இன்னுமொரு சுதந்திரப் போர்... உங்கள் பங்கும் முக்கியம்! - மீடியாக்களுக்கு ரஜினி வேண்டுகோள் - VanakamIndia

இன்னுமொரு சுதந்திரப் போர்… உங்கள் பங்கும் முக்கியம்! – மீடியாக்களுக்கு ரஜினி வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் இன்னுமொரு சுதந்திரப் போர் நடக்கவிருக்கிறது. இதில் உங்கள் பங்களிப்பும் முக்கியம் என்று ரஜினிகாந்த் மீடியாக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கி பெரிய மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். ஆனால் ரஜினிகாந்த் தொடர்ந்து அமைதி காத்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மாவட்ட வாரியாக ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு நாளும், அரசியல் தொடர்பாக சில கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். தனது அரசியல் முடிவை 31-ந் தேதி அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, 31-ந் தேதி ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்றும், தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகம் மூட்டியது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேல் உள்ளதால் அவரது அரசியல் நடவடிக்கை எவ்வாறு இருக்கும்? என்றெல்லாம் அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், புத்தாண்டு காலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து, ரஜினிகாந்த் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவர்களுக்கு, மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் நேற்று மாலை ரசிகர்கள் உடனான தனது தொடர்பை மேலும் நெருக்கமாக்கும் வகையில் www.rajinimandram.org என்ற பிரத்தியேக புதிய இணையதள பக்கம் மற்றும் செயலியை ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தியுள்ளார்.

முன்னதாக தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில், உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகத்துடன் ‘பாபா’ முத்திரையுடன் தன்னுடைய வீடியோ காட்சியை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ஒரு நிமிடம் 14 வினாடிகள் ஓடக்கூடியதாக உள்ளது. வீடியோவில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டுவர தான் இந்த இணையதளத்தை உருவாக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை அரசியல் செய்தியாளர்களுடன் திடீர் சந்திப்பு நிகழ்த்தினார். அப்போது பேட்டியளித்த ரஜினிகாந்த், “உண்மையான, நேர்மையான, நாணயமான அரசியலே மதச்சார்பற்ற அறவழி அரசியலே ஆன்மிக அரசியல்,” என விளக்கம் அளித்தார். மேலும் ஆன்மிகம் ஆத்மாவுடன் தொடர்புடையது என்றும் அவர் கூறினார்.

பின்னர் பத்திரிகையாளர்கள் உடனான பிரத்யேக சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

அரசியல் குறித்த அறிவிப்பை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி. ஊடகங்களை எவ்வாறு கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. தவறு ஏதும் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

நானும் இரண்டு மாதங்கள் பத்திரிக்கை துறையில் பிழை திருத்தும் ஆசிரியராக பணி செய்துள்ளேன். நான் முதன் முதலில் பொம்மை பத்திரிக்கைக்குதான் பேட்டி அளித்தேன். நம் எல்லோருக்கும் ஒரு கடமை உள்ளது. என்னுடைய அரசியல் வருகைக்கு பத்திரிக்கையாளர்களின் உதவி தேவை.

கட்சி கொடி தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கட்சிகொடியை அறிமுகம் செய்யும் போது பத்திரிகையாளர்கள் சந்திப்பு இருக்கும்.

மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் தமிழகத்திலிருந்துதான் தொடங்குகின்றன. சுதந்திரப் போராட்டம் கூட இங்கிருந்துதான் தொடங்கியது. இப்போது நான் தொடங்கியிருப்பதும் ஒருவித சுதந்திரப் போர்தான். இதில் உங்கள் அனைவருக்கும் பங்கிருக்கிறது. அனைவரது பங்கும் முக்கியம்,” என்றார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!