இது பண ஒழிப்பு அல்ல... பணக் கொள்ளை! - VanakamIndia

இது பண ஒழிப்பு அல்ல… பணக் கொள்ளை!

garland2000

ண ஒழிப்பு என்ற பெயரில் மக்கள் பணத்தை மொத்தமாகக் கொள்ளையடித்து வங்கிகளில் பதுக்கி வருகிறார்கள். திரும்பத் தர வம்படியாக மறுக்கிறார்கள். அந்தக் கொள்ளைக்கு தேச பக்தி வேடம் போட்டு மழுப்பிக் கொண்டிருக்கிறது மோடி கோஷ்டி.

பணவியல் பொருளாதாரத்தின் அத்தனை விதிகளுக்கும் முரணான ஒன்றைச் செய்துவிட்டு, அதனால் ஏற்படும் மோசமான பாதிப்புகளை மறைக்க, உணர்ச்சி வசப்பட்டு முழங்கி வருகிறார் மோடி. டிசம்பர் 30-க்குள்ளேயே நாட்டின் பொருளாதாரம் மிக ஆபத்தான பின்னடைவைச் சந்திக்கப் போவதுதான் நிஜம் என்பது வல்லுநர்களின் கணிப்பு!

பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற அல்லது குறைந்தபட்சம் பொருளாதாரம் அறிந்த யாரையாவது உடன் வைத்துக் கொண்டு இந்தத் திட்டத்தை ஆலோசித்திருந்தால், பண ஒழிப்பின் பின் விளைவுகளை எடுத்துரைத்திருப்பர். இடித்துச் சொல்லி இருப்பார்கள். ஆனால் துதி பாடிகளையும், கறுப்புப் பண முதலைகளையும் தனது நெருக்கமான வட்டத்தில் வைத்துக் கொண்டு ‘ஆலோசித்து’ இந்த வேலையைச் செய்திருக்கிறார் மோடி என்ற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை.

சாமானியனுக்கு ஒரு நாளைக்கு இரண்டு 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கொடுக்க உத்தரவிட்ட காலத்தில், பெரும் பணக்காரர்கள் வீடுகளில் 2000 ரூபாய் நோட்டுக் கட்டுகள் குவிந்தது எப்படி? என்ற ஒரு கேள்விக்கே மோடி கோஷ்டிகளால் பதில் சொல்ல முடியாது.

1978-ல் பண ஒழிப்பு நடந்தபோது, 1000, 5000 நோட்டுகளை பணக்காரர்கள் அதாவது 0.6 சதவீதம் பேரே வைத்திருந்தனர். அவர்களுக்கு வேறு வழியில்லை. அதை சரண்டர் பண்ணியாகனும் அல்லது எரிக்கணும்.

ஆனால் இன்று 1000, 500 ரூபாய்த் தாள்களை பிச்சைக்காரன் கூட சேர்த்து வைத்திருக்கிறான். எழுபதுகளோடு ஒப்பிடுகையில் பணத்தின் மதிப்பு இன்றைக்கு 12 மடங்குக் குறைந்துவிட்டது. இப்போது 86 சதவீதம் புழக்கத்தில் இருந்த பணத் தாள்கள் 500, 1000 தான். இவற்றை ஒழிக்கும் முன் அதற்கான மாற்று ஏற்பாடுகள் எந்த அளவு முக்கியம்? ஒழிக்கப்பட வேண்டிய பணத்தாளுக்கு நிகரான மாற்று நோட்டுகள் வங்கிகளில் இருப்பு வைத்திருக்க வேண்டுமல்லவா?

இப்போது நடப்பது என்ன?

எல்லோரும் உங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில் செலுத்துங்கள்.

செலுத்தியாச்சு.

ஆனா, ஒரு நாளைக்கு ரூ 4000 மட்டும்தான் திரும்ப எடுக்க முடியும். இப்போது அதுவும் இல்லை. 2000தான். மை வச்ச பிறகு மீண்டும் எடுக்க முடியாது. டிசம்பர் 30- வரை இதுதான் நிலை. அதன் பிறகு? இன்னும் யோசிக்கவில்லை.

இன்னொரு பக்கம்.. ஆண்டுக் கணக்கில் தன் சம்பாத்தியத்திலிருந்து சிறுகச் சிறுக சேமித்த 500, 1000 தாள்களை லட்சங்களில் வங்கியில் போட்டால், உடனே அதற்கு கணக்குக் காட்ட வேண்டும். ஏற்கெனவே கணக்குக் காட்டி, வரி போக வந்த வருவாயில் சேமித்த பணம் அது. அதற்கு மீண்டும் கணக்குக் கேட்டால் என்னவென்று காட்டுவது? சேமிப்புகள்தான் இந்தியப் பொருளாதாரத்தின் அஸ்திவாரம். அதை ஒரேயடியாகத் தகர்த்துவிட்டது இந்த துக்ளக் தர்பார்.

ques

இதுவரை 5 லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கு வந்துவிட்டதாகப் பீற்றிக் கொள்கிறார் மோடி. இதெல்லாம் கள்ள, கருப்புப் பணமா மிஸ்டர் மோடி? எல்லாம் மக்கள் பணம். கஷ்டப்பட்டுச் சம்பாதித்து சேர்த்த சேமிப்புப் பணம்.
 
கறுப்புப் பணம் நவம்பர் 8-ம் தேதிக்கு முன்பே பெருமளவு 2000 நோட்டுகளாக மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள். இன்னும் மீதி வங்கிக்கே வரவில்லை அல்லது வேறு நாடுகளில் வேறு வடிவங்களில் பாதுகாப்பாக உள்ளன. இதெல்லாம் தெரிந்தும், முட்டாள்தனமாக உளறிக் கொண்டிருக்கிறார்கள் மோடியும் அவரது ஜால்ராக்களும்.
மக்களின் பணத்தை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி வங்கிகளில் இருப்பு வைக்கிறார்கள். அந்த இருப்பை பெரும் முதலாளிகளுக்கு கோடிக் கணக்கில் கடன்களாக வாரி வழங்குகிறார்கள் அல்லது வேறு வேலைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். இதில் மக்களுக்கு என்ன பலன்… தன் பணத்தை வங்கியில் போட்டுவிட்டு எடுக்காமல் சும்மா பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்!

எத்தனைப் பெரிய கொள்ளைத் திட்டம் இது!

 

-முதன்மை ஆசிரியர்

வணக்கம் இந்தியா

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!