன் உரையாடிய போது இந்த அளவு நேர்மையுடன் உங்கள் கணவர் செயல்படுவதால், பல்வேறு இன்னல்களை கடந்திருப்பீர்கள், உங்களுக்கு வருத்தமாக இருந்ததில்லயா என்று கேட்டேன். நொடிப் பொழுது பட்டென்று கண்களில் பெருமிதம் மின்ன வந்து விழுந்த உறுதியான வார்த்தை “பெருமையாக மட்டுமே உணர்ந்துள்ளேன். மனது என்றென்றும் லேசாகவே உணர்கிறேன்” என்று.

எந்த நிலையை நோக்கி செல்கிறது என் தேசம் என கவலை எழும்போதெல்லாம் மனதில் ஆகச் சிறந்த நம்பிக்கையை உறுதியாக விதைக்கிறார்கள் மேலே நான் குறிப்பிட்ட ஆளுமைகள்.

இவர்களைப் போன்று நாடு முழுவதும் ஏராளமானோர் இருக்கின்றனர். தங்களை அடையாளப்படுத்தி கொள்ளாமல், பின்னொரு நாளில் இவர்களில் ஒருவரோ அல்லது ஒத்த கருத்துடைய இந்த ஆளுமைகள் ஒன்றிணைந்து நிச்சயம் வலுவான வளர்ச்சி பாதையில் தன்னிறைவு பெற்ற தற்சார்பு இந்திய தேசத்தை கட்டமைப்பார்கள் என்பது திண்ணம்.

இந்த மூவரையும் பெயரைக் குறிப்பிட்டு நேரடியாக எழுதிவிட முடியும் தான்!. ஆனால் இன்னும் எண்ணற்றவர்கள் இவர்களைப் போல் இருக்கிறார்களே!. அவர்கள் அனைவரும் எத்தகைய எதிர்பார்ப்புகள் இல்லாமல், தாங்கள் யார் என்று வெளியே பரபரப்பாக காட்டிக் கொள்ளாமல், இயன்றதை சத்தமில்லாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த அனைத்து தூய மனிதர்களையும் நினைவு கூர்ந்து பாராட்டுவது கடமை என கருதுகிறேன்.

இன்றையக் காலக்கட்டத்திலும் ”நம்பிக்கைக்குரியவர்கள். இந்த நாட்டின் நலன் பேணுபவர்கள் இருக்கிறார்கள். எத்தகைய இடர் வந்தாலும், இப்படிப் பட்டவர்களால் நமது நாடு எதிர் கொண்டு வெற்றி நடைபோடும்” என்ற ஆழமான நம்பிக்கையை பகிர்ந்து கொள்கிறேன்.

– குமார் துரைசுவாமி

கட்டுரையாளர் திருப்பூரில் வசித்து வரும் தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். க்ளாசிக் போலோ டி.ஆர். சிவராம் உருவாக்கிய ’வெற்றி ’ தன்னார்வ அமைப்பின் ’வனத்துக்குள் திருப்பூர்’ திட்டத்தில், குமார் துரைசாமி இயக்குனராகவும் பணியாற்றுகிறார். மாநகர மற்றும் மாவட்ட அரசுத் துறைகளுடன் இணைந்து, பல சீர்திருத்தத் திட்டங்களை அமல்படுத்த உறுதுணையாக பணியாற்றி வருகிறார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!