பாஜகவில் அத்வானியின் ’ஸ்லீப்பர் செல்கள்’ வெளி வருகிறார்களா? - VanakamIndia

பாஜகவில் அத்வானியின் ’ஸ்லீப்பர் செல்கள்’ வெளி வருகிறார்களா?

கடந்த சில வாரங்களாக, மத்திய பாஜக அரசை குற்றம் சுமத்தி பல குரல்கள் எழுந்துள்ளன. அது காங்கிரஸின் ராகுல் காந்தியின் குரலாக மட்டும் இருந்தால் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறார்.

முந்தய பாஜகவின் வாஜ்பாய் அரசில் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் தான் யஷ்வந்த் சின்ஹா. அவருக்கு முன்னால், நிதி அமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங், ப.சிதம்பரத்தின் கொள்கைகளை அடியொற்றித் தான் சின்ஹாவின் பொருளாதார நடவடிக்கைகள் இருந்தன. அதனால் தான் 91ம் ஆண்டு பிரதமர் நரசிம்மராவ் அறிமுகப்படுத்தி வைத்த பொருளாதார சீர்திருந்தங்கள் தொய்வில்லாமல் தொடர்ந்தது.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதற்காக, விமானத்தில் தங்கக் கட்டிகளை எடுத்துச் சென்று அடமானம் வைத்து பணம் வாங்கி வந்த பிரதமர் சந்திரசேகரை இன்றை தலைமுறைக்கு நினைவிருக்காது. ஆனால் 1990ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார நிலை அவ்வளவு பரிதாபத்திற்குரியதாக இருந்தது என்பது தான் உண்மை.

91ல் நரசிம்மராவும் மன்மோகன் சிங்கும் கூட்டாக எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகள், 2004ல் மோடி பிரதமராகும் வரையிலும் தொடர்ந்தது. உடனடியாக காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்களை எல்லோரும் முன் வைப்பார்கள். ஆம், ஊழல் நடந்தது உண்மைதான். அது எல்லா ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

வாஜ்பாய் ஆட்சியிலும் சவப்பெட்டி ஊழல் உலகம் அறிந்தது தானே! ஆக ஊழல் என்பது ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதைச் செய்பவர்களும் மாட்டிக்கொள்பவர்களும் தான் ஆட்சிக்கு ஆட்சி மாறுபடுகிறார்கள்.

ஊர்ப்புறம் சொல்வார்களே ‘தேனை எடுக்கிறவன் புறங்கையை நக்கத்தான் செய்வான்’ என்று. ஆனாலும் எடுக்கப்பட்ட தேன் மற்றவர்களுக்கு கிடைக்கும். அதைப்போல் தான் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கும் போது ஊழல் இருந்தாலும், பொருளாதாரத்தின் நன்மைகள் மக்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும். நவீன இந்தியா முழுவதும் 91ம் ஆண்டுக்குப் பிறகு கட்டமைக்கப் பட்டது தானே!

நாட்டில் வளர்ச்சி இல்லாத போது ஊழல் நடைபெற்றால் ‘ எரியிற வீட்டில் புடுங்குற வரைக்கும் லாபம்’ என்பது போல் தான் அமையும். வீட்டுக்காரனுக்கு எல்லாமும் நட்டம், புடுங்கிக் கொண்டு போனவனுக்கு கிடைச்சதெல்லாம் லாபம் என்றாகும். பொருளாதாரம் நலிவடைந்துள்ள நிலையில், பாஜகவின் வியாபம் ஊழல், அமித் ஷா மகனின் 16 ஆயிரம் தடவை உயர்ந்த வருமானம் எல்லாமும் இரண்டாம் வகையில் சேர்கிறது. மக்களுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படும்.

91ம் ஆண்டு முதல் 23 ஆண்டுகளாக, இடையில் சற்று சறுக்கல் இருந்தாலும், ஏறுமுகத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரத்தை, மோடியின் டிமானிடைசேஷனும், ஜிஎஸ்டி குளறுபடிகளும் ஒரேயடியாக சாய்த்துள்ளது. மூன்றே வருடங்களில் இந்தியப் பொருளாதாரத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதைச் சுட்டிக்காட்டி அரசின் திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர், முன்னாள் நிதி அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா என்பது முக்கியமானதாகும்.

இவரைப் போன்றவர்கள் ஏன் இதுவரைக்கும் வாய் திறக்க வில்லை என்ற கேள்வியும் எழுகிறது. அசுர பலத்துடன் பாராளுமன்றத்திற்குள் நுழைந்த மோடி, கட்சியில் உள்ள தலைவர்களை ஒரங்கட்டி வாயை அடைத்து வைத்து விட்டார் என்பது தான் நிதர்சனம். அத்வானிக்கு ஏற்பட்ட நிலை தெரியாதா? அவர் குடியரசுத் தலைவராகக் கூட ஆகிவிடக் கூடாது என்று பழைய வழக்கை தூசி தட்டியது இதே அரசு தானே!

ஒரு சறுக்கல் வரும் போது தான் உட்கட்சியில் எதிர்ப்புக் குரல்கள் துணிச்சலாக ஒலிக்கும். பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து, அமித்ஷா மகன் நிறுவனத்தின் முறைகேடுகளால், உட்கட்சி எதிர்ப்புக் குரல்கள் மேலும் அதிகரித்துள்ளன.

அத்வானியின் விசுவாசிகள் அனைவரும் மோடிக்கு எதிராக வெளிவருவார்கள் என நம்பலாம். அடுத்த தேர்தலில் ஆட்சியை விட்டுக் கொடுத்து, கட்சியைக் கைப்பற்றுவதற்கான வியூகம் அது. மோடி – அமித்ஷா கூட்டணியால் பழிவாங்கப்பட்டவர்கள் ஓரணியில் திரள்வது கண்கூடாகத் தெரிகிறது.

குஜராத்தை கைப்பற்ற சூறாவளிப் பயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. அங்கு மோடி கூட்டத்திலிருந்து மக்கள் வெளியேறினார்கள் என்ற செய்தி வந்தது. டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய தேர்தலுக்கும் இன்னும் தேதி அறிவிக்கப்பட வில்லை. தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி ஏதும் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று விட்டால், ராகுல் காந்திக்கு ஏறுமுகம் தான். மோடியின் நாட்களும் எண்ணப்பட்டு விடும்.

– ஸ்கார்ப்பியன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!