இடம், பொருள், அரசியல் - சிலப்பதிகாரமும் திராவிடக் கட்சிகளும் - VanakamIndia

இடம், பொருள், அரசியல் – சிலப்பதிகாரமும் திராவிடக் கட்சிகளும்

தலைவிரி கோலமாக கோபம் கொப்பளிக்க உங்கள் முன் ஒரு பெண் வந்து நின்றாள் என்ன கேள்வி கேட்பீர்கள். என்னமா? ஏன் இப்படி தலைவிரி கோலமாக வந்திருக்கிறாய்? என்று தானே?. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் கண்ணகியிடம் கேட்ட கேள்வி “யாரையோ நீ மடக் கொடியோய்?”. கொடி போன்ற இடுப்பு உடைய பெண்ணே நீ யார் என்பதுதான் அதன் பொருள். தேரா மன்னா செப்புவது உடையோன் என்ற கண்ணகியின் பதிலின் பொருள் அறிவு கெட்ட முட்டாள் அரசே உன்னிடம் சொல்வதற்கு ஒரு விசயம் உள்ளது. அரச சிம்மாசனம் என்ற இடத்தின் மாண்பை மறந்து பேசுபவருக்கு இப்படித்தான் பதில் கொடுக்க முடியும்.

சிலம்பதிகாரம் சொல்லும் மூன்று உண்மைகள்.

1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.
3. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.

மூன்றாவது கருத்தை ஏற்றால் கர்மா என்கிற ஊழ்வினைப்பயன் மற்றும் கடவுளை ஒத்துக் கொள்ள வேண்டிவரும். சிலப்பதிகாரத்தை தூக்கிக் கொண்டாடும் திராவிடக் கட்சியிடம் ஊழ்வினையை ஏற்கிறீர்களா? என்றால் அடக்கி வாசிப்பார்கள். பிறகு என்ன செய்ய முடியும்? தங்கள் தொலைக்காட்சியில் கிறிஸ்மஸ் திருநாள் சிறப்பு நிகழ்ச்சி, ரம்ஜான் சிறப்பு நிகழ்ச்சி என மற்ற மதப்பண்டிகைகளை சொல்லிவிட்டு விநாயகர் சதுர்த்தி போன்ற இந்துப் பண்டிகைகளுக்கு விடுமுறைத்திருநாள் சிறப்பு நிகழ்ச்சி என்று சொல்லிவிடுவார்கள்.

விநாயகர்சதுர்த்தி என்று சொன்னால் கடவுளை ஒத்துக்கொள்ள வேண்டும். அது கட்சி கொள்கைக்கு எதிரானது. தேவை இல்லாத சங்கடம். ஆனால் இந்த சங்கடங்கள் எல்லாம் கட்சியினர் கோவிலுக்கு போவதால், தாலி அணிவதால், சவுக்கார் பேட்டையில் ஓட்டுக் கேட்க ஹிந்தியில் போஸ்டர் ஒட்டுவதால் வந்தால் பரவாயில்லை என்கிறது பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த திமுக கட்சியின் இன்றைய தலைமை.

எம்ஜிஆர் திமுக வில் இருந்த போது தான் நடிக்கின்ற படத்தில் எப்படியாவது திமுகவின் கருப்பு சிவப்பு வண்ணக் கொடி அல்லது உதயசூரியன் கட்சியின் சின்னத்தை புகுத்திவிடுவார். சில படங்களில் எம்ஜியார் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரே உதயசூரியன் என்று இருக்கும்.

அன்பேவா திரைப்படத்தில் வருகின்ற பாடல் வரிகள் ”உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே”. சென்சாரும் விழித்துக் கொண்டார்கள். அப்பட்டமான கட்சி பிரச்சாரம் அனுமதிக்க முடியாது என்றார்கள். மறு நாளே புதிய சூரியனின் பார்வையிலே என்ற பாடல் வரிகளோடு, புதிய காட்சியோடு மீண்டும் தணிக்கைக்கு வருகிறது அந்த படம். சென்சார் அதிகாரிகள் வாய்விட்டுக் கேட்டு விட்டார்கள். எப்படி ஒரே நாளில் காஷ்மீர் சென்று சூட்டிங் நடத்தி எடிட் செய்து படத்தைக் கொண்டு வந்தீர்கள்.

அதற்கு டைரக்டரின் பதில் படம் எடுக்கும் போதே சென்சார் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என இரண்டு காட்சிகள், இரண்டு விதமான வரிகளுடன் எம்ஜிஆர் எடுக்கச் சொல்லி இருந்தார். அதைத்தான் இப்போது கொண்டுவந்தோம். அவ்வளவு முன்னெச்சரிக்கை எம்ஜியாருக்கு. இல்லாவிட்டால் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை தமிழ் நாட்டில் அன்றைய ஆளும் கட்சி திமுகவின் எதிர்ப்பை மீறி வெளியிட்டு இருக்க முடியுமா? குறிப்பாக மதுரையின் முக்கிப் புள்ளி தன்னை மீறி இங்கு படம் வெளியிட முடியுமா? அப்படி வெளியிட்டால் சேலை கட்டிக் கொள்கிறேன் என்று சவால் விட்டார். படம் வெளியாகி மதுரையில் வெற்றிகரமாக ஓடியவுடன் எம்ஜிஆர் ரசிகர்கள் அந்த முத்தான புள்ளிக்கு சேலை வாங்கி அனுப்பினார்கள். சேலைகள் என்ன ஆனது என்று தெரியவில்லை .அவர் வீட்டில் இருந்த பெண்கள் கட்டி மகிழ்ந்து இருக்கலாம்.

