ரஜினி அரசியலில் ரசிகனின் பங்கு என்ன? ஒரு அனுபவத் தொடர் - பகுதி 1 - VanakamIndia

ரஜினி அரசியலில் ரசிகனின் பங்கு என்ன? ஒரு அனுபவத் தொடர் – பகுதி 1

ஏனுங்க மாமா, நாம சொந்த ஊருக்கே திரும்பிப் போறோமா?

ஏம்புள்ள, திடீர்னு இப்படி கேக்குற?.

தலைவர் கட்சி ஆரம்பிக்கப் போறாருல்ல, அதான் கேட்டேன்.

’அதுக்கும் நீ கேக்குறதுக்கும் என்ன சம்மந்தம்ன்னு புரியல்லியே. புள்ளைங்க படிச்சிகிட்டு இருக்காங்க. கம்பெனியில் ப்ரோமோஷன் கிடைச்சி நல்ல லெவல்லே இருக்கும் போது ஊருக்கு எப்படி போறதாம். ரிட்டையர்மெண்ட் வரைக்கும் யோசிக்காதே’

’ஹுக்கும்.. 96ல் துடியாத் துடிச்சிகிட்டு இருந்தீங்க. இப்போ என்னவோ, ஒன்னும் தெரியாத மங்குனி மாதிரி பேசுறீங்க. கேட்ட என்னை மடச்சியாக்கிப் புட்டீங்க. தலைவருக்காக, நான் தான் இறங்கி வேலை செய்யனும் போலிருக்கு’. மனைவியின் குரலில் சற்று கோபம் கொப்பளித்தது.

மனைவியின் இந்த கோபத்திற்கும், ஆதங்கத்திற்கும் காரணம் இல்லாமல் இல்லை. பள்ளிக் காலத்தில் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தைப் பார்த்து தலைவர் ரசிகன் ஆனவன். எல்லோருக்கும் கமல் ஹாசனைப் பிடிக்க, நண்பனுக்காக காதலையே விட்டுக் கொடுத்த தலைவர் தான் எனக்கு நல்லவராகத் தெரிந்தார். வெள்ளை கமலை விட, ஸ்டைலான கருப்பு ரஜினி தான் பிடித்தது.

தலைவரின் ஒவ்வொரு பேட்டியையும் குமுதம், விகடனில் விடாமல் படித்து வளர்ந்தேன். தலைவருக்காக ரஜினி ரசிகன் பத்திரிக்கை வெளிவந்த போது ப்ளோஅப்புகளாக வாங்கி அறையில் குவித்தேன்.

சென்னையில் படிக்கும் போது, எம்ஜிஆர் முதல்வர் , ஜெயலலிதா சிந்தனைச் செல்வியாக மட்டுமே இருந்தார். இன்றும் அரசியலில் முக்கிய பதவியில் இருக்கும் பிரமுகர் ஒருவரின் உறவினர் பையனுக்கும் எனக்கும், ஹாஸ்டலில் தீவிர வாக்குவாதம் நடக்கும். இனிமேல் அவர் புரட்சித் தலைவி, அடுத்த முதல்வர் என்பார்.

சிந்தனைச் செல்விக்கு வரும் கூட்டத்தை விட பலமடங்கு ரசிகர்கள் கொண்ட சூப்பர் ஸ்டார் தான் அடுத்த முதல்வர் என்பேன். ஜெயலலிதா ’புரட்சித் தலைவி’ என்றால் ரஜினி ’சூப்பர் தலைவர்’.

பெரும் வாக்கு வாதத்தை நண்பர்கள் வந்து விலக்கி விட்டு, முடிப்பார்கள். அப்போதெல்லாம் தலைவரை எளிதாகப் போய் நேரில் பார்த்திருக்க முடியும். தினமும் வீட்டில் ரசிகர்களை சந்திப்பார். சென்னையில் இருப்பவன் கைக்காசு செலவில்லாமல் பார்த்து இருக்கமுடியும் தான்.

ஒரு முறை, தலைவர் வீட்டு வாசல் வரையிலும் சென்று வரிசையில் நின்றேன். மாணவனாக வந்து பார்ப்பதைக் காட்டிலும், ஏதாவது சாதித்துவிட்டு வந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம், திடீரென ஏற்படவே திரும்பி விட்டேன். தலைவருக்காக வரிந்து கட்டும் என்னை, பிசிராந்தையர் என்றெல்லாம் தமிழ்த் துறை நண்பர்கள் பேசுவார்கள். தலைவர் ஆட்சியில், எனக்கு குறிப்பிட்ட துறையை ஒதுக்கி அமைச்சராக அழகு பார்த்த நண்பர்களும் உண்டு

95ல் ஜெயலலிதாவுக்கு எதிரான பாட்ஷா படவிழாப் பேச்சு போதும், அதற்குப் பிறகும் உணர்ச்சிப் பிழம்பாக இருந்தேன். அந்த நேரத்தில் தான் திருமணமும் ஆனது. தலைவர் ஆர் எம் வீயுடன் இணைந்து கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்றெல்லாம் தகவல்கள் வந்து கொண்டிருந்தது. திருமணம் ஆனவுடன் தலைவர் மீதான பாசம் தலைகீழாக மாறிவிடுமா என்ன?

’இவரு வேலையை விட்டுட்டு ஊருக்கு போயிடுவாரு போல. ரஜினி கட்சியில் சேர்ந்து போட்டியிடப் போறாருன்னு, அவரோட ஃப்ரெண்ட்ஸ் சொல்றாங்க’ என்று வீட்டிற்கு வந்த உறவினரிடம் மனைவி புகார்ப் பட்டியல் வாசித்தார். வந்தவரோ, வழக்கம் போல் அறிவுரைகளை கொட்டிச் சென்றார்.

தமாகா பிறந்தது, தலைவர் சொன்னது போல் குடும்பத்தோடு சென்று வாக்களித்து விட்டு அரசியல் கடமை நிறைவேற்றினேன். காலப் போக்கில் மனைவி, தலைவரின் தீவிர ரசிகை ஆகிவிட்டார். இப்போ தலைவர் அரசியலுக்கு வருகிறார் என்றவுடன், எல்லாத்தையும் விட்டு விட்டு ஊருக்கு கிளம்ப அவரே தயாராகிறார். எதார்த்தத்தைச் சொல்லி சமாதானப்படுத்த வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன்.

அதற்கு முன்னால் கொஞ்சம் ஃப்ளாஷ் பேக்.. இதே ஃப்ளாஷ் பேக் நிறைய ரசிகர்களுக்கும் நடந்திருக்கும்.தலைவரின் ஒவ்வொரு ரசிகருக்குப் பின்னாலும், ஒரு வரலாறு இருக்கிறது என்பதை நான் அறிவேன். நம் குடும்பத்தைப் பார்க்கச் சொன்ன தலைவரின் கட்டளைப் படி, குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொண்டிருப்பதையும் அறிவேன். ஒவ்வொரு ரசிகருக்கும், தாங்கள் கடந்து வந்த பாதையை நினைவூட்டத் தான் இந்த அறிமுகம்.

தலைவர் அரசியலுக்கு வரும் இந்த வேளையில், லட்சோப லட்ச ரசிகர்களில் ஒருவனாக சில அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் நமது கடமைகளை தெரிந்து கொள்ளும் முயற்சி தான் இந்த மினித் தொடர். வாய்ப்பு வழங்கிய வணக்கம் இந்தியா இணையத் தளத்திற்கும், முதன்மை ஆசிரியருக்கும் நன்றி.

-தொடரும்….

– முருகேசன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!