Resolutions against NEET in USA

நீட் தேர்வுக்குத் தடை, மாநிலத்திற்கு கல்வி உரிமை .. அமெரிக்க மாநாட்டில் 7 தீர்மானங்கள்

வாஷிங்டன்: உலகத் தமிழ் அமைப்பு சார்பில் வாஷிங்டன் மாநகரில் நடைபெற்ற மாநாட்டில் நீட் தேர்வை தடைசெய்யவும், மாநிலங்களுக்கு கல்வி உரிமையை திருப்பித் தருமாறு கோரிக்கை விடுத்தும் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவை வருமாறு :

தமிழ்த்தாய் வாழ்த்தோடு துவங்கிய மாநாட்டில், ஓகிப் புயலால் உயிரிழந்தோர்க்கும், நீட் தேர்வு முறையால் உயிரிழந்த இளந்தளிர் அனிதாவுக்கும் முதலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நீட் தேர்வுக்கு எதிராக அமெரிக்காவில் நடந்த போராட்டங்கள் பற்றியும், இறையாண்மையுடன் கூடிய மாநிலத் தன்னாட்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது. “நீட் அதிகாரம்” எனும் நாடகம் அரங்கேற்றப்பட்டது. இன உணர்வுமிக்கப் பாடல்களைச் சிறுவர்கள் பாடினர், மேலும் தமிழின உரிமையை வலியுறுத்தும் பாடல்களுக்கு எழுச்சிமிக்க நடனமும் ஆடினர்.

இறுதியாக மாநாட்டில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

“மாநில அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் ஊர்புற, ஏழை மாணவர்கள் மருத்துவர்களாவதற்கும், கடைக்கோடிச் சிற்றூர்களில் தேவையான மருத்துவத் தொண்டாற்றுவதற்கும் பெரும்தடையாக இருக்கும் மிகக் கொடிய நீட் தேர்வுக்கு எதிராகத் தம் உயிரையே ஈகம் செய்த அனிதாவுக்கு வணங்குதல்.

தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட, நீட் விலக்குக்கோரும் தமிழ்நாட்டு அரசின் சட்டமுன்வரைவை உடனடியாக இந்திய ஒன்றிய அரசுச் சட்டமாக்க வேண்டும்.

நீட் மட்டுமல்லாது, இந்திய நிலப்பரப்பு முழுவதற்கும் நடத்தும் எவ்வகையான நுழைவுத்தேர்வும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள், மாணவர் சேர்க்கை ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தற்போதையத் தீர்ப்புக்கு எதிராக இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் வழக்குத் தொடுத்து, நுழைவுத்தேர்வு / மாணவர் சேர்க்கை உரிமைகளை மாநில அரசுகளே திரும்பப்பெற வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான முறையில் நெருக்கடிநிலையின்போது, மாநில அரசின் கல்வி உரிமை ஒன்றிய அரசால் தகாவழியில் பறிக்கப்பட்டது. அதனை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியத்தைப்போல பல மொழி, பல பண்பாட்டு மரபுடைய, பல தேசிய இனங்கள் வாழும் நிலப்பரப்பு இந்திய ஒன்றியம். இந்திய ஒன்றியத்தில் பழமைவாய்ந்த பல செம்மொழிகள் உட்பட அனைத்து தேசிய மொழிகளுக்கும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாகும் உரிமை இருந்தபோதும், இந்தியை மட்டும் அலுவல் மொழியாக்கி தொடர்ந்து அனைத்து தேசிய இனங்களுக்கும் பெரும் தீங்கிழைக்கின்றது. அனைத்து தேசிய மொழிகளையும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும்

இந்திய ஒன்றியத்தின் நிலப்பரப்பானது, தமக்கெனத் தனியான ஒரு மொழி, பண்பாடு, உணவுப்பழக்கம், உடை, வாழ்வுமுறையோடு “பல தேசிய இனங்கள்” வாழும் ஒரு துணைக் கண்டமாகும். தேசிய இனங்களின் தனித்தன்மையை அழித்து “இந்தி தேசியம்” மட்டும் வளர்க்க எடுக்கும் நடவடிக்கைகளை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அனைத்து மொழிவழி தேசிய இனங்களும் நிகராகவும், மிகவும் மரியாதையாகவும் நடத்தப்பட வேண்டும்.

தெற்காசிய நிலப்பரப்பில் முற்றிலும் வேறானப் பல தேசிய இனங்களைப் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக ஒன்றுதிரட்டும் பொருட்டு, முன்னனி விடுதலைப்போராட்டத் தலைவர்கள் பல அரசியல் கூட்டங்களில் “மொழி அடிப்படையில் மாநில அரசுகள் உருவாக்கப்படும், அனைத்து அதிகாரங்களும் மொழி அடிப்படையிலான மாநில அரசுகளுக்கு அளிக்கப்படும்” என்று தீர்மானங்களை நிறைவேற்றினர். உண்மையான கூட்டாட்சியாகச் செயல்படுவதற்கு ஏற்ப தேவையான அரசியல் அமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.”

மேற்கண்ட 7 தீர்மானங்கள் உலகத் தமிழ் அமைப்பின் கல்வி உரிமை மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!