வேலைக்காரன் விமர்சனம் - VanakamIndia

வேலைக்காரன் விமர்சனம்

டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்து மிக வேகமாக முன்னணி நடிகராக மாறியிருக்கும் சிவகார்த்திகேயன் தனது அடுத்த கட்டமாக ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி இருக்கும் படம், சிவா நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம், தனி ஒருவன் வெற்றிக்கு பிறகு மோகன் ராஜா இயக்கும் படம் சிவா – நயன் காம்பினேஷன் என்றெல்லாம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போய் ஒருவழியாக டிசம்பர் 22ல் ரிலீஸாகி இருக்கிறது.

காசி (பிரகாஷ்ராஜ்) என்னும் ரவுடியின் சுயநலத்தால் கொலைகார குப்பமாக மாறிப்போன கூலிக்கார குப்பத்தின் துறுதுறு இளைஞன் அறிவு(சிவகார்த்திகேயன்) தன் குப்பத்து மக்களின் நலனுக்காக சமூக பண்பலை வானோலி நடத்தி வரும் அறிவு குடும்ப சூழ்நிலையால் சேல்ஸ் ரெப்ரெசெண்டேட்டிவாக செல்கிறான். அங்கே தான் விற்கும் பொருட்களின் பின்னால் இருக்கும் சந்தை அரசியலை புரிந்து அதனை எதிர்த்து போராடி முதலாளி வர்க்கத்தை சேர்ந்த ஆதி(ஃபகத் பாசில்)யை வெல்வதே வேலைக்காரன் படத்தின் கதை.

மோகன் ராஜாவுக்கு முதலில் பாராட்டுக்கள். முதலாளி தொழிலாளி, நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களில் அடங்கியிருக்கும் விஷம், நடுத்தர வர்க்க மக்களை உறிஞ்சி சாப்பிடும் சந்தை அரசியல் என்று இன்றைக்கு சமூகத்துக்கு தேவையான ஒரு விஷயத்தை மையக்கருவாக எடுத்ததற்கு…

அடுத்து இப்படி ஒரு கருத்துள்ள படத்தில் நடித்ததற்காக சிவகார்த்திகேயனை பாராட்டலாம்.
அறிவு என்னும் குப்பத்து இளைஞனாகவே மாறியிருக்கிறார் சிவா. எமோஷனல் காட்சிகளில் தடுமாறினாலும் ஆங்காங்கே ஸ்கோர் செய்கிறார். இன்னும் கலகலப்பாக கொண்டு போயிருக்கலாம். இயக்குநர் விடலையோ?

டயலாக்கையெல்லாம் சிவா பேசுவதால் தேமேவென வேடிக்கை பார்க்கும் ரோல் தான் ஃபகத் பாசிலுக்கு.ஆனால் சிவாவை விட சின்ன சின்ன ரியாக்‌ஷன்களில் ஹீரோவாக நிற்கிறார்.
இந்த படத்திற்கு எதற்கு நயன் தாரா என்று தெரியவில்லை. பாடல்களுக்கும் இரண்டு மூன்று காட்சிகளுக்கும் வந்து போகிறார்.

இவர்கள் தவிர ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள். சின்ன சின்ன ரோல்களில் கூட பெரிய நடிகர்களை பயன்படுத்தி இருப்பது ஓவர் டோஸாக மாறி விட்டது.

பிரகாஷ்ராஜுக்கும் சினேகாவுக்கும் பெரிய ரோல்கள். ஆனால் மனதில் ஒட்டவில்லை.
நாம பொருளை விக்கலை பொய்யை விக்கிறோம், இதுவரைக்கும் நல்லா வேலை செய்யணும்னு ஓடுனோம் இனிமே நல்லதை மட்டுமே வேலையா செய்வோம்னு ஓடுவோம் என்று கம்யூனிசத்தை தூக்கி பிடிக்கும் டயலாக்குகள் கைதட்ட வைக்கின்றன.

சிவகார்த்திகேயனை ஆக்‌ஷன் ஹீரோவாகி இருக்கிறார் என்றார்கள். ஆனால் படத்தில் சின்ன ஆக்‌ஷன் பிளாக் மட்டும்தான். மற்றபடி பேசியே கொல்கிறார்கள்.

அனிருத்தின் பாடல்கள் ஹிட் அடித்தன. ஆனால் படத்தில் வரும்போது ரசிக்க முடியவில்லை. ராம்ஜியின் ஒளிப்பதிவில் கார்ப்பரேட்டுக்கும் குப்பத்துக்கும் கலர் டோனிலேயே வித்தியாசம் காட்டியிருப்பது கண்ணுக்கு உறுத்தாமல் இருக்கிறது.

இன்னும் திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம். முக்கியமாக சிவாவுக்கும் ஃபகத்துக்குமான ப்ளேயில் எந்த இடத்திலும் தனி ஒருவனின் புத்திசாலித்தனம் இல்லை. இது போன்ற சப்ஜெக்ட்கள் போரடிக்க கூடியவை. எனவே திரைக்கதையிலேயே பக்காவாக எடிட் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து ஆறு மணி நேரம் படம் எடுத்து எடிட்டிங்கில் மாற்றினால் இப்படித்தான் ஆகும்.

நல்ல கருத்துள்ள படம் தான். சிவகார்த்திகேயன் என்ற ஒற்றை மனிதனுக்காக வெகுஜன மக்களை கவர்வானா இந்த வேலைக்காரன் என்பது சந்தேகம் தான்.

வேலைக்காரன் சுவாரஸ்யமானவன் அல்ல ஆனால் நல்லவன்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!