தம்பி கிம், போர் வெடிச்சா முதல்ல நீ காலி! - ட்ரம்ப் எச்சரிக்கை - VanakamIndia

தம்பி கிம், போர் வெடிச்சா முதல்ல நீ காலி! – ட்ரம்ப் எச்சரிக்கைவாஷிங்டன்:
வட கொரியா போர் தொடுத்தால் அங்குள்ள இப்போதைய ஆட்சி அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

உலக நாடுகளின் எதிர்ப்பு, தொடர் பொருளாதார தடைகள் என எதையும் பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. அந்த நாடு அணுகுண்டுகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவி சோதித்து வருகிறது.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் அணுகுண்டு சோதனையில் ஈடுபட்டு வருகிற வடகொரியாவை தடுத்து நிறுத்த அமெரிக்கா கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், ஆசிய நாடுகளுக்கு நீண்டதொரு சுற்றுப்பயணம் செய்து, வடகொரியாவுக்கு எதிராக ஒருமித்த ஆதரவு திரட்டினார்.

இந்த நிலையில், வடகொரியாவில் இருந்து ஜப்பான் ரேடியோ சிக்னல்களை கண்டறிந்துள்ளதாகவும், அந்த நாடு மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் ஈடுபட தயார் ஆவதை அது குறிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.அது உண்மைதான் என்று நிரூபிக்கிற வகையில், நேற்று அதிகாலையில் வடகொரியா புதிதாக கண்டம் விட்டு கண்டம் பாயும் வல்லமை மிக்க ஏவுகணை ஒன்றை ஏவி சோதித்தது. இது 4 ஆயிரத்து 475 கி.மீ. உயரத்துக்கு செங்குத்தாக பாய்ந்து, 53 நிமிடங்களில் 960 கி.மீ. தொலைவுக்கு பறந்து, ஜப்பான் கடலில் விழுந்தது. இது ஒட்டுமொத்த அமெரிக்காவையும் தாக்குகிற வல்லமை படைத்தது என்கிறார்கள்.

வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் கடும் அதிருப்தி அடைந்த அமெரிக்கா, வடகொரியாவுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறுகையில், “வடகொரியாவுக்கு எண்ணெய் விநியோகம் செய்வதை துண்டிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவை கேட்டுக் கொண்டுள்ளார். அமெரிக்கா முரண்பாடுகளை விரும்பவில்லை எனினும் போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையாக அழிக்கப்படும். உலக நாடுகள் அனைத்தும், வடகொரியாவுடனான வர்த்தகம் மற்றும் தூதரக உறவுகளை துண்டித்து அந்நாட்டை தனிமைப்படுத்த வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!