வர்ஜீனியா மாநிலத் தலைநகர் ரிச்மண்ட்டில் தமிழர்களின் ஆடுகளம் ! - VanakamIndia

வர்ஜீனியா மாநிலத் தலைநகர் ரிச்மண்ட்டில் தமிழர்களின் ஆடுகளம் !

ரிச்மண்ட்(யு.எஸ்) அமெரிக்காவின் முக்கிய மாநிலமான வர்ஜீனியாவின் தலைநகர் ரிச்மண்ட்டில் ஆடுகளம் என்ற தமிழர் நிகழ்ச்சி நடைபெற்றது. ரிச்மண்ட் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 2017ம் ஆண்டிற்கான முக்கிய நிகழ்ச்சி ஆகும்.

இது பெரியவர்களுக்கான ஆடுகளம். எத்தனை வயதானாலும், ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் மேடையேறி அபிநயம் புரிய முடியும் என்று பறைசாற்றிய களம் . ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு குழந்தை உறங்கிக் கொண்டிருக்கிறது.வாய்ப்பு கிடைத்தால் வெளியே வந்து துள்ளல் ஆட்டம் போடத்தானே செய்யும் அல்லவா! நிகதேன்ஸ், ஹிப் ஹாப் தமிழச்சிஸ், ஸ்டைலிஷ் தமிழச்சிஸ் என வித்தியாசமான நடனங்களில் அசத்தி விட்டனர்.

ஆடல் பாடல்களுடன் மட்டும் தான் கலை நிகழ்ச்சி அல்லவே!. நாடகக் கலையை மறந்து விட முடியாதல்லவா!. நேரம் என்ற நாடகத்தை மேடையேற்றினார்கள். நாடகம் என்பதை ‘அரிதாரம்’ என்றே குறிப்பிட்டு அறிமுகப் படுத்தினார்கள். தொழில் நுட்பத்தில் முன்னேறினாலும் உணவுப் பழக்கத்திற்கு நம் முன்னோர்கள் வழியே சிறந்தது என்பதை ‘நேரம்’ வலியுறுத்தியது. பார்வையாளர்களை சிந்திக்க வைத்தது.

’ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற நகைச்சுவை நாடகத்தில் நடித்தவர்கள், வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தார்கள். தொலைக் காட்சி பட்டிமன்றங்களுக்கு சவால் கொடுக்கும் வகையில் சிந்தனையைத் தூண்டும் வகையில் ஒரு மாபெரும் பட்டிமன்றமும் ‘ஆடுகளத்தில்’ இடம் பெற்றது.

சமூக வலைத்தளங்களால் உதவியா , உபத்திரமா என்று ஆறு பேர் அலசி ஆராய்ந்தார்கள். நன்மைகள் இருந்த போதிலும் தீமைகளை ஆதாரப்பூர்வமாக சுட்டிக் காட்டினார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றிக்கு சமூகத்தளம் காரணம் என்று ஒரு அணி வாதிட, குழந்தைகள் வாழ்க்கையை மாற்றி விட்டதே என்று மறு அணியினர் மறுத்துப் பேசினர். நடுவரும் தன் பங்கிற்கு இரு பக்கமும் கோல் போட்டார்.

சங்கத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் தமிழ்ப்பள்ளி 500 மாணவர்களை எட்டிவிடும் அளவுக்கு சிறப்பாக செயல்படுவதை இயக்குனர் முத்துராஜ் விவரித்தார். தமிழக விவசாயிகளுக்கு பலனளிக்கும் திட்டங்களுக்காக ‘SaveTamilNaduFarmer’ அமைப்புக்கு நிதியுதவியை பாலா மற்றும் சுந்தர் வழங்கினார்கள். கலை நிகழ்ச்சிகளை, சங்க இயக்குனர்கள் வினோத் மற்றும் ஸ்வாதி ஒருங்கிணைத்திருந்தார்கள்

கலை, கல்வி, நற்செயல் என அனைத்தும் கலந்து , சற்றும் தொய்வில்லாமல் பலத்த கரகோஷங்களுடன் ’ஆடுகளம்’ ஆர்ப்பரித்தது !

– அகிலா கண்ணன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!