காலத்தைக் கணித்த ரஜினிக்கு, காலம் நிச்சயம் கை கொடுக்கும்! - VanakamIndia

காலத்தைக் கணித்த ரஜினிக்கு, காலம் நிச்சயம் கை கொடுக்கும்!

எதற்கும் கால நேரம் முக்கியம் என்பார்கள், நேரம் பார்த்துத்தான் சில காரியங்களை செய்யமுடியும், ரஜினி அப்படி நேரம் பார்த்து வந்திருக்கின்றார்.

“அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்”
பருவத்தால் அன்றிப் பழா”

என்றார் அவ்வையார் அதில் அர்த்தமில்லாமல் இல்லை, வள்ளுவனும் பல இடங்களில் சொல்லியிருக்கின்றான்.

இன்று ரஜினிக்கு வயது 67 ஆயிற்று என்பவர்கள் ராமசந்திரன் எப்பொழுது கட்சி தொடங்கினார் என்பதை மறைகின்றார்கள், அவர் கட்சி தொடங்கிய பொழுதும் வயது 60க்கு மேல் ஆகியிருந்தது.

ஜெயாவின் வோட்டு வங்கியும் சில பலமும் உலகறிந்தது. அதனை முறியடிக்கும் விதமாக 1996லே ரஜினி குரல்கொடுத்ததும் அடுத்து வந்த திமுக மூப்பனார் உரசல்களும், மூப்பனார் ஜெயலலிதா பக்கமே திரும்ப ஓடியதும் பார்ப்பவருக்கே பெரும் எரிச்சல் என்றால் ரஜினிக்கு எப்படி இருந்திருக்கும்? இந்த சாக்கடை அரசியல் வேண்டாம் என அவர் அன்று ஓடியதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை

இன்று மாறிவிட்ட காலங்கள், ஜெயா இல்லை கலைஞரும் அரசியலில் இல்லை, மிகபெரும் குழப்பமும் வெற்றிடமும் ஏற்பட்டிருக்கும் நிலை. இன்று தன் தவத்தை கலைத்து அந்த நேரத்தில் களமிறங்குகின்றார் ரஜினி
இந்த இடத்தில் ஒரு விஷயம் கவனிக்கவேண்டும், தேர்தல் என்பது பெரும் செலவுபிடிக்கும் விஷயம். பல்லாயிரம் கோடிகள் வேண்டும், அதையும் மீறி மறைமுக சவால் வரும், விஜயகாந்தின் திருமண மண்டபம் அப்படித்தான் இடிக்கபட்டது.

இதை எல்லாம் தாண்டித்தான் தேர்தல் பக்கம் வரவேண்டும். ரஜினி உண்மையினை சொல்கின்றார்.இங்கு எல்லாமே கெட்டுத்தான் கிடக்கின்றது, சொல்லவேண்டிய நேரத்தில் சரியாக சொல்கின்றார் ரஜினி
அவர் தன் கருத்தை சொல்லிவிட்டார், இதோ அரசியலுக்கு வருகின்றேன் என அறிவித்தும் விட்டார், அவர் இனி என்ன செய்ய முடியும்? நிச்சயம் தன் சொத்துக்களை எல்லாம் தேர்தல் செலவுக்கு என கொடுக்க முடியாது, அது நியாயமும் அல்ல‌.

அவரை அரசியலுக்கு அழைத்தவர்கள், நீ வா தலைவா என பகீரத தவம் செய்தவர்களும் , இன்னும் ஏதாவது மாற்றம் வேண்டும் என எதிர்பார்ப்பவர்களும் என்ன செய்ய போகின்றார்கள் என்பதுதான் எதிர்பார்ப்பு. ரஜினிக்கு மட்டும்தான் பொறுப்பு உண்டா? மற்றவர்களுக்கு இல்லையா?

ரஜினியின் மிகபெரும் பலம் அவரின் ரசிகர்கள், அவர்களால்தான் ரஜினி எனும் தேர் அரசியல் தெருவில் ஊர்வலம் வரபோகின்றது, அவர்களுக்கு இன்றுமுதல் பொறுப்பு அதிகம். ரஜினி தன் ரசிகர்களை நம்புகின்றார், ரசிகர்கள் அதற்கேற்ற உழைப்பை கொடுத்தாலன்றி உண்மையான ரசிகர்களாக இருக்க முடியாது.

ரஜினி வந்துவிட்டார் என்பதால் இனி விமர்சிக்க பலர் கிளம்புவார்கள், பலர் அதிரடியாக கேள்வி எல்லாம் கேட்பார்கள் எல்லாவற்றில் இருந்தும் ரஜினி சார்பாக கருத்தாக பேசி பதிலளிக்கும் கட்டுப்பாடு அவர் ரசிகர்களுக்கே இருக்கின்றது. நிச்சயம் பாருங்கள் பெரும் ஆதரவு ரஜினிக்கு திரை உலகில் இருந்து கிடைக்காது, அது அப்படித்தான். ஆனால் அரசியலால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் போன்றோர் ஆதரித்தால் நல்லது.

என்னை அரசியலுக்கு அழைத்தீர்களே! இதோ வந்துட்டேன் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். அதனை வைத்து இங்கு மாற்றம் கொண்டுவரவேண்டியது உங்கள் பொறுப்பு என வந்திருக்கின்றார் ரஜினி.
இனி என்னாகும் என்பது காலத்தின் கையில் இருக்கின்றது. ஒரு விஷயத்தில் ரஜினியின் அரசியல் வருகையினை இப்படி வரவேற்க வேண்டி இருக்கின்றது.

இன வெறுப்பு, மொழி வெறுப்பு, அண்டை நாட்டு தீவிரவாத ஆதரவு, மத வெறுப்பு, மத்திய அரசு எதிர்ப்பு, பிரிவினைவாதம், சாதி வெறி இவற்றை எல்லாம் கடந்து ஒரு கட்சி உருவாகிவருவதில் இந்தியனாக, தமிழனாக வரவேற்கத்தான் வேண்டியது இருக்கின்றது. ரஜினியின் அறிவிப்பு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருப்பது உண்மை. அந்த அதிர்வு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது ரஜினி ரசிகர்களின் கையிலும் அதனை அடுத்து காலத்தின் கையிலும் இருக்கின்றது.

இந்நாட்டில் யாரும் வரலாம் கட்சி தொடங்கலாம், மக்கள் ஆதரிப்பதை பொறுத்து இருக்கின்றது விஷயம். ரஜினி அப்படி வந்திருக்கின்றார். வரவேற்கலாம். ரஜினி நிச்சயம் குழப்பவாதி அல்ல, அவர் காலத்திற்காக காத்திருக்கின்றார். தெளிவான திட்டத்தோடு இருந்திருக்கின்றார், இதோ வந்துவிட்டார்.

காலத்தைக் கணித்த‌ ரஜினிக்கு காலம் நிச்சயம் கைகொடுக்கும்!

வாழ்த்துக்கள் ரஜினி சார்!

– ஸ்டான்லி ராஜன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!