தேங்க்ஸ் கிவ்விங் ன்னா என்ன?.. ஒரு அப்பா சொல்லும் விளக்கம்! - VanakamIndia

தேங்க்ஸ் கிவ்விங் ன்னா என்ன?.. ஒரு அப்பா சொல்லும் விளக்கம்!

“அப்பா இன்னக்கி தேங்க்ஸ் கிவ்விங். எனக்கு ஆர்ட் செட், கிட்சேன் செட் , மேக்கப் செட், ரோபோடிக் கார், ஸ்கேட்டிங் போர்டு,ப்ளே ஸ்டேஷன் எல்லாம் நல்ல டீல் பார்த்து வாங்குங்க” என்று கூறினாள் மகள் நிவேதா

அப்படியே ஒரு ரேகிளினீர் சோபா , 55” இன்ச் டிவி எல்லாம் பாருங்க என்றாள் மனைவி.

” நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொன்னா , எல்லாம் வாங்கி தரேன்”, என்றார் தந்தை.

“என்ன கேள்வி?” என்று ஆர்வமானாள் நிவேதா!

தேங்க்ஸ் கிவ்விங் எதுக்காக கொண்டாடுறோம் ?

“நம்ம ஊர் ஆடிக்கழிவு மாதிரி தாங்க. கொஞ்சம் விலையை கம்மி பண்ணி, நிறைய பொருட்களை விக்கறது தான்… ” என்றாள் மனைவி.

அப்பா, தேங்க்ஸ் கிவ்விங் பின்னாடி கதை இருக்கா? சொல்லுங்களேன் ப்ளீஸ்..

சொல்றேன் கேளுங்க என்று கூற ஆரம்பித்தார்.

நாம் தேங்க்ஸ் கிவ்விங் என்றால், வார விடுமுறை, குடும்பம் ஒன்று கூடுதல், விருந்து உண்ணுதல் , கடையில் பொருட்கள் வாங்குதல் என எண்ணுகிறோம் . ஆனால், முதல் தேங்க்ஸ் கிவ்விங் அவ்வாறு அமையவில்லை.

ஓ!! அப்படியா ??? முதல் தேங்க்ஸ் கிவ்விங் எப்ப அப்பா??

சொல்றேன் கேளு..

May Flower என்னும் கப்பல் Plymouth Rock என்னும் இடத்திற்கு டிசம்பர் 11, 1620 ஆம் ஆண்டு வந்தடைந்ததை தொடர்ந்து, 102 யாத்ரீகர்களில் 46 யாத்ரீகர்கள் இறந்து விட்டார்கள் . அங்கிருந்த பூர்வீக மக்களின் துணையோடு மீதமுள்ள மக்கள் கடுங் குளிரிலிருந்து உயிர் பிழைத்தார்கள்

அபரிதமான அறுவடையும் செய்தார்கள். யாத்ரீகர்களையும், பூர்வீக மக்களையும் இணைக்கும் பாலமாகவே தேங்க்ஸ் கிவ்விங் கடை பிடிக்கப்பட்டது.

ஆனால் விருந்து உண்ணும் பழக்கம் ஜூன் 1676 ஆம் ஆண்டு வரை வழக்கத்தில் இல்லை .

அந்த வருடம் ஜூன் 29 அன்று, சார்லஸ்டவுன் சமூகத்தின் மாசசூசெட்ஸ் அவர்களின் நல்ல அதிர்ஷ்டத்திற்கான நாளாக “தேங்க்ஸ் கிவ்விங் “அறிவிக்கப்பட்டது. விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. துரதிர்ஷ்டமாக இந்த விருந்துக்கு பூர்வீகக்குடிமக்கள் அழைக்கப்படவில்லை.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, சரட்டோகாவில் பிரிட்டிஷ் மீதான வெற்றிக்காக 1777 அக்டோபரில், 13 யாத்ரீகர்கள், ஒரே நேரத்தில் “தேங்க்ஸ் கிவ்விங்” கொண்டாட்டத்தில் பங்கெடுத்தனர்.

ஜார்ஜ் வாஷிங்டன் 1789 ஆம் ஆண்டில் தேங்க்ஸ் கிவ்விங் தினத்தை தேசிய விடுமுறையாக அறிவித்தார். 1863 ல் ஆப்ரகாம் லிங்கன் நவம்பர் மாதம் நான்காம் வியாழக்கிழமை யை “தேங்க்ஸ் கிவ்விங்” நாளாக அறிவித்தார். காங்கிரஸ் 1941 ல் சட்டப்பூர்வ விடுமுறை என்று ஒப்புக்கொண்டது.

வருடங்கள் செல்ல செல்ல , தேங்க்ஸ் கிவ்விங் உயிர்வாழ்வதற்கு நன்றி செலுத்தும் விதமாகவும் , வெற்றியை பகிர்தல்,தேசிய பாரம்பரியம், அன்பை பரிமாறிக் கொள்ளும் விதமாக கொண்டாடப் படுகிறது.

ஓ !!! கிஃப்ட் குடுக்கத் தான் இவ்வளவு வியாபாரம் நடக்குதா?? என்று ஆச்சர்யப்பட்டாள் நிவேதா.

சரி அப்பா, நான் சொன்னதெல்லாம் ரெண்டா வாங்கிருங்க.. என்னக்கு ஒன்னு, இன்னொன்றை என் தோழி டெபிக்கு கிஃப்ட் பண்ணிடுறேன்

கதை சொன்ன களைப்பை , நிவேதா கொடுத்த அதிர்ச்சி விரட்டியது.

ஆன்லைன் டீல்ஸ் பார்க்க தொடங்கினார் அப்பா.

– அகிலா கண்ணன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!