Role of fans in rajini politics 3

ரஜினி அரசியலில் ரசிகனின் பங்கு என்ன? ஒரு அனுபவத் தொடர் – பகுதி 3

91ம் ஆண்டின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

80 களின் தொடக்கத்தில் பொன்மனச் செம்மல், மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தமிழக முதல்வராக இருந்த நேரம், சிந்தனைச் செல்வி என்ற பட்டத்துடன் அண்ணா திமுகவின் கொபசெ வாக வலம் வந்து கொண்டிருந்தார் ஜெயலலிதா. அவருக்கு எல்லாமுமாய் இருந்து வந்தவர் இப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர். எதிரணியில் தலைவரை வைத்து வெற்றிப் படங்கள் தந்து கொண்டிருந்த பண்பாளர் ஆர் எம் வீரப்பன்.

கலைஞர் கருணாநிதி தொடர்ந்து மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் புரட்சித் தலைவரிடம் தோற்றுப் போயிருந்தார். கருணாநிதி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் என்று யாருமே நம்பவில்லை. காங்கிரஸ் கட்சியில் செல்வாக்குடன் இருந்த ஐயா ஜி.கே. மூப்பனார் மீது தான் அனைவருடைய கண்ணும் இருந்தது.ஆர் எம் வீரப்பன், சு.திருநாவுக்கரசர் , மூப்பனார்
என மூவருடனும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார் தலைவர் ரஜினி. கருணாநிதியுடன் அப்படி ஒரு நெருக்கத்திற்கான வாய்ப்பு அது வரையிலும் இல்லை.

அந்த நேரத்தில் , தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் சூப்பர் ஸ்டாராக வெற்றிக் கொடி நாட்டிக்கொண்டிருந்தார் நம் தலைவர். திரையிட்ட அரங்குகளிலெல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக தலைவரின் படங்கள் ஓடியது. பி, சி சென்டர்களில் செகண்ட், தர்ட் ரிலீஸ் எல்லாமும் வசூல் மழை தான்.

இந்த மனிதரிடம் அப்படி என்ன தான் இருக்கிறது என்று திரையுலகமும், தமிழ் உலகமும் திகைத்துக் கொண்டிருந்த நேரம். இந்த நேரத்தில் தான் எம்ஜிஆருக்குப் பிறகு யார் வருவார் என்ற விவாதங்கள் கல்லூரியிலும் பிரபலமாக இருந்தது. கருணாநிதியை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. மூப்பனாரா? ஆர்.எம். வீரப்பனா? என்று ஒருபக்கம் கேள்விகள் வரும். இன்னொரு பக்கம் ஜெயலலிதா தான் அடுத்த முதல்வர் என்பார்கள். சிந்தனைச் செல்வி இனி புரட்சித் தலைவி என நண்பர்கள் வாதிடுவார்கள்.

அப்போ, நான் , “இவர்கள் யாருக்கும் மக்கள் செல்வாக்கு இல்லவே இல்லை.. ஜெயலலிதாவுக்கு வரும் கூட்டத்தை விட, தலைவர் படத்து ஃபர்ஸ்ட் ஷோவுக்கு வரும் ரசிகர்கள் அதிகம். எனவே தலைவர் ரஜினி தான் அடுத்த முதல்வர்” என்றேன்.

சிலர் சிரித்தார்கள். அவருக்கு கட்சியும் கிடையாது. எந்தக் கட்சியிலும் கிடையாது. எப்படியப்பா சி எம் ஆவாரு என்றார்கள். ஏங்க, மார்க்கெட் போன முன்னாள் நடிகை , எம்ஜியார் தயவிலும், திருநாவுக்கரசர் ஆதரவிலும் ஊர் ஊராப் போய் பிரச்சாரம் பண்ணுற ஜெயலலிதா முதல்வர் ஆவாங்கன்னா, அவரை விடவும் பிரபலமா இருக்கிற சூப்பர் ஸ்டார் ஏன் முதல்வர் ஆகக் கூடாது என்று மறுத்துப் பேசினேன். எனக்கும் சிலர் ஆதரவு தெரிவித்தார்கள். என்னுடன் இறுதி வரையிலும் மல்லுக்கு நின்றது இப்போதைய அதிமுக பெரும்புள்ளியின் நெருங்கிய உறவினர் பையன்.

