கல்வி உரிமையை பறிக்கும் மாந்தரை வெல்லடா.. அமெரிக்கத் தமிழரின் எழுச்சிப் பாடல்! - VanakamIndia

கல்வி உரிமையை பறிக்கும் மாந்தரை வெல்லடா.. அமெரிக்கத் தமிழரின் எழுச்சிப் பாடல்!

தமிழா எழுடா..

வாஷிங்டனில் நடைபெற்ற உலகத் தமிழ் அமைப்பின் ‘கல்வி உரிமை மாநாட்டில்’ அரங்கேற்றப்பட்ட தமிழர் எழுச்சிப் பாடல்

வாஷிங்டன்: உலக தமிழ் அமைப்பு சார்பில் நடைபெற்ற கல்வி உரிமை மாநாட்டில், பாபு விநாயகம் குழுவினர் பாடிய எழுச்சிப் பாடல், அமெரிக்கத் தமிழர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி உள்ளது.

சனிக்கிழமை, டிசம்பர் 16ம் தேதி நடைபெற்ற இந்த கல்வி உரிமை மாநாட்டில், இந்தியாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களும், நிபுணர்களும் பங்கேற்றனர். ஒரு நாள் மாநாடாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்வி உரிமைக்கான பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டின் இடையே 2 நிமிட பாடல் ஒன்றும் அரங்கேற்றப்பட்டது. எட்டே வரிகள் கொண்ட அந்தப் பாடல் இதோ..

“தமிழா எழுடா தலை நிமிர்ந்து நில்லடா!
கல்வி உரிமையைப் பறிக்கும் மாந்தரை நீ வெல்லடா

நம் இனத்தான் மீனவன் வாழ்வாதாரத்தைக் காத்திடு!
நீர் நிலவளம் எம்முடைமை என்று பறை சாற்றிடு!!

உலகத்தமிழர் ஒற்றுமையை நிலைநிறுத்திக் காட்டிடு
ஈழத்தமிழர் நம் உறவு என்பதையும் உணர்த்திடு

சாதிமதம் சொல்லி நம்மைப் பிரித்த சூழ்ச்சி அறிந்திடு
தமிழனத்தின் மாண்புணர்ந்து வையகத்தை வென்றிடு

தமிழா எழுடா
தமிழா எழுடா தலைநிமிர்ந்து நில்லடா!”

இந்தப் பாடலை பாபு விநாயகம் எழுதி இசையமைத்துப் பாடினார். உடன், சதீஷ் வைத்தியநாதன், பீட்டர் அமல்ராஜ், அஷ்வின் பாபு விநாயகம் ஆகியோர் இணைந்து பாடினார்கள்.

அந்தாளக்குறிச்சி பண்ணில், சாமா ராகத்தில், ஏகம் தாளத்தில் இயற்றியதாக பாபு விநாயகம் கூறினார். இசைக்கோர்ப்புடன் வெளியிடும் முயற்சியிலும் உள்ளார்கள். அவர் திருநெல்வேலி ஆல் இந்தியா ரேடியோவில் பண்ணிசைக் கலைஞராக பணியாற்றிவர். தற்போது வாஷிங்டன் வட்டாரத்தில் வசித்து வரும் பாபு விநாயகம், அங்கு இசைப்பள்ளியும் நடத்தி வருகிறார்.

கலந்துரையாடல், கருத்தரங்கம், ஆதரவுப் போராட்டம் என தமிழர் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் அமெரிக்கத் தமிழர்கள், அடுத்ததாக பாடல் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

– வணக்கம் இந்தியா செய்திகள்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!