(அ)நீதிமன்றங்கள்! - VanakamIndia

(அ)நீதிமன்றங்கள்!

க்களுக்கு விரோதமான அரசுகளின் உத்தரவுகள், திணிப்புகளை முதலில் எதிர்ப்பது போல எதிர்த்துவிட்டு, கடைசியில் அரசுகளுக்கு சாதகமாகவே நீதிமன்றத் தீர்ப்புகள் வருவது, ஆதாரிலிருந்து நீட் வரை தொடர்கிறது. குறிப்பாக தமிழகம் சார்ந்த வழக்குகளில்.

ஒரு தீர்ப்புக்கும் மற்றொரு தீர்ப்புக்கும் அத்தனை முரண்பாடுகள். மது விலக்கு விஷயத்தில் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று சொல்லும் நீதிமன்றங்கள், தமிழக மாணவர்களின் நீட் விஷயத்தில் மட்டும் பிடிவாதமாகத் தலையிடுகின்றன. ‘நீட்டுக்கு எதிராகப் போராட்டமே நடக்காமல் பார்த்துக் கொள்’ என மாநில அரசுக்கே உத்தரவிடும் அளவுக்கு பிடிவாதம் தொடர்கிறது.

‘நேற்று வரை வக்கீல் என்ற பெயரில் பொய்யைச் சொல்லிக் கொண்டிருந்த ஒருவர், இன்று நீதிபதி நாற்காலியில் அமர்ந்ததும் கடவுளாகிவிடுவாரா?’ என்ற கரு பழனியப்பன் கேள்வி எத்தனை நியாயமானது!

‘நாட்டுக்கே தலைமை நீதிபதி என ஒருவர் இருந்தாலும், அவருக்கும் மேல் ஒரு ‘சூப்பர் தலைமை நீதிபதி’ இருக்கிறார் போலும்’ என எண்ணத்தையே உருவாக்குகின்றன, ஆதார், மதுவிலக்கு, ஜல்லிக்கட்டு, தாமிரபரணி, ட்ரைவிங் லைசென்ஸ், நீட், காவிரி வழக்குகளின் போது நீதிபதிகள் உதிர்த்த கருத்துகள், அளித்த தீர்ப்புகள்.

குட்கா வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்ளும் நீதிமன்றம், மாணவி அனிதா வழக்கை ஆற அமர விசாரிக்கலாம் என தள்ளிப் போடுகிறது.
வீர்யமும், விவேகமும் உள்ள ஒருவனை நீதிமன்ற உத்தரவுகள் என்ற கயிறால் இறுக்கிக் கட்டக் கட்ட திமிறல் பல மடங்கு அதிகமாகிக் கொண்டே போகும். தமிழகம் இன்று அப்படி ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது நல்லதல்ல!!

-முதன்மை ஆசிரியர்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!