ஏப்ரலில் ரஜினிகாந்தின் 2.ஓ ரிலீஸ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - VanakamIndia

ஏப்ரலில் ரஜினிகாந்தின் 2.ஓ ரிலீஸ்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படம் 2.0 எந்திரன் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரூ.450 கோடி செலவில் இந்த படம் தயாராகி உள்ளது.

இதன் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது. கடந்த தீபாவளிக்கு 2.0 படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொழில் நுட்ப பணிகள் முடியாததால் வரவில்லை. ஜனவரி மாதம் 26-ந்தேதி குடியரசு தினத்தன்று 2.0 படம் திரைக்கு வரும் என்று பட நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு இருந்தனர்.

தற்போது மீண்டும் படம் திரைக்கு வருவது தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து 2.0 படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அதிக பொருட் செலவில் தயாராகி உள்ள படம் 2.0. அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஷங்கர் இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 3டி தொழில் நுட்பத்தில் அதிரடி திகில் படமாக தயாராகி உள்ளது.

இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரைக்கு வரும். படத்துக்கான இறுதி கட்ட தொழில் நுட்ப பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது”.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கிராபிக்ஸ் பணிகள் முடிய தாமதமாவதால் படத்தை ஜனவரியில் வெளியிடாமல் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. 2.0 படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகி உள்ளது. உலகம் முழுவதும் மேலும் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடுகின்றனர்.

இந்த படத்துக்கான டி.வி. உரிமை ரூ.110 கோடிக்கு விலை போனது. வேறு எந்த இந்திய படமும் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்படவில்லை. சமீபத்தில் இதன் இணையதள உரிமையும் பெரிய தொகைக்கு விற்கப்பட்டது. 2.0 படத்தின் பாடல் வெளியீட்டு விழா துபாயில் நடத்தப்பட்டது. டிரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இந்த மாதம் இறுதியில் டிரைய்லர் வெளியாகலாம் என்று தெரிகிறது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!