எம்ஜிஆர் திடீர் நோய்வாய்ப்பட்டார். அவரைப் பார்க்க பிரதமர் இந்திரா காந்தி வந்தார். வந்து போனவர் சொந்த செக்யூரிட்டி ஆபீசர்களால் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார். எம்ஜிஆர் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார். ஆஸ்பத்திரியில் இருந்தே முதல்வராக மீண்டும் வென்றார்.

இந்தக் காலக் கட்டத்தில் எம்ஜிஆர் செயல் இழந்து விட்டார். அவரை நீக்கி விட்டு என்னை முதல்வர் ஆக்குங்கள் என்று ராஜீவிடம் சென்றார் ஜெயலலிதா அதை எம்ஜிஆரிடமே போட்டு உடைத்தார் ராஜீவ் காந்தி . அம்மையாரை கட்சியில் கொஞ்சம் தள்ளி வைத்தார் எம்ஜிஆர். திடிரென்று மறைந்தும் விட்டார் பொன்மனச் செம்மல்.

இந்த திடீர் திருப்ப அரசியலில் தலைவர் ரஜினிக்கான இடம் தெரியவில்லையே என்று நான் மிகவும் குழம்பிப் போய் விட்டேன். ஒன்றை கவனிக்க வேண்டும். அப்போது அரசியல் பற்றி நம் தலைவர் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. 95க்குப் பிறகு தான் அவர் அரசியல் பற்றி பேச ஆரம்பித்தார். ஆனால் 80 களில், நானாகவே ஒரு கற்பனைக் கோட்டையை எழுப்பி, அதில் தமிழக முதல்வராக நம் தலைவரை அரியணை ஏற்றத் துடித்துக் கொண்டிருந்தேன். அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு ஒன்றை மட்டுமே நம்பி, வேறு எந்த வித யோசனையும் இல்லாமல் இப்படி ஒரு எண்ணத்தை எனக்குள் உருவாக்கி வைத்திருந்தேன்.

எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு அதிமுக ரெண்டானது. அதுவரையிலும் வாய்ப்பே இல்லாமல் இருந்த கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆனார். ஆனாலும் இரண்டரை ஆண்டில் கலைக்கப்பட்டது அவருடைய ஆட்சி. காங்கிரசுடன் கைகோர்த்து ஒன்றிணைந்த அதிமுக தலைவியாக ஜெயலலிதா களம் கண்டார். ராஜீவ் காந்தியின் அகோர மரணத்தின் அனுதாபத்தால், மாபெரும் பலத்துடன் ஆட்சியில் அமர்ந்தார் அம்மையார் ஜெயலலிதா.

எந்த முதல்வர் நாற்காலியில் என் தலைவன் உக்காரவேண்டும் என்று நினைத்தேனோ? யாரை விட என் தலைவனுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்று நம்பினேனோ, அவர் முதல்வராகி விட்டார். நண்பன் சொன்னது போல் சிந்தனைச் செல்வி, புரட்சித் தலைவி ஆகிவிட்டார்.

என் தலைவனோ, பக்கத்து வீட்டுக்காரர் என்ற உரிமையுடன் முதல் ஆளாகச் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வந்தார். அம்மையார் ஜெயலலிதா மிகவும் சிறப்பாக ஆட்சி செய்வார். தென்னகத்து இந்திரா காந்தியாகத் திகழ்வார் என்றெல்லாம் பெருமைப் பட்டார் என் தலைவன் சூப்பர் ஸ்டார்.

முதன் முதலாக நான் ஏமாந்து போனதாக உணர்ந்தேன்..

அனுபவம் தொடரும்…

– முருகேசன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!