அமெரிக்கா ஃப்ளாக் ஃப்ரைடே; 2 நாளில் 5 பில்லியன் டாலர்களுக்கு ஆன்லைன் விற்பனை! - VanakamIndia

அமெரிக்கா ஃப்ளாக் ஃப்ரைடே; 2 நாளில் 5 பில்லியன் டாலர்களுக்கு ஆன்லைன் விற்பனை!

வாஷிங்டன்(யு.எஸ்) அமெரிக்காவின் வர்த்தகத் திருவிழா நாளான ப்ளாக் ஃப்ரைடேவை முன்னிட்டு ஆன்லைன் சில்லறை வணிகம் 5 பில்லியன் டாலர்கள் நடந்துள்ளது. கடந்த ஆண்டு ஆன்லைன் விற்பனையை விட 15.6 சதவீதம் அதிகமாகும்.

வியாழக் கிழமை தேங்க்ஸ் கிவிங் நாளன்று அமெரிக்காவில் அரசு விடுமுறை நாள். வெள்ளிக்கிழமை ப்ளாக் ஃப்ரைடே என அனுசரிக்கப்பட்டு தள்ளுபடி விற்பனைகள் நடப்பது வழக்கம்.

வியாழன் நள்ளிரவே கடைகள் திறக்கப்படும். பகல் முழுவதும் காத்திருந்து, அடிச்சி பிடிச்சி வாங்கிச் செல்வார்கள்.வரிசையில் கொஞ்சம் பின்னால் இருந்தாலும் வேண்டிய பொருள் கிடைக்காது. கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் விற்பனைகள் பெருகிவிட்டது. அதிக தள்ளுபடியும் கிடைப்பதால், கடைகளுக்குச் செல்லும் கூட்டம் குறைய ஆரம்பித்தது.

மக்களை கடைகளுக்கு கவர, மாலை 5 மணிக்கெல்லாம் திறக்க ஆரம்பித்தனர்.வியாழக்கிழமை கடைக்குச் செல்வது பெரிய ஷாப்பிங் அனுபவம். குடும்பத்தோடு போய் வாங்கி வருவது பெரிய அட்வெஞ்சர்.

இந்த ஆண்டு 4K டிவிக்களுக்கு அதிக தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. பெஸ்ட் பை, ஃப்ரைஸ் உள்ளிட்ட கடைகளில் டிவி வாங்க கடும் கூட்டம். வால்மார்ட்டிலும் டிவிக்கு நல்ல கூட்டம் இருந்தது. டெல், ஹெச்பி போன்ற நிறுவனங்கள் லேப்டாப் களுக்கு வழக்கம் போல் தள்ளுபடி தந்தார்கள்.
டி மொபைல் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினால் இன்னொரு போன் இலவசம் என்று வாடிக்கையாளர்களை கவர்ந்தார்கள்.

துணிக்கடைகளைப் பொறுத்தவரையில் மேசிஸ், ஜேசி பென்னி, கோல்ஸ் கடைகளில் வழக்கமான கூட்டம் காணப்பட்டது. மேன்ஹாட்டன் மேசிஸ் கடை திறப்பதற்கு முன்னால் 16 ஆயிரம் பேர் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார்கள். மேசிஸ் கடைகளில் க்ரெடிட் கார்ட் ப்ராசசிங் நேரம் ஆனதால் சலசலப்பு ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை சரி செய்யப்பட்டதாக கூறினார்கள்.

விக்டோரியா சீக்ரெட் உள்ளாடை துணிகளுக்கு கூடுதல் தள்ளுபடி. அங்கு விற்பனையாக அனைத்து ஸ்டைலிஷ் ப்ராக்களும் தலா 35 டாலருக்கும் குறைவாக விற்கப்பட்டது. இரண்டு பர்ஃப்யூம்கள் 25 டாலருக்கு கிடைத்தது.

அமேசானின் ஆன்லைன் விற்பனை இந்த ஆண்டும் கொடிகட்டிப் பறந்தது. டாய்ஸ்ஆர்எஸ், ரூ21, பேலெஸ்ஷூஸ்டோர், ட்ரூரிலிஜன் ஆகிய சில்லறை வணிக நிறுவனங்கள் திவால் நோட்டீஸ் வழங்கியதற்கு அமேசான் ஆன்லைன் விற்பனை முக்கிய காரணமாகும். ஆனால், அமேசான் ஹோல்ஃபுட்ஸ் என்ற சில்லறை வணிக நிறுவனத்தை வாங்கி வால்மார்ட், டார்கெட், க்ரோகர் கடைகளுக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளது.

ப்ளாக் ஃப்ரைடே முடிந்துள்ள நிலையில் ’சைபர் மண்டே’ வுக்கு வாடிக்கையாளர்கள் காத்து இருக்கிறார்கள். அமெரிக்காவின் 40 சதவீத சில்லறை வணிகம் ப்ளாக் ஃப்ரைடே முதல் கிறிஸ்துமஸ் வரையிலான காலக் கட்டத்தில் தான் என்பது குறிப்பிடத் தக்கது.

– வணக்கம் இந்தியா ஸ்பெஷல்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!