Tamilisai Questions media's stand in Rajini politics

மற்ற கட்சிகளைப் பார்த்து இப்படித்தான் கேட்கிறீர்களா? – கொதித்த தமிழிசை


திருவாரூர்: ஏதாவது ஒரு சின்ன நகர்வு வந்தவுடன் தொடர்ந்து யூக அடிப்படையில் கேள்விகள் கேட்கின்றனர் மீடியாவினர். மற்ற கட்சிகளிடம் இப்படித்தான் கேட்கிறீர்களா? என்று கேட்டுள்ளார் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

பாபா முத்திரையில் இருந்து தாமரை சின்னம் நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் பாஜக இருப்பதாக மீடியாவும் சில கட்சிகளும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் பாபா முத்திரையில் இருந்து தாமரை நீக்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கைக்கான இணையதளத்தில் பாபா முத்திரை மற்றும் பாம்பு மட்டுமே இடம்பெற்றிருந்தது.

இது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் இது குறித்து திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:

சகோதரர் ரஜினி ஊழலற்ற நிர்வாகத்தை கொண்டு வருவதற்காக அரசியலுக்கு வருகிறேன் என்றார். இதனால் நாங்கள் அவரை வரவேற்றோம். உடனே அவருடன் கூட்டணி வைப்பீர்களா, கூட்டணி பிரச்சாரமா, பாஜக பின்னால் இருந்து இயக்குகிறது, பாஜக மறைமுக கூட்டணி வைத்திருக்கிறது என்றெல்லாம் பேசப்படுகிறது. ரஜினி பாஜக உறவு குறித்து உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என்றெல்லாம் கேட்கிறார்கள்.

இதெல்லாம் என்னவென்றே புரியவில்லை, மற்ற கட்சிகளைப் பார்த்து இப்படித் தான் கேள்விகள் எழுப்பப்படுகின்றனவா. அவரவர்களின் செயல்பாடுகளை எல்லாம் விட்டுவிட்டு, ரஜினியிடம் ஒரு சின்ன நகர்வு வந்தவுடன் தொடர்ந்து யூக அடிப்படையில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பாஜகவை பொருத்தவரை நேர்மையான நேர்மறை அரசியலை நாங்கள் முன் நிறுத்த வேண்டும் என நினைக்கிறோம். தாமரை சின்னம் ரஜினியின் முத்திரையில் இருந்தது அதைக் காணவில்லை என்று இப்போது புதிதாக ஒன்றை கிளப்புகிறார்கள். அவர் என்ன முத்திரை கொடுக்க வேண்டுமோ அதை கொடுப்பார். அப்படி ஒன்றும் தாமரை அவமானப்படுத்தக் கூடிய சின்னம் கிடையாது. அவரவர்களுக்கு விருப்பம் குழப்பம் வந்துவிடக் கூடாது என்று கூட அவர் அப்படி செய்திருக்கலாம்,” என்றார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!