Spiritual not Religious says Rajini

மதம் அல்ல… ஆன்மீகம்! – அழுத்தம் திருத்தமாக சொன்ன ரஜினி!

சென்னை: ரசிகர்களை நான்காவது நாளாக சந்திக்கும் ரஜினி, கோவை மாவட்டத்திற்கும் அவருக்கும் உள்ள தொடர்புகளை நினைவு கூர்ந்தார்.

அண்ணாமலை படம் வெளியான நேரத்தில் கோவை விமான நிலையத்தில், சிவாஜியுடன் சென்றிருந்த ரஜினிக்கு, ரசிகர்களின் அமோக வரவேற்பு கூச்சமாக இருந்ததாம். மாபெரும் நடிகரான சிவாஜிக்கு முன்னால் தனக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை ஏற்றுக்கொள்ளாமல் நழுவினாராம்.

அப்போது சிவாஜியே, ரஜினியின் கையைப் பிடித்து எங்கே போகிறாய். வா.. வந்து ரசிகர்களின் உற்சாகத்தை ஏற்றுக்கொள், கையைக் காட்டி அவர்களின் அன்பைப் பெற்றுக் கொள். என்னுடைய காலம் முடிந்து விட்டது. இப்போ இது உன் காலம். நல்ல படங்களைக் கொடு. ரசிகர்களுக்கு நல்ல வழிகாட்டு என்று சொன்னாராம்.

இன்னொரு சமயம், ரஜினி சென்ற போது, வேறு ஒரு நடிகர் வருகிறார், அவர் வந்த பிறகு நீங்கள் வெளியே போங்கள் என்று சொன்னார்களாம். சிவாஜி அன்று சொன்னது ரஜினிக்கு நினைவுக்கு வந்ததாம்.

சினிமாவிலும், அரசியலிலும் புதியவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். நல்ல குணாதியசத்துடன் இருப்பவர்கள் பொன்மனச் செம்மல், மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் போல் புகழுடன் நிலைத்து இருப்பார்கள் என்று ரஜினி சொன்னார். தன்னுடைய அடுத்த இலக்கு அரசியல் தான் என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டியதாகத் தான் தெரிந்தது.

ரஜினியின் குரு சச்சிதானந்த சுவாமிகளைப் பற்றி கூறுகையில், அமெரிக்கா சென்று ஆன்மீகத்தை பரப்ப அவருடைய குருநாதர் கட்டளை இட்டதால், அங்கு சென்று மிகப்பெரிய ஆசிரமத்தை உருவாக்கியுள்ளார் என்றார். அப்போது ‘‘ஆன்மீகத்தை”, “மதத்தை அல்ல” என்று மறுபடியும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

தான் ஆன்மீகவாதி, மதவாதி அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை சூசகமாகச் சொல்லியுள்ளார் ரஜினி. ஏற்கனவே பாஜகவுக்கும் திமுகவுக்கும் ரகசிய கூட்டு என்று கூறப்பட்டு வரும் வேளையில், தான் ஆன்மீகவாதி, மதவாதி அல்ல என்று குறிப்பிடும் ரஜினியின் அரசியல் நிலைப்பாடும் தெளிவாகியுள்ளது. பாஜகவுடன் அவர் கூட்டு சேர வாய்ப்பே இல்லை என்பதும் புலனாகிறது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!