ரஜினி அரசியலில் ரசிகனின் பங்கு என்ன? ஒரு அனுபவத் தொடர் - பகுதி 2 - VanakamIndia

ரஜினி அரசியலில் ரசிகனின் பங்கு என்ன? ஒரு அனுபவத் தொடர் – பகுதி 2

ஆவேசமாகப் பேசிய மனைவியிடம், “தலைவர் இன்னும் கட்சிப் பெயரே அறிவிக்கல்ல. இன்னும் நாளு இருக்கு.. நீ ஏம்மா இவ்வளவு டென்ஷன் ஆகுறே,” என்று ஆசுவாசப் படுத்தினேன். அவர் அந்தப்பக்கமாக போனதும், நண்பரிடமிருந்து போன் வந்தது.

என்ன மாப்ளே, தலைவர் பிறந்த நாள் வருதுல்லே. என்ன பண்ணப் போறோம். ஊர்லே ஏதாச்சும் பண்ணுவோமா என்றான். அவன் இருப்பதோ மும்பையில். நான் இருப்பதோ சென்னையில். ஊர் இருப்பதோ தமிழகத்தின் கடைக்கோடியில். “நீ அங்கே கோவிலுக்குப் போய் தலைவருக்கு அர்ச்சனை பண்ணு. நான் இங்கே பண்ணுறேன். உள்ளுர் மன்ற விழாவில் கலந்து கொள்வோம்,” என்று சொன்னேன்.

கடந்த பல ஆண்டுகளாக இதுதான் நடைமுறை ஆகிவிட்டது. அதற்காக தலைவர் மீது எங்களுக்குப் பாசம் குறைந்து விட்டது என்று ஆகிவிடுமா என்ன? சொந்த ஊரில் போய் மன்ற விழா கொண்டாடிக் கொண்டுதான் இருந்தோம். குழந்தைகள், பள்ளிக்கூடம் என்று ஆன பிறகு தனியாகச் செல்வதும் சரியாக இல்லை. குடும்பத்தோடு செல்வதும் சிரமமாகிவிட்டதால், உள்ளூர் மன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறோம். இதோ, ஊரெங்கும் தலைவர் பிறந்த நாள் போஸ்டர்கள் களை கட்டுது. பக்கத்து தெருவில் மன்றத் தோழர்கள் விழா ஏற்பாடு செய்துள்ளார்கள்.அழைத்துள்ளார்கள் விழாவுக்கு சாயங்காலம் போகனும்.முதல்லே காலையில் கோவிலுக்குப் போகனும்.

மனம் அப்படியே பளஸ் 2 படித்துக் கொண்டிருந்த காலத்துக்குப் போனது. அப்போ ரஜினி ரசிகர்ன்னு சொன்னால் ஊர்லே கொஞ்சம் இளப்பமாகத் தான் பார்ப்பார்கள். “வெட்டிப்பயல்களுடன் சுத்துறான் உங்க பையன்” ன்னு அப்பாவிடம் போட்டுக் கொடுப்பார்கள். ஆனாலும், நம்ம நண்பர் கூட்டம் அசரவில்லை. அதே சமயத்தில் பஸ்ஸ்டாப்பில் நின்னுகிட்டு பெண்களை கேலிபண்ணுறது போன்ற எந்த வம்பும் பண்ணக்கூடாதுன்னு முடிவு செஞ்சோம். ஊருக்கு ஒதுக்குப் புறமா ஆள் நடமாட்டம் இல்லாத படித்துறையில் தான் எங்க மீட்டிங் நடக்கும். காலப் போக்கில் வம்பு தும்புக்குப் போகாத பசங்கன்னு கொஞ்சம் நல்ல பேரு கிடைச்சுது. ரஜினி ரசிகர்னாலும் தப்பு தண்டா பண்ணாத பசங்களாக இருக்காங்களேன்னு கொஞ்சம் கொஞ்சமா மரியாதை வர ஆரம்பிச்சுது. ரஜினி ரசிகர்கள்ன்னா மோசம் இல்லே, நல்ல பசங்க தான்னு நிருபிக்க நாங்க போராட வேண்டியதாப் போச்சு,. அதுலே வெற்றியும் கிடைச்சுது.

அந்த சமயத்தில் வந்த தலைவரோட பிறந்த நாளை கொண்டாடனும்னு முடிவு செஞ்சோம். என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சோம். அப்பல்லாம், ஸ்கூல் பசங்களுக்கு பிறந்தநாள்ன்னா, மத்த பசங்களுக்கு கொடுக்க எக்ளேர்ஸ் சாக்லெட் கொடுத்து விடுவாங்க. எங்கூருல, ஸ்கூல் பசங்களுக்கு, அது பெரிய சமாச்சாரமா அப்போ இருக்கும். தலைவர் பிறந்த நாளுக்கு ஸ்கூல் பசங்களுக்கு எக்ளேர்ஸ் சாக்லெட் குடுக்கலாம்ன்னு முடிவு செஞ்சு பெரிய பாக்கெட் ரெண்டு மூணு வாங்கி வந்தோம். ஹெட் மாஸ்டர் கிட்டே போய் சொல்லிட்டு க்ளாஸ் டீச்சர் மூலமா கொடுக்கலாம்ன்னு ப்ளான்.

ஹெட்மாஸ்டர் கிட்டே போய் சொன்ன போது, யாருக்கு பிறந்த நாள்ன்னு கேட்டார். ரஜினிகாந்துக்கு சார்ன்னு சொன்னோம். நடிகர் பிறந்த நாளுக்கெல்லாம் பசங்களுக்கு சாக்லெட் குடுக்க அனுமதிக்க மாட்டோம்ன்னார். நாங்க உள்ளூர் தானே சார், நாங்க தானே குடுக்குறோம்ன்னு சொல்லிப் பார்த்தோம். முடியாதுன்னு சொல்லிட்டாரு.

என்ன பண்றதுன்னு தெரியல்லே. பள்ளிக்கூடம் முடிஞ்சு போகும் போது ஸ்கூல் வாசலில் கொடுக்கலாம்ன்னு யோசிச்சோம். அதை யாராவது தப்பா சொல்லிடு வாங்களோன்னும் பயம். இருந்தாலும் வேறு வழி தெரியல்லே. நாங்க அஞ்சாறு பேரு நின்னு, பசங்க வரும் போது கொடுக்க ஆரம்பிச்சோம். சில பசங்க மிரண்டாங்க.

அப்போ அங்கே ஒரு பாட்டி வந்தாங்க. என்னப்பா விசேசம்ன்னு கேட்டாங்க. ரஜினிகாந்த் பிறந்த நாள் பாட்டின்னு சொன்னதும், எனக்கு சாக்லேட்டு கிடையாதான்னு கேட்டு வாங்கினாங்க. அவங்களே நின்னு பசங்களுக்கு கொடுக்க ஆரம்பிச்சாங்க. எங்களுக்கு தெம்பு வந்தந்து. சந்தோசமாக கொடுத்து முடிச்சோம். நாங்க கொண்டாடின முதல் தலைவர் பிறந்த நாள் அது தான்.

பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவா! #HBDSuperstarRajini

அனுபவம் தொடரும்…

– முருகேசன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!