Rajinikanth's speech on 5th day of fans meet

காலா படத்துக்குப் பிறகு எல்லாம் ஆண்டவன் கையில் இருக்கிறது! – ரஜினிகாந்த்

சென்னை: ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் 5வது நாளாக இன்று ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் மத்திய சென்னை, வடசென்னை மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.

அதற்குமுன் ரசிகர்கள் மத்தியில் அவர் பேசும்பொழுது, “1960களில் மெட்ராஸ் பற்றி கர்நாடகாவில் பெருமையாக பேசி கொள்வார்கள். 1973ல் முதன்முறையாக சென்னைக்கு வந்தேன். எனக்குள் இருந்த நடிப்பு திறமையை கண்டுபிடித்தவன் எனது நண்பன் ராஜ்பகதூர். சென்னை எனக்கு எப்பொழுதுமே மெட்ராஸ்தான்.

73-ல் நான் சென்னைக்கு வந்தேன். பிலிம் இன்ஸ்டிட்யூட்ல் பாலச்சந்தர் சாரை சந்தித்தேன். அவர் என்னை நடித்துக் காட்டச் சொன்னார். நான் கன்னடத்தில் பேசி நடித்தேன். கொஞ்சநேரம் என்னை அப்படியே பார்த்தார். பின்னர் நீ தமிழை கற்று கொள் உன்னை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்கிறேன் என்றார். வளர்ப்பு மகனை போன்று என்னை வளர்த்தவர் இயக்குநர் பாலசந்தர்.

இயக்குநர்கள் சுரேஷ் கிருஷ்ணா, மணிரத்னம் போன்றோர் என்னை சூப்பர் ஸ்டார் ஆக்கினார்கள்.

இந்தியாவே என்னை திரும்ப பார்க்க வைத்தவர் இயக்குநர் ஷங்கர். என்னுடைய கலை வாழ்க்கை 2.Oவில் வந்து நிற்கிறது. சிஜி பணிகள் முடியாததால் ஜனவரியில் வெளியாக வேண்டிய அந்தப் படம் ஏப்ரல் 14ந்தேதிக்கு படம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

காலா படத்தில் வித்தியாசமான ரஜினிகாந்தை காண்பித்துள்ளார் இயக்குநர் ரஞ்சித். அதன்பிறகு என்ன என்பது ஆண்டவன் கையில் இருக்கிறது.

எனது உயிரை மீட்டு கொண்டு வந்தது ரசிகர்களின் பிரார்த்தனைதான். ரசிகர்களின் அன்புக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

சிங்கப்பூரில் நான் சிகிச்சை பெற்றபொழுது ரசிகர்கள் செய்த பிரார்த்தனையால் மீண்டு வந்தேன். தலைவா, நீ சினிமா, அரசியலுக்கு வர வேண்டாம். உயிரோடு வந்தாலே போதும் என சிகிச்சையின்பொழுது ரசிகர் ஒருவர் கடிதம் எழுதினார்.

எல்லாவற்றுக்கும் கனவே அடிப்படை. அதனை நியாயமான முறையில் நேர்மையாக அடைய முயற்சிக்க வேண்டும். கனவில் உள்ள சந்தோஷம் நனவில் இருக்காது. முதலில் உங்கள் குடும்பத்தினர் உங்களை மதிக்க வேண்டும், அடுத்து சுற்றத்தார் மதிக்க வேண்டும். பிறகு சமூகத்தில் மரியாதை தானாகவே வரும்,” என்றார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!