அண்ணாவின் அன்புத் தம்பி எம்ஜிஆருக்கு வாய்த்த தொண்டர்கள் உண்மையிலே ரத்தத்தின் ரத்தங்கள் தான். இல்லை என்றால் இரட்டை இலை சின்னத்தை கையில் பச்சை குத்துங்கள் என்று எம்ஜிஆர் சொன்னவுடன் மறு பேச்சு பேசாமல் அமைச்சர் முதல் தொண்டர்கள் வரை பச்சை குத்துவார்களா? அப்போதும் மறு பேச்சு பேசியவர் ஜெயலலிதா தான்! இது என்ன குதிரைக்கு சூடு போட்டு அடையளப்படுத்துவது போல் இருக்கிறது .நான் பச்சை குத்த மாட்டேன் என்ற அம்முவை எம்ஜிஆர் எதுவும் சொல்லவில்லை. அப்படி சுயமரியாதை காட்டியவர் தான் பின்னாளில், மந்திரிகள் கார் டயர் முன் விழுந்து கும்பிடுவதை பார்த்து மகிழ்ந்தார்.

பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த திமுக வில் தலைவர் என்ற இடமில்லை. பொதுச்செயலாளர் மட்டும் தான். அதுதான் கட்சியின் உயந்த பதவி. பெரியார் தான் எங்களின் தலைவர். அவரை மட்டுதான் தலைவராகப் பார்க்கிறோம். எனவே அந்த பதவியை விட்டுவிட்டு அவரை மரியாதை செய்யும் விதமாக பொதுச்செயலாளர் என்ற பதவியில் இருந்து தொடங்குகிறோம் என்பது அதன் பொருள். திமுக வில் இருந்து பிரிந்த அதிமுகவிலும் இதே விதிதான்.

அண்ணாவை கொடியிலும், கட்சிப் பெயரிலும் வைத்த அதிமுக மட்டும் மாற்றிச் சொல்ல முடியுமா? பிராமணீய எதிர்ப்பு, கடவுள் மறுப்புக் கொள்கை உடைய தாய்க்கழகத்தின் தலைவர் பெரியாரை தலைவராக எற்ற அதிமுகவிற்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்து பூஜை, நல்ல நேரம், ராசி, கடவுள் என பெரியாரின் கொள்கைக்கு நேர் எதிர் நம்பிக்கை உடைய ஜெயலலிதா பொதுச்செயலாராக வந்து எல்லாம் காலத்தின் அழகிய விளையாட்டு. அந்த விளையாட்டில் ஜெயலலிதாவிற்கு சமுக நீதிகாத்த விராங்கனை பட்டம் தந்த திராவிட கழகத்தின் வீரமணியையும் காலம் சேர்த்துக் கொண்டது. இன்று அந்த கட்சியின் நிலை? ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அந்த கட்சியினர் தேர்ந்து எடுத்த பொதுச்செயலாளர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். அவர் நியமித்த துணைப் பொதுச்செயலாளர் கட்சியில் இடம் இல்லாமல் சுயேட்சையாக தேர்தலில் நிற்கிறார்.

இதற்கு சற்றும் குறைவில்லாது தான் திமுக. திருமங்கல இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணத்தை வீட்டிலே வந்து கொடுத்து ‘திருமங்கல பார்முலா’ உருவாக்கியவர் கலைஞரின் மகன் அழகிரி. அவருக்காகவே தென்மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பதவி உருவாக்கியது அன்றைய கட்சித் தலைமை. இன்று அவர் கட்சியிலேயே இல்லை. ஸ்டாலினா, அழகிரியா என்ற குடும்பப் போட்டியாக மற்றவர்கள் பார்க்களாம். ஸ்டாலின் Vs பொன்முடியா? ஸ்டாலின் Vs அன்பழகனா? என்று வேறு ஒரு நபர் கட்சிக்குள் இருந்து ஸ்டாலினுக்கு போட்டிக்கு வந்து விடாமல். இருவரும் தம் குடும்பத்தில் இருந்து வருவது போல் பார்த்துக் கொண்டதுதான் கலைஞரின் தனிச்சிறப்பு.

பேரறிஞர் அண்ணா ஒரு முறை கூறினார்; “பதவி என்பது தோளில் போடும் துண்டு. கொள்கை என்பது இடுப்பில் கட்டும் வேஷ்டி. துண்டை இழந்தாலும் வேஷ்டியை இழக்க மாட்டோம்” .அண்ணாவுக்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்கலாம். இன்றைய அரசியல்வாதிகள் பாதி பேருக்கு துண்டு மட்டும் தான் தோளில் இருக்கிறது. வேஷ்டியைக் காணோம்.

கொசுறு:- சிலப்பதிகாரக் கதையை நண்பனிடம் சொல்லி அரசனே ஆனாலும் பெண்ணின் இடையை பார்த்து வர்ணித்தது கண்டு கோபம் கொள்ளும் வீரப் பெண் கண்ணகி என்பது எனது கோணம் என்றேன். இதையேதான் எஸ்.ஜே. சூர்யாவும் சொல்லி இருக்கிறார். இடுப்பைப் பார்த்துவிட்ட விஜயின் மீது கோபம் கொள்ளும் ஜோதிகா நடித்த குஷி படத்தின் ஒன் லைன் ஸ்டோரி கூட இது தான் தெரியுமா என்றான். இப்போது எல்லாம் சிலப்பதிகாரத்தை பற்றி யாரிடமும் விவாதிப்பது இல்லை.

– காளிச்சரண் சுந்தரம்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!