திமுகவும் அதிமுகவும் ஒண்ணு.. பிஜேபிகாரன் வாயிலே மண்ணு.. செல்லூர் ராஜு ஆர்.கே நகர் ஃப்ளாஷ் பேக்! - VanakamIndia

திமுகவும் அதிமுகவும் ஒண்ணு.. பிஜேபிகாரன் வாயிலே மண்ணு.. செல்லூர் ராஜு ஆர்.கே நகர் ஃப்ளாஷ் பேக்!

கடந்த முறை பணம் விளையாடியதாக நிறுத்தப்பட்ட ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வினோபா நகருக்கான பூத்திற்கு திமுகவின் பொறுப்பாளரா நான் இருந்தேன். அதே பூத்திற்கு ஆளும் அதிமுகவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தவர் அண்ணன் செல்லூர் ராஜூ.

“வாக்காளர் பட்டியலைக் கையில் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று அந்தப் பட்டியலில் உள்ளபடி அந்தந்த வீடுகளில் மக்கள் இருக்கிறார்களா? அல்லது ஆளும்கட்சியால் போலியாக இணைக்கபட்டு உள்ளதா? எனக் கண்டறிந்து வருமாறு” எனக்குக் கீழ் பணிபுரிந்த தோழர்களுக்கு சொல்லியிருந்தேன். ஒவ்வொரு தெருவிற்கும் பிரிந்து சென்ற தோழர்கள் பட்டியலைச் சரி பார்த்து என்னிடம் ஒரு இறுதிப் பட்டியல் அளித்தனர்.

“தோழர்கள் உண்மையிலேயே சரி பார்த்து இருக்கிறார்களா? இல்லை அஜாக்ரதையாக சரிவர செய்யாமல் விட்டார்களா?” என்பதை அறிந்து கொள்ள அடுத்த நாள் காலை நான் தனியாக பட்டியலை எடுத்துக் கொண்டு சரி பார்க்கச் சென்றேன். வினோபா நகர் மூன்றாம் தெருவில் ஒரு வீட்டில் அவ்வாறு நான் சரி பார்த்துக்கொண்டு இருந்த போது அந்தக் தெருவிற்கு தனது படை பரிவாரங்களோடு வாக்குகள் கேட்டு நுழைந்தார் அண்ணன் செல்லூர் ராஜூ.

அப்படியே நான் பட்டியலை சரி பார்த்துக் கொண்டிருந்த வீட்டிற்கும் வந்தார். வந்தவருக்கு ஒரு வணக்கம் போட்டேன். திமுக கரை வேட்டியோடும் கையில் வாக்காளர் பட்டியலோடும் ஒருவன் “தனியாக” நின்று கொண்டு இருப்பதை ஏற இறங்கப் பார்த்தவர் உடனே என்னிடம் ” தம்பி உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே?” என்றார். நான் அவரிடம் ” அண்ணே, என் பேரு அப்துல்லா. ஊரு புதுக்கோட்டை. நீங்க இருக்குற அதே பூத்துக்கு திமுகவுக்கு பொறுப்பாளரா வந்துருக்கேன் என்றேன்.

” அட தம்பி நீங்கதானா அது! நான் வந்ததும் திமுகவுல யாரை போட்டு இருக்காங்கனு விசாரிச்சேன். உங்களை பொறுப்பா போட்டு இருக்கறதா நம்மாளுங்க சொன்னாங்க. பத்திரிக்கைகள்ல பார்த்த படத்துக்கு நேர்லயும் கொஞ்சம் வித்யாசமா இருக்கீங்க. அதான் சட்டுனு தெரியலை” என்று சிநேகமாக பேச்சை ஆரமித்தவர் அப்படியே பேசியபடி என் தோளில் கையை போட்டுக் கொண்டு கூட்டத்தில் இருந்து தனியாக பிரித்தபடி நடக்கத் துவங்கினார்.

