பாசனக் குளங்களை நிரப்பாமல் கடலுக்கு போன தாமிரபரணி.. பொதுப்பணித்துறைக்கு கலெக்டர் கண்டனம்! - VanakamIndia

பாசனக் குளங்களை நிரப்பாமல் கடலுக்கு போன தாமிரபரணி.. பொதுப்பணித்துறைக்கு கலெக்டர் கண்டனம்!

தூத்துக்குடி: சில வாரங்களுக்கு முன்பாக, தாமிரபரணி வடக்குக்காலில் தண்ணீர் தரவில்லை என்று தூத்துக்குடி விவசாயிகள் சாலை மறியல் செய்தனர். அதிகாரிகள் செவி சாய்க்காத நிலையில், காட்டாற்று மழை வெள்ளம் கோரம்பள்ளம் மற்றும் பெட்டைக்குளத்திற்கு வந்தது. ஆனாலும் இரு குளங்களும் முழுமையாக நிறையவில்லை.

இந்நிலையில்,பெரு மழையால் தாமிரபரணியிலும் வெள்ளம் கரைபுரண்டோடியது. அதில் ஒரளவுக்காவது வடகாலில் திருப்பி விட்டிருந்தாலும், மேலே சொன்ன இரு குளங்களும் முழுமையாக நிரம்பியிருக்கும். நெல் விவசாயத்தின் முதல்கட்ட பணிகளுக்கு முழுமையாக நீர் கிடைத்திருக்கும்.

தாமிரபரணி நீரை கோரம்பள்ளம், பெட்டைக்குளத்திற்கு திருப்பாமல் வீணாக கடலுக்கு அனுப்பிய அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலுக்கு, காந்திய சேவா மன்ற நிறுவனர் என்.வி. ராஜேந்திரபூபதி கண்டனம் தெரிவித்து இருந்தார்.

ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து 16 ஆயிரம் கன அடி நீரை கடலுக்கு அனுப்பாமல், வடகாலின் கடைசி இரு குளங்களை நிரைத்து இருக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

விவரம் அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் என்.வெங்கடேஷ் , பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். தாமிரபரணி தண்ணீர் வீணாக்கப்படாமல் விவசாயிகளுக்கு முழுமையாக பயன்படும்படி செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

அதிகாரிகளின் அலட்சியத்தால், மழைத் தண்ணீரும் விவசாயிகளின் பாசனத்திற்கு கிடைக்காமல் இருப்பது மிகப்பெரிய அவலமாகும்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!