என்னது... ’லண்டன்’ ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு பணமா... தப்புத் தப்பாய் செய்தி வெளியிடும் தமிழக அரசு செய்தித் துறை! - VanakamIndia

என்னது… ’லண்டன்’ ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு பணமா… தப்புத் தப்பாய் செய்தி வெளியிடும் தமிழக அரசு செய்தித் துறை!

சென்னை : லண்டன் ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். சுந்தரம், ஒரு மாத சம்பளமான 1 லட்சத்து எட்டாயிரம் ரூபாயை வழங்கியதாகவும், அதற்கான ஒப்புகைச் சீட்டினை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் கொடுத்ததாகவும் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லண்டனில் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கையா? இது என்ன புதுக்கதையா இருக்கு?. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அமெரிக்காவில் பாஸ்டன் நகரத்தில் தானே இருக்கு. சுந்தரம் எம்.பி ரசீதை எல்லாம் வேறு முதல்வரிடம் கொடுத்துருக்காரே? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தது.

எம்.பி சுந்தரம். வேறு யாரிடமாவது பணத்தைக் கொடுத்து ஏமாந்து விட்டாரா? அல்லது செய்தித் துறையின் குளறுபடியா? என்றும் எண்ணத் தோன்றியது.

தமிழக அரசின் செய்தித்துறையும் ” லண்டனில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை” என்றே குறிப்பிட்டுள்ளார்கள். அதை அப்படியே அச்சு அசலாக, பத்திரிக்கையும் படத்துடன் வெளியிட்டுள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக் கழகம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மட்டுமே இருக்கிறதல்லவா!. அங்கு தானே தமிழ் இருக்கை அமைப்பதற்கு 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது. டாக்டர் ஜானகி ராமனும் டாக்டர் சம்மந்தனும் தலா 500 ஆயிரம் நன்கொடை கொடுத்து, மேலும் நன்கொடைகள் பெறுவதற்கு சுமார் மூன்று ஆண்டுகளாக தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள் அல்லவா!.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சுமார் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அரசு சார்பில் வழங்கப்படும் என்று அறிவித்தார். மீதித் தொகைக்கும் அரசு சார்பில் முயற்சிகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் கூறியிருந்தார்.

நடிகர்கள் சூர்யா, விஷால், ஜிவி.பிரகாஷ் உள்ளிட்டவர்களும் சில நிறுவனங்களும் தங்கள் பங்களிப்பாக நன்கொடை வழங்குவதாகவும் அறிவித்து இருந்தார்கள்.

இந்நிலையில் சுந்தரம் எம்பி 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக ரசீதை முதல்வரிடம் கொடுத்துள்ளார். அவர் கொடுத்தது அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக் கழக தமிழ் இருக்கைக்காக என்றே நம்பலாம்!.

ஆனாலும் செய்தித்துறையே இத்தகைய தவறான தகவலை வெளியிட்டுள்ளது வருத்தத்திற்குரியது. மேலும் அறிவித்தவர்கள் எல்லோரும் பணத்தை ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு செலுத்தினார்களா? அல்லது வெறும் விளம்பரமா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

ஹார்வர்ட் தமிழ் இருக்கை நிர்வாகிகள் தான், சுந்தரம் எம்பி உட்பட ஏற்கனவே நன்கொடை தருவதாக அறிவித்தவர்கள் பணத்தை வழங்கினார்களா என்று அறிக்கை மூலம் தெளிவு படுத்த வேண்டும். இல்லாவிட்டால், தமிழ் இருக்கை பெயரில் வெற்று விளம்பரம் தேடுவதற்கு வழி ஏற்பட்டு விடும்.

– வணக்கம் இந்தியா செய்திகள்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!