“தம்பி என்னதான் நம்ம எதிர் எதிர் ஆட்களா இருந்தாலும் அடிப்படையில நம்ம எல்லாரும் பெரியாரோட பேரப் பிள்ளைங்கதான்! இதுல உங்களுக்கு சந்தேகம் இருக்கா?

“இல்லைண்ணே”

“என்ன இருந்தாலும் நம்ம எல்லாருமே பேரறிஞர் அண்ணாவோட தம்பிங்கதான்! இதுல உங்களுக்கு சந்தேகம் இருக்கா?”

“இல்லைண்ணே”

“அப்ப செரி தம்பி. இதுல தெளிவு இருந்தாதான் நான் சொல்ல வர்ற விசயம் உங்களுக்கு தெளிவா புரியும். அதாவது தம்பி இது பெரியார், அண்ணா பூமி. திராவிட பூமி. நம்ம எல்லாரும் சாமி கும்பிடுவோம் பள்ளிவாசல் போவோம் சர்ச் போவோம். அது வேற. அது நம்ம நம்பிக்கை. அது நம்மளோட மட்டும்தான்! அதுனால அடுத்த ஆளுக்கு கஷ்டம் கிடையாது.

ஆனா மதவாதம்ங்குறது வேற. அது மாநிலத்தை அழிச்சிரும். அதை இங்க விடவே கூடாது. இந்த பிஜேபிகாரன் என்ன பண்ணுறான் ஓ.பன்னீர்செல்வத்தை கையில போட்டுகிட்டு அதிமுக உடைச்சு அந்த இடத்துக்கு வரப் பார்க்குறான் தம்பி. அதை விடவே கூடாது. அதை விடக்கூடாதுன்னா மொதல்ல நாங்க தப்பிக்கணும். நாங்க தப்பிக்கணும்னா நாங்க இந்த தேர்தலில் ஜெயிச்சே ஆகணும்!

திமுக தோக்குறதால திமுகவுக்கு எந்த பாதிப்பும் எந்தக் காலத்துலயும் வராது. இன்னும் ஆயிரம் வருசத்துக்கு உங்க கட்சி இருக்கும். நம்ம பெரியார் அண்ணா பூமியை காப்பாத்த இந்த பிஜேபி சதிலேந்து ஜெயிக்கணும். அதுக்காக தம்பி என்ன பண்ணுறீங்கன்னா தயவு செஞ்சு இந்த மாதிரி இறங்கி வேலை செய்யாதீங்க” என்றார்.

நான் அவரிடம் ” அண்ணே நீங்க எல்லாம் கொள்கையை காப்பாத்த இவ்ளோ கஷ்டப்படுறதுக்கு மொத்தமா எல்லாரும் திமுகல இணைஞ்சிட்டா அப்புறம் தமிழ்நாட்டுல மொத்தமா திமுக மட்டும்தானே இருக்கும்! நீங்க எல்லாரும் கூடிப் பேசி இந்த நல்ல முடிவை எடுக்கலாமே!” என்றேன்.

“அடப் போங்கப்பா..இந்த திமுககாரனுங்களுக்கே நம்ம சொல்றது எதுவும் புரியாது. நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்” என்றபடி வணக்கம் சொல்லிட்டு கிளம்பிட்டார்.

இதோ இப்போது மீண்டும் இடைத் தேர்தல். கடந்த முறை எனக்கு ஒதுக்கப்பட்ட அதே வினோபா நகர் பூத்திற்கு இந்த முறையும் பொறுப்பாளராகிறேன். எங்கேனும் ஏதேனும் ஒரு தெருவில் அண்ணன் செல்லூர் ராஜூவை எதிர்பாராமல் சந்திக்கும் வாய்ப்பு வரும். கடந்த முறை அண்ணன் தினகரனுக்காக ஓட்டுக் கேட்ட செல்லூரார் இந்த முறை அண்ணன் மதுசூதனனுக்காக வாக்குகள் கோரி வருவார்.

அப்போது என்னிடம் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க மிகுந்த ஆவலோடு உள்ளேன்!

– எம்.எம்.அப்துல்லா

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!